சிலுக்குவார்பட்டி சிங்கம் - விமர்சனம்
22 Dec 2018
அறிமுக இயக்குனர் செல்லா, பி அன்ட் சி ரசிகர்களை மையமாக வைத்து இந்த நகைச்சுவைப் படத்தைக் கொடுத்திருக்கிறார். ஒரு தாதா கதையை நகைச்சுவை கலந்த படமாக உருவாக்கியிருக்கிறார்.
சிலுக்குவார்பட்டி ஊரில் போலீஸ் கான்ஸ்டபிளாக இருக்கும் விஷ்ணு விஷால் பயந்த சுபாவம் உள்ளவர். ஸ்டேஷனில் உள்ளவர்களுக்கு காபி, டீ, டிபன் வாங்கிக் கொடுக்கும் வேலையை மட்டும் சரியாகச் செய்வார். அப்படிப்பட்டவர் சென்னை போலீசாரால் தேடப்படும் தாதாவான ரவிசங்கரை யார் எனத் தெரியாமலேயே பிடித்து அவருடைய காவல் நிலையத்தில் அடைத்து வைக்கிறார். ரவிசங்கரை அவருடைய அடியாட்காள் சிறையிலிருந்து மீட்டுச் செல்ல, தன்னை அடைத்து, அடித்த விஷ்ணு விஷாலை கொலை செய்வேன் என மிரட்டுகிறார் ரவிசங்கர். அவரிடமிருந்து தப்பித்து தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறார் விஷ்ணு விஷால். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கதாநாயகன்’ படங்களுக்குப் பிறகு விஷ்ணு விஷால் இந்தப் படத்திலும் நகைச்சுவை நாயகனாக நடித்திருக்கிறார். இவருக்கும் நகைச்சுவை உணர்வு சரளமாக வருகிறது. அதிலும் பயந்த போலீசாக யதார்த்தமாக நடித்திருக்கிறார். எதற்கும் பயப்படுபவர், முட்டை ஆப்பாயிலை யாராவது தட்டிவிட்டால் மட்டும் வீறு கொண்டு எழுகிறார். இவருக்கும் கருணாகரனுக்குமான காமெடி ஜோடி இந்தப் படத்திலும் நன்றாகவே பொருந்துகிறது.
பள்ளி ஆசிரியை கதாபாத்திரத்தில் ரெஜினா. கிராமத்து ஆசிரியை என்றாலே இப்படித்தான் இருப்பார்கள் என்ற இலக்கணத்தை மீறி பளிச்சென ஒரு நாயகியை அந்தக் கதாபாத்திரத்தில் நடித்து வைக்கிறார். கிளாமரில் கொஞ்சம் கலக்கமடைய வைத்தாலும், ரெஜினா ஒரு அழகுடன் வலம் வருகிறார்.
வில்லனாக ரவிசங்கர். சென்னையில் போலீசுக்கே தண்ணி காட்டுபவர், சிலுக்குவார்பட்டி வந்து ஒரு அப்பாவி போலீசிடம் சிக்கிக் கொள்கிறார். காமெடியில் கருணாகரன் வசனங்கள் மூலம் அதிகம் சிரிக்க வைக்கிறார்.
லியோன் ஜேம்ஸ் இசையில் பாடல்கள் இன்னும் கொஞ்சம் ரசிக்கும்படி இருந்திருக்கலாம்.
பெரிய திருப்புமுனையான கதை எல்லாம் இல்லை. சாதாரணமாக இருந்தாலும் முடிந்தவரை நகைச்சுவைக் காட்சிகளைச் சேர்த்து ரசிக்க வைத்திருக்கிறார்கள்.
சிலுக்குவார்பட்டி சிங்கம் - சிரிப்பு சிங்கம்