ஜுலியும் 4 பேரும் - விமர்சனம்

08 Apr 2017
குறும் படங்கள் மூலம் அனுபவம் பெற்ற சிலர் சினிமாவுக்கு வந்து வெற்றி பெற்றதும், அதைப் பார்த்து பலரும் திரைப்படங்களை இயக்க வந்துவிட்டனர். உதவி இயக்குனர்களாக பத்து வருடங்களுக்கும் மேலாக, பத்து படங்கள் வரை பணி புரிந்தவர்களுக்கு படங்களை இயக்க வாய்ப்பு கிடைப்பதில்லை. ஆனாலும், எப்படியோ பணம் திரட்டி தங்களைத் தாங்களே இயக்குனர்களாகவும், நடிகர்களாகவும் அறிமுகப்படுத்திக் கொண்டவர்கள் கடந்த சில வருடங்களில் அதிகரித்து வருகின்றனர். அப்படி வந்தவர்களில் இப்படத்தின் இயக்குனர் சதீஷும் ஒருவர். தானே இயக்கி, நாயகர்களில் ஒருவராக நடித்து இப்படத்தை உருவாக்கியுள்ளார். காதில் மூன்று ஸ்டார் இருக்கும் அதிசய நாயை 1 கோடி ரூபாய் கொடுத்து வாங்குகிறார் சென்னை தொழிலதிபர் ஒருவர். அதே சமயம் நண்பர்களான சதீஷ், அமுதவாணன், யோகானந்த் வேலை தேடி சென்னைக்கு வருகிறார்கள். வேலைக்காக பணம் கொடுத்து ஏமாந்த இவர்களுக்கு சென்னையில் ஆட்டோ ஓட்டும் ஜார்ஜ் விஜய் அடைக்கலம் கொடுக்கிறார். ஒரு நாள் இரவில் காணாமல் போன அந்த நாயைத் தேடிக் கொடுக்கிறார் அமுதவாணன். மறுநாள் அந்த அதிர்ஷ்ட நாயை நண்பர்கள் அனைவரும் சேர்ந்து கடத்துகிறார்கள். அதே சமயம் அந்த நாயை மற்றொரு கும்பலும் கடத்த முயற்சிக்கிறது. அமுதவாணன் நண்பர்களிடமிருந்து அந்த நாயை அந்த கும்பல் கடத்தி விடுகிறது. அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை. அமுதவாணன், சதீஷ், யோகானந்த், ஜார்ஜ் விஜய் ஆகிய நால்வர்தான் படத்தின் நாயகர்கள். நடிப்பதற்கு பெரிய வேலை இல்லை என்றாலும் முடிந்தவரை தங்களது நடிப்பால் சிரிக்க வைக்க முயற்சிக்கிறார்கள். படத்தின் நாயகியாக அலியா மானசா, அடிக்கடி சிரிப்பதைத் தவிர இவருக்கும் நடிக்க பெரிய வாய்ப்பில்லை. கோடி ரூபாய் மதிப்புள்ள நாய், அதைக் கடத்த முயற்சிப்பவர்கள், நகைச்சுவையில் சிறந்த நடிகர்கள் என ரசிக்க வைக்க பல விஷயங்கள் இருந்தும் கோட்டைவிட்டு விட்டார் இயக்குனர் சதீஷ்.

Share via: