ரிவால்வர் ரீட்டா - விமர்சனம்

28 Nov 2025
தமிழ் சினிமாவில் கீர்த்தி சுரேஷ் போன்ற திறமையான நடிகையை காமெடி ஜானரில் பார்க்கும் வாய்ப்பு அரிது. 'ரிவால்வர் ரீட்டா' படம், அவரை ஒரு துணிச்சலான ரீட்டாவாகக் காட்டி, பிளாக் காமெடி உலகில் அழைத்துச் செல்கிறது.
 
ஜெ.கே.சந்துரு இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ள இந்தப் படம், ஒரு தற்செயலான இறப்பைச் சுற்றி நடக்கும் குழப்பங்களை நகைச்சுவையுடன் சொல்ல முயல்கிறது. ராதிகா, சுனில், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடிப்பில், பிணம் ஒன்றை மையமாகக் கொண்டு பயணிக்கும் கதை, பார்வையாளர்களை சிரிக்க வைக்கும் என எதிர்பார்க்கலாம். ஆனால், இந்த முயற்சி எந்த அளவு வெற்றி பெறுகிறது என்பதைப் பார்ப்போம்.

பாண்டிச்சேரியின் பிரபல ரவுடி சூப்பர் சுப்பராயன், தவறுதலாக கீர்த்தி சுரேஷின் வீட்டுக்குள் நுழைந்து விடுகிறார். அவரை வெளியேற்றும் போராட்டத்தில் அவர் கீழே விழுந்து உயிரிழக்க, அந்தப் பிணத்தைச் சுற்றி ஒரு பெரிய குழப்பம் தொடங்குகிறது. சூப்பராயனின் மகன் சுனில், தந்தையைத் தேடி அடியாட்களுடன் வர, மறுபுறம் அந்த உடலைப் பயன்படுத்தி ரூ.5 கோடி இன்சூரன்ஸ் பணம் பெற சிலர் திட்டமிடுகிறார்கள். இதற்கிடையே, கீர்த்தி சுரேஷின் குடும்பம் உடலை அப்புறப்படுத்த முயல, அவரால் ஏற்கனவே பாதிக்கப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான் விஜய் பழிவாங்கத் துடிக்கிறார். இப்படி பிணத்தைத் துரத்தும் கூட்டம், கீர்த்தியைத் துரத்தும் போலீஸ், ரவுடி குடும்பத்தின் தேடல் என அனைத்தும் ஒரே இடத்தில் சந்திக்க, இது கீர்த்தி குடும்பத்துக்கு சாதகமா அல்லது பாதகமா என்பதை பிளாக் காமெடி ஸ்டைலில் சொல்லியிருக்கிறார்கள்.

தேசிய விருது வென்ற கீர்த்தி சுரேஷ், இந்த முறை காமெடி அவதாரம் எடுத்திருக்கிறார். அவரது இளமை, அழகு மற்றும் அளவான நடிப்பு ரீட்டாவை ஈர்க்க வைக்கிறது. பல காட்சிகளில் அவர் சிரிக்க வைத்தாலும், சில இடங்களில் அது சற்று தடுமாறுகிறது. அவரது அம்மாவாக வரும் ராதிகா, தனது அனுபவமிக்க நடிப்பால் அனைவரையும் ஓரங்கட்டி விடுகிறார். கீர்த்திக்கே சில இடங்களில் போட்டி போடுகிறார்.

தெலுங்கு நடிகர் சுனில், புதிய லுக்கில் வருகிறார். ஆனால் நடிப்பில் பெரிய மாற்றம் இல்லை. அவரது தம்பியாக ரெடின் கிங்ஸ்லி, தனது வழக்கமான மேனரிசம் மற்றும் வசன உச்சரிப்பால் ஆரம்பத்தில் சிரிக்க வைக்கிறார், ஆனால் படம் முழுக்க அதையே தொடர்வது சலிப்பைத் தருகிறது. அஜய் கோஸ் வில்லனாக இல்லாமல் நகைச்சுவைக்கு மாறி சிரிக்க வைக்க முயல்கிறார். ஜான் விஜய் கதாபாத்திரம் சற்று குழப்பமாக இருந்தாலும், அவர் காட்சிகளை கடத்துகிறார்.

கல்யாண் மாஸ்டர், சுரேஷ் சக்கரவர்த்தி, கதிரவன், செண்ட்ராயன், அகஸ்டின், அக்‌ஷதா அஜித், காயத்ரி ஷான், குஹாசினி, பிளேட் சேகர், ராமச்சந்திரன் போன்றோர் மற்ற வேடங்களில் நடித்துள்ளனர். பெரும்பாலானோர் நகைச்சுவைக்காகவே முயற்சித்திருக்கிறார்கள், சிலர் வெற்றி பெறுகிறார்கள்.

ஷான் ரோல்டனின் இசை, பாடல்களும் பின்னணியும் கமர்ஷியல் டச்சுடன் பொருந்துகிறது. ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணா.பி, காட்சிகளை வண்ணமயமாகவும் பிரம்மாண்டமாகவும் படமாக்கியிருக்கிறார். படத்தொகுப்பாளர் பிரவீன்.கே.எல்-ன் வேலை சிறப்பு.

இயக்குநர் ஜெ.கே.சந்துரு, பழக்கமான கதையை வித்தியாசமான கோணத்தில் சொல்ல முயன்றிருக்கிறார். முதல் பாதி சற்று மெதுவாக இருந்தாலும், இரண்டாம் பாதியில் ராதிகா போன்ற காட்சிகள் சிரிப்பை வரவழைக்கின்றன. பிளாக் காமெடி என எதிர்பார்த்தால் சற்று ஏமாற்றமே, ஏனெனில் கீர்த்தியின் பிளாக் உடை போலவே காமெடியும் சில இடங்களில் மட்டுமே ஒளிர்கிறது. ஒட்டுமொத்தமாக, லைட் ஹார்ட் காமெடி ரசிகர்களுக்கு ஒரு ஓகே படம்.

Tags: revolver rita, keerthy suresh

Share via: