ரெட் லேபில் - விமர்சனம்

06 Feb 2026

கே.ஆர்.வினோத் இயக்கத்தில் வெளியான 'ரெட் லேபில்' திரைப்படம், கல்லூரி சூழலை பின்னணியாகக் கொண்ட ஒரு கிரைம் திரில்லர் கதையை சுவாரஸ்யமாக வழங்குகிறது.

புதுமுக நடிகர்களை மையமாக வைத்து, குறைந்த பட்ஜெட்டில் உருவாகியிருந்தாலும், எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை மூலம் பார்வையாளர்களை கட்டிப்போடும் வகையில் அமைந்துள்ளது. இப்படம், கல்லூரி அரசியல், காதல் மற்றும் மர்ம கொலை போன்ற கூறுகளை இணைத்து, ஒரு பரபரப்பான அனுபவத்தை தருகிறது.

கல்லூரி நாட்களில் சண்டை சச்சரவுகள், காவல்துறை வழக்குகள் என இருந்த கதாநாயகன் லெனின், படிப்பு முடிந்த பிறகு அனைத்தையும் துறந்து, வியாபாரம் மற்றும் காதல் என அமைதியான வாழ்க்கையை தேர்ந்தெடுக்கிறார். ஆனால், மீண்டும் தனது பழைய கல்லூரியில் மாணவர் தலைவர் தேர்தலுக்காக இழுக்கப்படும் சூழலில், அமைதியான வழியில் செல்ல விரும்பும் அவர், திடீரென கல்லூரி வளாகத்தில் ஒரு கொலையைச் செய்து விடுகிறார். ஏற்கனவே சில குற்றப் பின்னணி இருப்பதால், இந்த கொலை வழக்கில் சிக்கினால் வாழ்க்கை சீரழிந்துவிடும் என்பதால், தனது காதலியான அந்த கல்லூரி மாணவியின் உதவியுடன் ஒரு தந்திரமான திட்டத்தை அமைக்கிறார்.

இதற்கு நடுவில், கொலையானவரைத் தேடி காவல்துறை கல்லூரிக்கு வருவதோடு, அவரது கூட்டாளிகளும் தேடலைத் தொடங்குகின்றனர். இந்த அனைவரையும் ஏமாற்றி, லெனின் தனது திட்டத்தை வெற்றியுடன் நிறைவேற்றினாரா? அவர் யாரை, ஏன் கொலை செய்தா ர்? என்பதை உற்சாகமாக விவரிப்பதே 'ரெட் லேபில்' படத்தின் கதை.

கதாநாயகனாக நடித்த லெனின், புதியவராக இருந்தாலும் அது தெரியாத அளவு சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார். கல்லூரி மாணவர் காலம் மற்றும் படிப்பு முடிந்த பிறகு என இரு கட்டங்களிலும் தோற்றம் மற்றும் உணர்ச்சிகளில் வித்தியாசத்தை காட்ட முயற்சித்திருப்பது திரையில் பளிச்சிடுகிறது.

சரியான அளவிலான நடிப்பால் கல்லூரி மாணவி கதாபாத்திரத்தில் இயல்பாக நடித்துள்ளார். திரைக்கதையில் முக்கிய இடம் பெற்று, இறுதியில் ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்து விடுகிறார்.

நகைச்சுவை கலந்த வில்லனாக நடித்திருக்கும் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், தனது திரைப்பிரசன்னத்தால் படத்திற்கு பெரும் வலிமை சேர்த்துள்ளார்.

முனீஷ்காந்த், அனுமோகன் போன்றோர் வரும் காட்சிகள் குறைவாக இருந்தாலும், படத்தின் அடையாளமாக மாறியுள்ளனர்.

ஒரே இடத்தில் கதை நடந்தாலும், பல்வேறு கோணங்களில் காட்சிகளைப் படம்பிடித்து விறுவிறுப்பை அதிகரித்துள்ளார் ஒளிப்பதிவாளர் சதீஷ் மெய்யப்பன். கைலாஷ் மேனின் இசையமைப்பில் பாடல்களும், பின்னணி இசையும் கதையின் போக்குக்கு ஏற்றவாறு சென்றுள்ளது. எடிட்டர் லாரன்ஸ் கிஷோர், அனைத்து அம்சங்களையும் சமநிலையில் வைத்து, படத்தை வேகமாகவும் உற்சாகமாகவும் நகர்த்தியுள்ளார்.

கல்லூரி வாழ்க்கை மற்றும் காதல் சூழலை அடிப்படையாகக் கொண்டு, குற்றம் மற்றும் சஸ்பென்ஸ் திரில்லர் கதையை அழகாக எழுதியுள்ளார் பொன்.பார்த்திபன். பல்வேறு திருப்புமுனைகளால் இறுதி வரை ஆர்வம் குறையாமல் திரைக்கதையை வடிவமைத்துள்ளார்.

குறைந்த பட்ஜெட்டில் புதியவர்களை வைத்து, எங்கும் சோர்வு இல்லாமல் படத்தை இயக்கியுள்ள இயக்குநர் கே.ஆர்.வினோத், கொலை வழக்கிலிருந்து தப்பிக்கும் திட்டம் தொடர்பான காட்சிகளை பதற்றமாக பார்க்க வைத்துள்ளார்.

ஒரே கல்லூரி சூழலில் கதை அமைந்தாலும், காட்சி அமைப்புகள் மூலம் வெவ்வேறு பார்வையில் படத்தை நகர்த்தியுள்ள இயக்குநர் கே.ஆர்.வினோத், எதிர்பாராத திருப்பங்கள் மூலம் இரண்டாம் பகுதியை முழுமையாக சுவாரஸ்யமாக்கி, பார்வையாளர்களுக்கு ஒரு நிறைவான சினிமா அனுபவத்தை வழங்குகிறார்.

Tags: red label

Share via: