பூக்கி - விமர்சனம்

13 Feb 2026

சமூக வலைதளங்களான டிக்டாக் போன்றவற்றில் அன்பர்களை அழைக்கும் அழகிய சொல்லாக பிரபலமடைந்த 'பூக்கி' என்ற வார்த்தை, காதலர்களிடையே வேகமாக பரவி, அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வலுவான வெளிப்பாடாக மாறியது. இத்தகைய பூக்கி காதல் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தத் திரைப்படம், இளமைத் துடிப்புடன் காதல் பிரிவின் வலியை சித்தரிக்கிறது.

 

நவீன இளைஞர்களின் வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் வகையில், கலகலப்பான திருப்பங்களுடன் கூடிய இந்தப் படம், காதல் உணர்ச்சி எந்தக் காலத்திலும் மாறாதது என்பதை வலியுறுத்துகிறது. இயக்குநர் கணேஷ் சந்திராவின் முயற்சியில் உருவான இப்படம், காதல் தோல்வியின் ஆழத்தை ஜாலியான பாணியில் ஆராய்கிறது.

டிக்டாக் உள்ளிட்ட சமூக ஊடகங்களின் வழியாக அன்பர்களை அழைக்கும் ஒரு சொல்லாக பிரபலமான ‘பூக்கி’ காதலர்களிடையே காட்டுத்தீ போல பரவியதோடு, ஒருவருக்கொருவர் உணர்வுகளை வெளிப்படுத்தும் உறுதியான வார்த்தையாகவும் மாறியது. அத்தகைய பூக்கி காதல் ஜோடியான நாயகன் அஜய் திஷன், நாயகி ஆர்.கே.தனுஷா, தங்களுக்கு இடையே உருவாகும் சிறிய கருத்து வேறுபாட்டால் பிரிந்து விடுகிறார்கள்.

காதலர்கள் பிரிந்தாலும், அவர்களால் பிரிவை ஏற்க முடியாமல் துன்புறுகிறார்கள். தங்களது காதல் பிரிவு துயரத்தில் இருந்து விடுபடுவதற்காக இருவரும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். ஆனால், அது தோல்வியில் முடிய, காதல் பிரிவு வேதனைக்கு மருந்து மற்றொரு காதல் தான், என்ற மனநிலைக்கு வருகிறார்கள். அதன்படி, இருவரும் வெவ்வேறு உறவுகளை நோக்கி பயணிக்க, அந்த உறவு அவர்களது காதல் பிரிவு வேதனைக்கு முடிவு வைத்ததா? இல்லையா?, என்பதை இளமை பொங்க பொங்க சொல்வது தான் ‘பூக்கி’.

காதல் பிரிவு மற்றும் அதை எதிர்கொள்ளும் தற்கால இளைஞர்களின் வாழ்வியலை, உற்சாகமாக சொல்லியிருப்பதோடு, எந்த காலகட்டத்திலும் காதல் உணர்ச்சி மாறாது, என்பதையும் உறுதியாக பதிவு செய்ய இயக்குநர் கணேஷ் சந்திரா முயன்றிருக்கிறார்.

நாயகனாக நடித்திருக்கும் அஜய் திஷன், உத்வேகமிக்க நடிப்பால் ஈர்க்கிறார். காதல் பிரிவு வேதனையை சமாளிக்க முடியாமல் துன்புறுவது, அதில் இருந்து விடுபட வேறு துறைகளில் சென்று, அதனால் பாதிக்கப்படுவது, என்று படம் முழுவதும் பல உணர்ச்சிகளை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி தனது பாத்திரத்திற்கு நீதி செய்திருக்கிறார். பல உணர்ச்சிமயமான காட்சிகளில் சீரான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். குறிப்பாக, தன் தந்தை பற்றி காதலியின் தந்தை இழிவாக பேசும் காட்சி, அப்பாவின் ஆசையை நிறைவேற்றி அவர் முகத்தில் சந்தோஷத்தை காணும் காட்சி ஆகியவற்றை குறிப்பிடலாம். அவரது குரல் கம்பீரமாக உள்ளது. அனைத்து பாத்திரங்களுக்கும் சரியாக பொருந்தும் ஒரு நடிகர் என்பதை நிரூபித்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் ஆர்.கே.தனுஷா, எளிய அழகுடன் ஈர்க்கிறார். ஹீரோவுக்கு இணையாக நடிப்பில் சிறந்தவர் நடனத்திலும் சிறக்கிறார். வலுவான காட்சிகளில் மிக இயல்பாக நடித்து, யாருப்பா இந்த பெண்?, என்று ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்.

பாண்டியராஜன், சுனில், லக்‌ஷ்மி மஞ்சு, இந்துமதி மணிகண்டன், ஆதித்யா கதிர், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, பிக் பாஸ் சத்யா, எம்.ஜெ.ஸ்ரீராம், ராதா, அஷ்வின் ராம், ஷியாரா சர்மி, பிரியங்கா ஆகியோர் தங்களது பணியை குறைவின்றி செய்திருக்கிறார்கள்.

இசையுடன் படத்தொகுப்பு பணியையும் சேர்த்து கவனித்திருக்கும் விஜய் ஆண்டனி, இரண்டிலும் அதிக கவனம் செலுத்தியிருக்கலாம். காதல் உணர்ச்சிகளை உருக்கும் ஒரு கதைக்கு பாடல்கள் எந்த அளவுக்கு அவசியம் என்பதை விஜய் ஆண்டனி மறந்து இசையமைத்திருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. படத்தொகுப்பாளராக முதல் பாதி படத்தை பல கலவரங்களோடு நகர்த்தி செல்லும் விஜய் ஆண்டனி, இரண்டாம் பாதி படத்தை தெளிவாக சொல்லி பார்வையாளர்களை கதையுடன் இணைத்து விடுகிறார்.

புதிய பரிதியின் கதை, திரைக்கதை மற்றும் வசனம் காதல் பிரிவின் வேதனையை உல்லாசமாக சொன்னாலும், இறுதியில் காதல் வேதனையின் ஆழத்தை பார்வையாளர்கள் உணரும் விதத்தில் சொல்லி விடுகிறது. காதல் தோல்வி தரும் வேதனைக்கு மருந்து மற்றொரு வேதனையா அல்லது காதலா என்பதை, தற்கால இளைஞர்கள் தொடர்புபடுத்தும் விதத்தில் புதிய பரிதியின் எழுத்து இருந்தாலும், அதற்கான காட்சிகளில் புதியத்தன்மை இல்லாதது படத்தை பலவீனப்படுத்துகிறது.

ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கும் கணேஷ் சந்திரா, காதல் கதையாக இல்லாமல் காதல் பிரிவு கதையை, நவீன இளைஞர்களின் உலகின் பின்னணியில் சொல்ல முயன்றிருக்கிறார். அதற்காக அவர் எடுத்த வேகம் படத்தை தொய்வின்றி நகர்த்தினாலும், சுவாரசியம் இல்லாத திருப்பங்கள் படத்திற்கு ஸ்பிட் பிரேக்கராக உள்ளது.

Tags: pookie, vijay antony

Share via: