தமிழ் சினிமா என்றாலே தமிழ்நாட்டை மையப்படுத்திதான் திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. தமிழர்கள் வசிக்கும் பல்வேறு நாடுகளைக் கதைக்களங்களாகக் கொண்ட படங்கள் மிக மிக அபூர்வமாய் தான் வருகின்றன.

பல வருடங்களாக தமிழ் சினிமாவை ரசித்து கொண்டாடிய ஈழத் தமிழ் மக்களைப் பற்றிய படங்கள் எப்போதோ ஒரு முறைதான் வருகின்றன. அம்மக்களின் பிரச்சினைகளைப் பேசிய படங்களைப் பார்ப்பதும் அரிதாகவே உள்ளன.

இந்த ‘ஆறாம் நிலம்’ படம் அப்படியான ஒரு குறையைத் தீர்த்து வைக்கும் ஒரு படமாக வந்துள்ளது மகிழ்ச்சிதான் என்றாலும் படத்தில் எடுத்துக் கொண்டு கதைக் கரு நம்மை நெகிழ வைத்து கலங்க வைத்திருக்கிறது.

இலங்கையில் 2009ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பிறகு பல போராளிகள் இலங்கை ராணுவத்திடம் சரண் அடைந்தனர். அப்படி சரணடைந்தவர்கள் பலரும் காணாமல் போனவர்கள் என்று பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். அப்படி காணாமல் போன தனது கணவரை பல ஆண்டுகளாக தேடி வருகிறார் நவயுகா. அப்பா எப்போது வருவார் என பள்ளிக்குச் செல்லும் சிறுமியான தமிழரசி அம்மாவிடமும், பாட்டியிடமும் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இவர்கள் மூவரைச் சுற்றியே கதை நகர்கிறது. அரசாங்க கிராம அதிகாரி ஒருவர் நவயுகாவிடம் காணாமல் போன அவரது கணவரைக் கண்டுபிடித்துத் தருவதாகச் சொல்லி அவரிடம் தவறாக நடக்க முயற்சிக்கிறார். இப்படியான ஏமாற்றங்களுடன் நவயுகா தனது கணவரைக் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் உணர்வு பூர்வமான படத்தின் மொத்த கதை.

கதைக்களமும், ஆபத்து இருந்தாலும், நிலங்களில் புதைக்கப்பட்ட, கண்ணி வெடிகளை அகற்ற இளைஞர்களும், இளைஞிகளும் சேவையில் இறங்கி செய்வதும் நம்மை கண் கலங்க வைத்துவிடும். இன்றைய வாழ்க்கைச் சூழல் அங்குள்ள தமிழர்களுக்கு எப்படி இருக்கிறது என்ற நிலையை யதார்த்தமாய் எடுத்துக் காட்டியிருக்கிறார் இயக்குனர் ஆனந்த ரமணன்.

நவயுகா, தமிழரசி, அந்த பாட்டி மூவரைச் சுற்றியே அதிகம் நகரும் கதை. மூவருமே இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள் என்று சொல்வதை விட அந்தக் கதாபாத்திரங்களாகவே மாறிவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். மூன்று தலைமுறையின் ஏக்கங்களும், அவர்களது உணர்வுகளும் அந்தக் கதாபாத்திரங்களின் ஊடாக படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் நெகிழ வைக்கும்.

நவயுகாவின் குழுத் தலைவராக நடித்திருப்பவர், கால்களை இழந்த அந்த கடைக்காரர், கிராம அதிகாரி என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களும் இயல்பாய் நடித்திருக்கிறார்கள்.

இந்த மாதிரியான வாழ்வியல் படங்களுக்கு சினிமாத்தனமான பூச்சுகள் அவசியமில்லை. உள்ளதை உள்ளபடி காட்டும் யதார்த்தம்தான் தேவை. அதை தொழில்நுட்பக் குழுவினர் அருமையாகச் செய்திருக்கிறார்கள். வசனங்கள் பலவும் தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு உடனே புரியாது என்றாலும் அவற்றில் உள்ள வலிகள் நன்றாகப் புரியும்.

தமிழ்நாட்டில் உள்ள சில சினிமா இயக்குனர்கள் ஈழத்தைப் பற்றி தப்பும் தவறுமாக சில படங்களைக் கொடுத்து இலங்கைத் தமிழ் மக்களை வருத்தப்பட வைத்திருக்கிறார்கள்.

இந்த ‘ஆறாம் நிலம்’ போன்று மேலும் சில படங்கள் வந்தால் அம்மக்களுக்கும் நல்லதொரு எதிர்காலம் அமைய வாய்ப்பிருக்கிறது.

The Sixth Land (ஆறாம் நிலம்) - Teaser