பகிரி - விமர்சனம்

18 Sep 2016
விவசாயத்தின் பெருமையை இந்த உலகிற்கு உணர்த்தும் படங்களை ஆதரியுங்கள் ரசிகர்களே.... நம் நாட்டின் முதுகெலும்பான விவசாயத் தொழில் நலிந்து போனால், அதன் பின் நாம் பசி, பஞ்சம் என பரிதவிக்க வேண்டும். விவசாயத்தை உயர்த்தாமல் நம் நாடும் உயராது, நாமும் உயர மாட்டோம். நமது இளைஞர்களின் எண்ணங்களும், திறமைகளும் விவசாயம் பக்கம் திரும்பினால் நம் நாட்டின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. எதை, எதையோ பிரச்சனை என்று சொல்லி வரும் படங்களுக்கு மத்தியில் இந்த நாட்டின் உண்மையான பிரச்சனையான விவசாயம் பற்றி இந்தப் படத்தை அக்கறையுடன் கொடுத்ததற்காகவே இயக்குனர் இசக்கி கார்வண்ணனை மனதாராப் பாராட்டலாம். விவசாயப் படிப்பு படித்து விட்டு அப்பா செய்யும் விவசாயத்தைச் செய்யாமல் ‘நாஸ்மாக்’கில் ஊற்றிக் கொடுக்கும் வேலைக்குச் சேர்கிறார் பிரபு ரணவீரன். முதலில் பாரில் வேலைக்குச் சேர்பவர், எப்படியாவது 5 லட்ச ரூபாய் லஞ்சம் கொடுத்து நிரந்தரப் பணியில் வேலைக்குச் சேர்ந்து விட வேண்டும் என்று நினைக்கிறார். அங்கு ஏன் வேலைக்குப் போக வேண்டும் என்பதற்கு ஒரு நியாயம் வேறு சொல்கிறார். குடும்பத்தினர் அனைவருமே பிரபுவிடம் கோபித்துக் கொள்கிறார்கள். ஒரு சந்தர்ப்பத்தில் நாயகி ஷர்வியாவைச் சந்திப்பவர், அவர் மீது காதல் கொள்கிறார். பிரபு எங்கு வேலை செய்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ளும் ஷர்வியா அதற்கு முதலில் எதிர்ப்பு தெரிவிக்க, கடைசியில் அவரையும் ‘கன்வின்ஸ்’ செய்து காதலிக்க ஆரம்பித்து விடுகிறார். அவருக்கு ‘நாஸ்மாக்’கிலும் வேலை கிடைத்து வருகிறது. ஆனால், அவருக்கு எதிராக ஷர்வியா அப்பா வெங்கடேசன், வில்லன் ரவி மரியா எதிராக செயல்படுகிறார்கள். அந்த எதிர்ப்புகளைச் சமாளித்து அவர் ‘நாஸ்மாக்’ கடை திறந்தாரா, குடும்பத்தினரது கோபத்தையும் சமாதானம் செய்தாரா என்பதுதான் படத்தின் மீதிக் கதை. சென்சாருக்காக ‘டாஸ்மாக்’ என்பதை ‘நாஸ்மாக்’ என்று வைத்திருக்கிறார்கள். படத்தின் பெரும்பாலான காட்சிகள் ‘குடி குடியைக் கெடுக்கும்’ காட்சிகளாக இருந்தாலும், கிளைமாக்சில் அனைத்திற்கும் சேர்த்து பெயரைத் தட்டிக் கொள்கிறார் இயக்குனர். பிரபு ரணவீரன் புதுமுக நாயகன் மாதிரியே தெரியவில்லை. ‘நாஸ்மாக்’ கில் வேலை செய்யும் தன் லட்சியத்தில் அவ்வளவு உறுதியாக இருக்கிறார். இன்றைய இளம் ஹீரோக்களின் நடிப்புக்குத் தேவையான காதலும், நகைச்சுவையும் இவருக்கு நன்றாகவே வருகிறது. ஷர்வியா, தன்னுடைய அந்த அழகான அந்த இரண்டு ‘முட்டை’ கண்களாலேயே அனைத்து விதமான நடிப்பையும் வெளிப்படுத்தி விடுகிறார். எப்போதும் துடிப்பாகவே நடிக்கும் ஜோதிகா, ஜெனிலியா வரிசையில் ஷர்வியாவையும் சேர்த்துக் கொள்ளலாம். துடிப்பான நாயகிகளைத் தேடும் இயக்குனர்கள் ஷர்வியாவைத் தாராளமாகத் தேர்வு செய்யலாம். ‘அங்காடித் தெரு’ படத்திற்குப் பிறகு இயக்குனர் வெங்கடேஷ் இந்தப் படத்தில் குடிகார அப்பாவாக முத்திரை பதிக்கிறார், இவருக்கு நகைச்சுவையும் தாராளமாக வருகிறது. வழக்கம் போல் நகைச்சுவை வில்லனாக தன் பங்கை சரியாகச் செய்திருக்கிறார் ரவி மரியா. யாருமே தொடத் தயங்கும் ஒரு களத்தை எடுத்துக் கொண்டு அதை எந்தவிதமான சுளிப்பும் வர வைக்காமல், யதாரத்தமான ஒரு படத்தைக் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் இசக்கி. ‘பகிரி’ - தாராளமாகப் பார்க்கலாம்...

Share via:

Movies Released On March 15