வடம் - விமர்சனம்
06 Mar 2026
தமிழ் சினிமாவில் ஜல்லிக்கட்டு போன்ற பாரம்பரிய விளையாட்டுகளை மையமாகக் கொண்ட படங்கள் அவ்வப்போது வந்தாலும், வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை பின்னணியாகக் கொண்டு வந்துள்ள படம்தான் இந்த ‘வடம்’. ஒரு வட்டத்திற்குள் ஒரு காளையை கயிற்றில் (வடம்) கட்டி வைத்து, அதை வீரர்கள் அடக்குவதுதான் வடமஞ்சுவிரட்டு.
கேந்திரன்.வி இயக்கத்தில் வெளியான இந்தத் திரைப்படம், மாடுகள் மீதான பாசம், பகைமை, காதல் ஆகியவற்றை கலந்து கமர்ஷியல் அம்சங்களுடன் சொல்கிறது. நடிகர்களின் உணர்ச்சிமயமான நடிப்பும், போட்டிக் காட்சிகளின் விறுவிறுப்பும் படத்தின் பலம் என்றாலும், சில இடங்களில் வழக்கமான கதைப்போக்கு தெரிவது சிறு குறைபாடு. ஒட்டுமொத்தமாக, கிராமிய சூழல் தேடுபவர்களுக்கு ஏற்ற பொழுதுபோக்கு இது.
ஊரின் செல்வாக்கு மிக்கவரான நரேன், இறைச்சிக்கு அனுப்பப்படும் மாடுகளை மீட்டு தனது சொந்த பசு பண்ணையில் வளர்த்து பராமரிக்கிறார். அவரது மகன் விமலும், தந்தையைப் போலவே மாடுகளிடம் அன்பு செலுத்துபவராக உள்ளார். அவ்வாறு இறைச்சிக்கு செல்லும் உடல் ஊனமுற்ற கன்று ஒன்றை, பண்ணையில் விடாமல் தனது இல்லத்தில் வைத்து கவனித்து வளர்க்கும் விமல், அதற்கு பயிற்சி அளித்து மஞ்சுவிரட்டு போட்டிக்கான வலிமையான காளையாக மாற்றி, பல ஆண்டுகளாக யாராலும் வெல்ல முடியாத காளை என்ற புகழுடன் அழைக்கிறார்.
இதனிடையே, விமலின் காளை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதோடு, விமலும் ஒரு கொலை வழக்கில் ஜாமீன் பெறுகிறார். அப்போது அவரை நீதிமன்ற வளாகத்தில் ஒரு கூட்டம் கொலை செய்ய முயல்கிறது. மறுபுறம், விமலின் வீட்டில் வேலை செய்த ஒருவர் அவரை அழிக்க திட்டமிடுகிறார். இவ்வாறு பலருடன் விரோதம் வளர்த்திருப்பதால் தனது மகிழ்ச்சியான வாழ்வை மறந்து துயரத்தில் வாடும் விமல், இழந்த மகிழ்வை நாயகி சனஷ்கா ஸ்ரீ-யின் காதல் மூலம் மீண்டும் பெறுகிறார்.
காதலால் உள்ளத்தில் உருவான உற்சாகம், மீண்டும் மஞ்சுவிரட்டு அரங்கில் இறங்கத் தயாராகும் தனது காளையின் உடல்நிலை மேம்பாட்டால் மனதில் தோன்றிய நம்பிக்கை, இவற்றால் தனது வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு செல்ல முடிவு செய்யும் விமலுக்கு, அவரது காதலி சனஷ்கா ஸ்ரீ பெரும் அதிர்ச்சி அளிக்கிறார். அது என்ன? அந்த அதிர்ச்சியிலிருந்தும், தனக்கு எதிரான விரோதங்களிலிருந்தும் விமல் தப்பினாரா? அவரது காளை மீண்டும் மஞ்சுவிரட்டு அரங்கில் வெற்றி பெற்றதா? என்பதை வணிக ரீதியாக விவரிப்பது தான் 'வடம்'.
ஜல்லிக்கட்டு போட்டிகளை மையமாகக் கொண்டும், அதை பின்னணியாகக் கொண்டும் பல தமிழ் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஆனால், முதன்முறையாக வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை பின்னணியாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. அதற்கும் ஜல்லிக்கட்டுக்கு இடையேயான வேறுபாடுகள் குறித்து படத்தில் விரிவாகக் கூறாவிட்டாலும், அதைச் சார்ந்த மக்களின் பெருமிதமும் விரோதமும் ஆழமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது இயக்குநர் கேந்திரன்.வி-யால்.
வெற்றிவேல் என்ற பாத்திரத்தில் மாடுகளிடம் அன்பு செலுத்துபவராகவும், காளை மாடுகளை மஞ்சுவிரட்டு போட்டிக்கு தயார்ப்படுத்துபவராகவும் தோன்றும் விமல், வழக்கம்போல் உறுதியாகவும் அசைக்க முடியாதவராகவும் நடித்துள்ளார். பொதுவாக நாயகர்கள் காளைகளை வெல்லும் வீரர்களாக நடித்து காட்டுவது வழக்கம். ஆனால், விமல் யாருக்கும் அடங்காத காளையின் உரிமையாளராக தோன்றி தனித்தன்மை காட்டியுள்ளார்.
நாயகியாக தோன்றும் சனஷ்கா ஸ்ரீ, பார்க்கும் போதே ஈர்க்கும் அழகுடன் வலம் வருகிறார். அழகில் ஆபத்து இருக்கும் என்பதை உணர்த்தும் வகையில் அவர் காட்டும் வீர வடிவம் அச்சமூட்டுகிறது. இருப்பினும், அந்த அச்சத்தை ஒரு காட்சியுடன் நிறுத்திவிடுவதும், அவருக்கு அதிக காட்சிகள் இல்லாததும் பார்வையாளர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது.
காளைகளையும் மஞ்சுவிரட்டு போட்டியையும் மரியாதையாகவும் பெருமையாகவும் கருதும் நட்டி நட்ராஜ், வெற்றி மட்டுமே வாழ்வு, போட்டியாளர்கள் இருக்கக் கூடாது என்ற மனநிலையில் வாழும் மனிதர்களை பிரதிபலிக்கும் பாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார்.
நகைச்சுவை நடிகராக தோன்றி வந்த முனீஷ்காந்த், பல படங்களில் சில குணச்சித்திர வேடங்களில் கவனம் ஈர்த்தாலும், இதில் மிக முதன்மையான பாத்திரத்தில் தோன்றியுள்ளார். அவரது இயல்பான மற்றும் திறமையான நடிப்பு அவரது பாத்திரத்துக்கு மட்டுமின்றி, திரைக்கதைக்கு பெரும் வலிமை சேர்த்துள்ளது. இந்தப் படத்துக்காக முனீஷ்காந்துக்கு சிறந்த குணச்சித்திர நடிகர் பரிசு கிடைப்பது நிச்சயம்.
விமலின் தந்தையாக தோன்றும் நரேன், கொஞ்சம் பெரிய மீசை வைத்தால், நடிப்பிலும் அதை அதிகப்படுத்தி நடித்து விடுவார். இந்தப் படத்திலும் அவருக்கு கொஞ்சம் பெரிய மீசை வைக்கப்பட்டதால் அவர் நடிப்பை அதிகம் வெளிப்படுத்தியுள்ளார்.
விமலின் தாயாக தோன்றும் இந்துமதி, அத்தையாக நடித்த தீபா சங்கர், உறவினராக தோன்றும் பால சரவணன், விரோதியாக நடித்த மதுசூதனன் ராவ் போன்றோர் மற்ற பாத்திரங்களில் தோன்றி, தென் மாவட்ட மக்களை தங்களது நடிப்பால் துல்லியமாக காட்டியுள்ளனர்.
ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ்.குமார், மஞ்சுவிரட்டு போட்டி அரங்கையும் போட்டியையும் உண்மையான வடிவில் படம்பிடித்துள்ளார். படத்தில் காட்டப்படும் இடங்கள் பல படங்களில் பலமுறை பார்த்தவை என்பதால் ஒளிப்பதிவில் தனித்துவம் இல்லை. அதேநேரம், நாயகன், நாயகியை அழகுறவும் ஒளிர்வாகவும் காட்டியவர், படத்தின் செலவுகளை தனது கேமரா வழியாக திரையில் வெளிப்படுத்தியுள்ளார்.
தனது பழைய இசைக்கோர்வைகளின் தன்மை இருந்தாலும், மீண்டும் கேட்க வைக்கும் பாடல்களை அளித்து படத்துக்கு வலுவூட்டும் திறன் கொண்ட டி.இமான், இந்தப் படத்தில் அத்தகைய திறமையை காட்டத் தவறியுள்ளார். பின்னணி இசை சராசரி.
மஞ்சுவிரட்டு போட்டியை மையமாகக் கொண்ட கதை என்றாலும், அதில் தென் மாவட்ட மக்களின் பெருமிதமும் விரோதமும் தூக்கலாக இருப்பது, ஏற்கனவே வெளியான பல படங்களை நினைவூட்டி விடும் என்பதால், சாபு ஜோசப்.வி.ஜெ, தனது எடிட்டிங் மூலம் புதிய கோணத்தில் கதை சொல்லி, அதன் வழியாக படத்தை பல திருப்பங்களுடன் நகர்த்தியுள்ளார்.
எழுத்தும் இயக்கமும் செய்த கேந்திரன்.வி, தமிழ் திரையுலகில் அதிகம் விவாதிக்கப்படாத வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை பின்னணியாகக் கொண்டு உருவாக்கிய திரைக்கதையில் வணிக அம்சங்கள் அனைத்தும் நிரம்பியுள்ளன. இருப்பினும், மஞ்சுவிரட்டு போட்டியின் விதிகள் உள்ளிட்ட பலவற்றை விரிவாக விவரிக்கவில்லை. அதற்கான நேரம் இல்லை என்பதால், நாயகனைச் சுற்றியுள்ள விரோத நாடகத்தை சுவாரசியமாக விவரிக்க முயன்று, அதில் வெற்றியும் அடைந்துள்ளார்.
இயக்குநர் கேந்திரன்.வி-யின் முந்தைய படங்களுடன் இதை ஒப்பிடும் போது இயக்குநராக அவர் பல அடிகள் முன்னேறியிருப்பது தெரிகிறது, ஆனால் திரைக்கதையில் எந்தவித புதிய உத்தியையும் பயன்படுத்தாமல், ஏற்கனவே பார்த்த ஒரு தமிழ் படத்தை நினைவூட்டியுள்ளார். இருப்பினும், தான் விவரிக்க விரும்பியதை அனைத்து தரப்பினரும் ரசிக்கும் பொழுதுபோக்கு திரைப்படமாக அளித்ததில் இயக்குநர் கேந்திரன்.வி
Tags: vadam, vimal, natty
