நூறு சாமி - விமர்சனம்
20 Jun 2026
அம்மாவின் மறுமணத்தை நடத்த முயற்சிக்கும் மகன்கள்....
சொல்லாமலே, பூ, பிச்சைக்காரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய சசி, யாரும் தொடத் தயங்கும் ஒரு கதையை, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம். கணவரைப் பறி கொடுத்தவர் செல்வி. அவருக்கு இரண்டு மகன்கள். அவர்களை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்பதே அவரது ஆசை. பல வேலைகளைச் செய்து மகன்களை இஞ்சினியரிங் படிக்க வைக்கிறார்.
ஒரு கட்டத்தில் எதிர்கால வாழ்க்கைக்கு மறுமணம் செய்து கொள்ள விரும்புகிறார். ஆனால், மகன்கள் எதிர்ப்பு தெரிவிக்க அதை அப்படியே விட்டுவிடுகிறார். சில வருடங்களுக்குப் பிறகு மகன்கள் இருவரும் அம்மாவுக்கு மறுமணம் செய்து வைக்க நினைக்கிறார்கள். ஆனால், இப்போதோ அம்மா எதிர்ப்பு தெரிவிக்கிறார். மகன்களின் பலத்த முயற்சிக்குப் பிறகு அம்மா ஒரு வழியாக சம்மதிக்கிறார்.
ஆனால், ஊரார் அதற்கு கடும் எதிர்ப்புகளைத் தெரிவிக்கிறார்கள். அம்மா செல்வியின் மறுமணம் நடந்ததா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
ஒரு உண்மைச் சம்பவத்தை அதன் பாணியிலேயே படமாக்கி இருக்கிறார் இயக்குனர் சசி. சினிமாத் தனமான திரைக்கதை படத்தில் இல்லை. படத்தின் ஆரம்பம் முதல் கிளைமாக்ஸ் முன்பாக வரை ஒரு கிராமத்தில் உள்ள குடும்பத்தை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார்.
அவ்வளவு நேரம் யதார்த்தத்தைப் பதிவு செய்த இயக்குனர் கிளைமாக்ஸில் மட்டும் சினிமாத்தனமான காட்சிகளை வைத்து ஆரம்பத்தில் இருந்து வரும் அந்த ‘எமோஷனை’க் குறைத்துவிடுகிறார்.
கிராமத்து விதவை அம்மா செல்வி கதாபாத்திரத்தில் ஸ்வாசிகா. ‘லப்பர் பந்து’ படத்தில் நாயகன் அட்டகத்தி தினேஷின் மனைவியாக நடித்தவர். இந்தப் படத்தில் மிகக் கனமான, கடினமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவ்வளவு பொருத்தமாக, அவ்வளவு யதார்த்தமாக இருக்கிறது அவரது நடிப்பு. கணவனை இழந்த பெண்கள், ஊரில் உள்ள சபலம் பிடித்த ஆண்களுக்கு மத்தியில் வாழ்வதில் என்ன பிரச்சனை உள்ளது என்பதை இவரது கதாபாத்திரம் மூலம் அழுத்தமாய் பதிய வைக்கிறார் இயக்குனர்.
விஜய் ஆண்டனியை சந்தித்த பின்பு அவரிடம் காணப்படும் அந்த மாற்றம் அவ்வளவு இயல்பு. மெச்சூர்டான நடிப்பை படம் முழுவதும் வெளிப்படுத்தி இருக்கிறார் ஸ்வாசிகா. ஒரு தேசிய விருது வாங்குவதற்குரிய அத்தனை அம்சமும் நிறைந்த ஒரு நடிப்பு.
ஸ்வாசிகாவின் மூத்த மகனாக அஜய் திஷன், இளைய மகனாக சக்தி. இருவருமே அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவாய் நடித்திருக்கிறார்கள். மூத்த மகனுக்கே உரிய பொறுப்பு, இளைய மகனுக்குரிய துடிப்பு என இருவரது கதாபாத்திரமும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
கிராமத்து அப்பா ஏழுமலை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விஜய் ஆண்டனி. இடைவேளைக்குப் பின்புதான் படத்தில் வருகிறார். ஒரு சில காட்சிகளில் மட்டும்தான் அவருக்கான காட்சிகள். அவற்றில் குறிப்பாக விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா இடையிலான அந்த சந்திப்புக் காட்சிதான் படத்தின் ஹைலைட்டி. இருவருமே அந்த சந்திப்பில் இருக்கும் அந்தக் காதல் இந்த சினிமாவில் இதற்கு முன்பு எந்த ஒரு படத்திலும் இடம் பெற்றதில்லை. அவ்வளவு மனப்பக்குவமான காட்சியும், இருவரும் நடிப்பும் அப்படியான ஒரு வசீகரமாக அமைந்துள்ளது.
ஊரின் பெரிய மனிதராக பாலாஜி சக்திவேல், ஸ்வாசிகாவின் அண்ணனாக கருணாஸ், அஜய் ஜோடியாக காவ்யா அனில், சக்தி ஜோடியாக பாடினி குமார், ஆகியோர் குறைவான காட்சிகளில் வந்தாலும் நிறைவாய் நடித்திருக்கிறார்கள்.
பாலாஜி ஸ்ரீராம் இசையில் ‘அம்மா அம்மாதான்‘, ‘மாயக் கனவோ’ பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையிலும் முதல் பாட இசையமைப்பாளர் போல தெரியாமல் முத்திரை பதிக்கிறார். தர்ஷன் கிர்லோஷ் ஒளிப்பதிவில் கிராமம் கிராமமாய் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அம்மா, மகன்களுக்கு இடையேயான பாசமும், நேசமும், சண்டைகளுமாக நகர்கிறது படம். பெரிய சிக்கல், திருப்பம் என வழக்கமான சினிமாவாக இல்லாமல் காட்சிகள் கடந்து போகிறது. கிளைமாக்ஸில் மட்டும் ஒரு சஸ்பென்ஸை வைத்து படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர். காட்சிக்குக் காட்சி இருக்கும் உணர்ச்சிக் குவியல் தான் படத்தின் மையம். அது நடித்துள்ளவர்களால் அழுத்தமாய் ரசிக்கப்படுகிறது.
விதவை மறுமணம் குறித்த கருத்தைப் பேசுகிறது படம். ஆனாலும், ஏதோ ஒன்று ‘மிஸ்’ ஆகிறதே என்பது மட்டும் படம் முடிந்து வெளியே வந்ததும் மனதில் வருகிறது. கதாநாயகி மீதான அனுதாபம் நமக்குள் அழுத்தமாகப் பதியவில்லை என்பதுதான் அது.
Tags: nooru sami, vijay antony, swasika, sasi
