ரஜினி கேங் - விமர்சனம்

28 Nov 2025
தமிழ் சினிமாவில் காமெடி ஜானரை மையமாகக் கொண்டு, காதல், திருப்பங்கள் என கலந்து கொடுக்கும் படைப்புகள் அவ்வப்போது வருவது வழக்கம். அந்த வரிசையில் 'ரஜினி கேங்' திரைப்படம், அறிமுக இயக்குநர் எம்.எஸ். ரமேஷ் பாரதி இயக்கத்தில், புதுமுக நடிகர்கள் ரஜினி கிஷன், த்விவிகா உள்ளிட்டோரை வைத்து உருவாகியுள்ளது. நகைச்சுவை நடிகர்களின் கூட்டணியுடன் தொடங்கும் இந்தப் படம், ஒரு சாலைப் பயணத்தை அடிப்படையாகக் கொண்டு, எதிர்பாராத திருப்பங்களால் பார்வையாளர்களை ஈர்க்க முயல்கிறது. ஆனால், காமெடி என்ற பெயரில் வரும் சில காட்சிகள் சலிப்பைத் தரும் வகையில் இருந்தாலும், இளம் ரசிகர்களுக்கு லேசான பொழுதுபோக்காக அமையும் இது, குடும்பத்துடன் பார்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

காதலர்களான ரஜினி கிஷனும் த்விவிகாவும் ஊரை விட்டு ஓடி திருமணம் செய்ய முயல்கின்றனர். வழியில் முனீஷ்காந்த் அவர்களுக்கு காரில் லிப்ட் கொடுக்க, திருடன் கல்கியும் சேர்ந்துகொள்கிறார். இரவு நேரப் பயணத்தில் அவர்கள் ஒரு அந்நிய இடத்திற்கு சென்று விட, பல்வேறு தரப்பினர் வெவ்வேறு காரணங்களுக்காக அவர்களைத் தேடத் தொடங்குகின்றனர்.

இதற்கிடையே, ரஜினி கிஷன் - த்விவிகா திருமணம் நடக்கிறது. திருமணத்திற்குப் பிறகு காமெடி ஜானரில் சென்ற படம், திடீரென வேறொரு ஜானருக்கு மாறுகிறது. அது என்ன ஜானர்? அதன் வழியே இயக்குநர் சொல்ல விரும்பிய கருத்தை சரியாக வெளிப்படுத்தினாரா இல்லையா? – இவை படத்தின் மீதமுள்ள கதை.

அறிமுக நடிகர் ரஜினி கிஷன், காமெடி படத்திற்கு ஏற்ற முகத்துடன், ஆட்டம், காதல், நகைச்சுவை என அனைத்திலும் அசால்ட்டாக நடித்துள்ளார். முதல் படம் என்ற பயம் இல்லாமல் சிறப்பாக பயணித்திருக்கிறார்.

த்விவிகா, நாயகியாக காமெடி மற்றும் காதல் பாடல்களில் கவர்ச்சியாகத் தோன்றுகிறார். நடிப்பும் அளவானது.

முனீஷ்காந்த், ஒரே மாதிரியான ரியாக்ஷன்களால் சலிப்பை ஏற்படுத்துகிறார். கூல் சுரேஷின் அலறல் காட்சிகள் காதைப் பிரிக்கும் வகையில் உள்ளன. மொட்ட ராஜேந்திரன், கல்கி போன்றோரின் காட்சிகளிலும் நகைச்சுவை குறைவே.

எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபெர்ட்டின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் கமர்ஷியலாக ஈர்க்கின்றன.

ஒளிப்பதிவாளர் என்.எஸ். சதீஷ் குமார், படத்தையும் பாடல் காட்சிகளையும் வண்ணமயமாகப் படம்பிடித்துள்ளார்.

எடிட்டர் ஆர்.கே. வினோத் கண்ணா, சாதாரண கதையை சாதாரணமாகத் தொகுத்திருந்தாலும், காட்சிகளின் நீளத்தை குறைத்திருக்கலாம்.

இயக்குநர் எம்.எஸ். ரமேஷ் பாரதி, நகைச்சுவைக்கு முழு முக்கியத்துவம் கொடுத்து, லாஜிக் இல்லாத காட்சிகளை உருவாக்கியுள்ளார். காமெடி நடிகர்களை நம்பியிருப்பதால், எழுத்தில் கவனம் குறைந்துள்ளது.

நகைச்சுவை எழுத்தில் இன்னும் மெனக்கெட்டிருந்தால், 'ரஜினி கேங்' வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கும். ஆனால், இப்போது லேசான சிரிப்புக்கு போதுமானது – காமெடி ரசிகர்களுக்கு ஒரு டைம் பாஸ் படம்!

Tags: rajini gang

Share via: