தொடரி - விமர்சனம்
25 Sep 2016
தமிழ்த் திரையுலகில் காதல் படங்களில் கூட சில விஷயங்களை மட்டும்தான் செய்ய முடியும் என்ற எல்லை இயக்குனர்களின் கற்பனைக்கும் இருந்தது. அதற்குக் காரணம் படத்தின் பட்ஜெட்டும், அதைத் தொடர்ந்த வசூலும்தான் காரணமா இருந்தது.
காதல் படங்களை இப்படிப்பட்ட பின்னணியிலும் கொடுக்க முடியும் என ‘மைனா’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகத்தைத் தன் பக்கம் திரும்ப வைத்தவர் இயக்குனர் பிரபு சாலமன்.
இப்போது ‘தொடரி’ படத்தில் ரயிலை மையமாக வைத்து இரு உள்ளங்களின் தைரியமான காதலைக் கொடுத்து ரசிக்க வைத்துள்ளார்.
டெல்லியிலிருந்து சென்னை செல்லும் ரயிலில் உணவுப் பொருட்களை விற்கும் விற்பனையாளர் ஆக இருக்கிறார் தனுஷ். அதே ரயிலில் பயணிக்கும் நடிகை ஒருவரின் உதவியாளரான கீர்த்தி சுரேஷைப் பார்த்ததும் காதல் கொள்கிறார்.
கொஞ்சம் கொஞ்சமாக இருவரும் காதலில் விழுவதற்குள் ரயில் பயணத்தில் ஒரு திடுக் திருப்பம் ஏற்படுகிறது. ஒரு சில பிரச்சனைகளால் ரயிலின் ஓட்டுனர் வண்டி ஓட்டும் போதே இறந்துவிட, உதவி டிரைவரும் இல்லாத நிலையில் அந்த ரயில் தானாகவே 150 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது.
ரயிலில் பயணிக்கும் 700க்கும் மேற்பட்ட பயணிகளின் நிலை என்ன ?, காதலில் விழுந்த காதலர்களின் நிலை என்ன என்பதை தொடரும் திக் திக் திருப்பங்களுடன் விறுவிறுப்பான படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் பிரபு சாலமன்.
வழக்கம் போலவே தனக்கு மிகவும் பொருத்தமான ஒரு கதாபாத்திரத்தைத் தேர்வு செய்து, அதில் சிறப்பாக நடித்து அனைவரையும் ரசிக்க வைக்கிறார் தனுஷ். ஒரு பக்கம் காதலி, மற்றொரு பக்கம் தன்னை எதிர்க்கும் பாதுகாப்பு அதிகாரி, ரயிலையும் காப்பாற்ற வேண்டிய ஒரு சூழல் என அத்தனை தளங்களிலும் தனியாளாக இந்த ‘தொடரி’யைத் தாங்கிப் பிடிக்கிறார்.
கீர்த்தி சுரேஷ் அதிகமாக மலையாளம் பேசி நடித்தாலும் அவரின் குட்டிக் குட்டி சேஷ்டைகள் ரசிக்க வைக்கின்றன. பெண்கள் பேசும் வார்த்தைகளுக்கு மொழியா முக்கியம்..அந்தக் கண்களும், காதலும் போதாதா..?.
இவர்களது இருவரது காதலைத் தவிர படத்தில் மேலும் சில கிளைக் கதைகள், கதாபாத்திரங்கள்.
தம்பி ராமையா இல்லாத பிரபு சாலமன் படமா இந்தப் படத்திலும் இருக்கிறார். ஆனால், இந்தப் படத்தில் அவருடைய அலட்டல் கொஞ்சம் ஓவர்தான். கவிதை சொல்லியே கலங்க வைக்கிறார் கருணாகரன்.
தனுஷைப் பார்த்தாலே பிடிக்காமல் வெறுப்பை உமிழும் ஹரிஷ் உத்தமன். ரயிலில் பயணிக்கும் மத்திய மந்திரி ராதாரவி, அவருடைய உதவியாளர் அறந்தை ராஜகோபால் இன்றைய அரசியல் நடிப்புகளைப் புட்டுப்புட்டு வைக்கிறார்கள்.
அந்த நடிகையின் குண்டான அம்மா, 700 உயிர்களைக் காப்பாற்றத் துடிக்கும் கணேஷ் வெங்கட்ராமன், டிஆர்எம் வெங்கடேஷ், ரயில்வே அதிகாரி சின்னி ஜெயந்த், தொலைக்காட்சியில் வெட்டி விவாதம் செய்யும், ஞானசம்பந்தன், அனுமோகன், பட்டிமன்றம் ராஜா என சின்னச் சின்னக் கதாபாத்திரங்கள் கூட தங்களது இருப்பை பதிவு செய்கிறார்கள்.
தமிழில் இப்படியும் ஒரு படத்தை உருவாக்க முடியுமா என கதை யோசிக்க வைக்கிறது. காட்சிப்படுத்திய விதத்தில் ‘க்ரீன்மேட், சிஜி’ வேலைகளில் இன்னும் அதிக கவனம் செலுத்தியிருக்கலாம். சில காட்சிகள் அதையும் மீறி ரசிக்க வைக்கின்றன. சில காட்சிகள் சினிமாத்தனமாக மட்டுமே இருக்கின்றன. முழுமையாக கவனம் செலுத்தியிருந்தால் டெக்னிக்கலாகவும் பிரமாதமான படமாக அமைந்திருக்கும்.
இமானின் இசையில் வழக்கம் போல் ‘உசிரு...’ பாடல் உருக வைக்கும் காதல் பாடலாக அமைந்துள்ளது. மகேந்திரனின் ஒளிப்பதிவும், தாஸின் படத் தொகுப்பும் இயக்குனரின் இரண்டு கைகள்.
தொடரி - தொட முடியாத பிரம்மாண்டத்தைத் தொட்டு ரசிக்க வைத்திருக்கிறார்கள்.