டூரிஸ்ட் பேமிலி – விமர்சனம்
30 Apr 2025
அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், ஷான் ரோல்டன் இசையமைப்பில், சசிகுமார், சிம்ரன், யோகிபாபு மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
இலங்கைத் தமிழர் பற்றிய படங்கள் தமிழ் சினிமாவில் வருவது மிகவும் அபூர்வம். ஒரு சில படங்கள்தான் தமிழ் சினிமாவில் வந்துள்ளன. கமல்ஹாசன் நடித்து வெளிவந்த ‘தெனாலி’ படத்தின் தாக்கத்தில் இந்தப் படத்தை இயக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார் இயக்குனர் அபிஷன்.
யாரிடமும் உதவியாளராக இல்லாமல் அவர் இயக்கியிருக்கும் படம் என்பதற்கு தனிப்பட்ட பாராட்டுக்கள். மேலும், தமிழுணர்வுடன் அவர் எடுத்துக் கொண்டுள்ள கதை, கதாபாத்திரங்கள் மற்றும் வசனங்களுக்கு கூடுதல் பாராட்டுக்கள். எதிர்பார்க்காத கிளைமாக்ஸ், உணர்வுபூர்வமாக அமைந்து நமக்கும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது.
கணவன் மனைவியான சசிகுமார், சிம்ரன் தம்பதி தங்களது இளம் வயது மகன் மிதுன், சிறு வயது மகன் கமலேஷ் ஆகியோருடன் இலங்கையிலிருந்து வெளியேறி, ராமேஸ்வரம் வந்து சென்னையில் செட்டிலாகிறார்கள். சிம்ரனின் அண்ணன் யோகிபாபு அவர்களுக்கு போலி ஆதார், வாக்காளர் அடையாள அட்டை வாங்கி சென்னை வேளச்சேரி பகுதியில் கேசவ நகரில் தங்க வைக்கிறார். தங்களை இலங்கை அகதி என்று சொல்லாமல், கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்று சொல்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அந்த நகர் மக்களின் மனதில் இடம் பிடிக்கிறார்கள் சசிகுமார் குடும்பத்தினர்.
இதனிடையே, அவர்கள் ராமேஸ்வரம் வந்த நாளில் அங்கு நிகழ்ந்த குண்டு வெடிப்புக்கு சசிகுமார் குடும்பம்தான் காரணம் என போலீசார் அவர்களைத் தேட ஆரம்பிக்கிறார்கள். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
தன்னுடைய இமேஜ் பற்றி எந்த கவலையும் படாமல் கல்லூரி முடித்த ஒரு மகனுக்கு அப்பாவாக நடுத்தர வயது கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சசிகுமார். ‘அயோத்தி’ படம் போன்று இந்தப் படமும் தனக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தரும் என்ற எதிர்பார்ப்பு அவரது நடிப்பில் உள்ளது. அவருடைய வழக்கமான பாணி ஒரு பக்கம் இருந்தாலும், எமோஷனல் காட்சிகளில் நம்மை உருகவும் வைத்துள்ளார் சசிகுமார்.
சசிகுமார் மனைவியாக சிம்ரன். இருபது வருடங்களுக்கு முன்பு தனது நடனத்தால் அந்தக் கால இளைஞர்களைக் கிறங்க வைத்த சிம்ரனா இது என ஆச்சரியப்பட வைக்கிறார். அம்மா கதாபாத்திரம் என்றாலும் அழுத்தமான கதாபாத்திரம். கணவனுக்கும், மகன்களுக்கும் இடையிலான அந்த பாசப் பிணைப்பை சரியாக பேலன்ஸ் செய்கிறது அவரது நடிப்பு.
யோகி பாபு ஆரம்பத்தில் வந்து கொஞ்சம் சிரிக்க வைத்துவிட்டு, பின் காணாமல் போய், கடைசியில் வந்து சேர்ந்து கொள்கிறார். மூத்த மகனாக நடித்திருக்கும் மிதுன் ஜெய், இலங்கையில் தான் காதலித்த பெண்ணை விட்டுப் பிரிந்த சோகத்தில் இருப்பவர். அதற்காக அப்பா சசி மீது கோபத்தில் இருக்கிறார். மகனின் இளம் வயதில் ஒரு அப்பாவுக்கும், மகனுக்கும் எந்த மாதிரியான ஒரு புரிதல் இருக்கும் என்பதை அழுத்தமாய் பதிய வைத்திருக்கிறார் இயக்குனர். சிறு வயது மகனாக நடித்திருக்கும் கமலேஷ் தனது சுட்டித்தனத்தால் அசத்தியுள்ளார்.
அந்த நகரில் வசிக்கும் மக்களாக எம்எஸ் பாஸ்கர், பக்ஸ், குமரவேல், ஸ்ரீஜா ரவி, படத்தின் இயக்குனர் அபிஷன் ஆகியோர் கொஞ்ச நேரமே வந்தாலும் அவர்கள் கதாபாத்திரங்கள் அழுத்தமாய் அமைந்துள்ளன. போலீஸ் ஏட்டாக நடித்திருக்கம் ரமேஷ் திலக் கதாபாத்திரம் படத்தின் முக்கியமான கதாபாத்திரம். காதல் தோல்வியடைந்த மிதுனைக் காதலிக்கும் பக்ஸ் மகள் யோகலட்சுமியும் ‘வடிவாய்’ நடித்துள்ளார்.
ஷான் ரோல்டன் இசை கதையம்சமுள்ள படங்களில் அவருடைய இசையையும் உணர்வுபூர்வமாய் கொடுக்கும். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு அந்த நகரையும், நகர் மக்களையும் இயல்பாய் பதிவு செய்துள்ளது.
ஆனாலும், படம் பார்க்கும் உணர்வு, சமயங்களில் ‘டிராமா’ பார்க்கிறோமோ என்ற உணர்வை ஏற்படுத்துகிறது. மலையாளப் படங்களில் உள்ள ஒரு யதார்த்தத்தை படத்தில் பதிவு செய்ய இயக்குனர் முயற்சித்திருந்தால் இந்தப் படம் இன்னும் வேறு விதமாய் அமைந்திருக்கும். நீள, நீளமான காட்சிகள், அதில் நடித்தே ஆக வேண்டும் என நடிகர்கள் நடிக்க முயற்சிப்பது படத்தை பின்னோக்கி இழுக்கிறது.
இருப்பினும், ‘அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்’ கடைசியில் கண்ணீர்த் துளிகளாய்….
Tags: tourist family, sasikumar, simran