நீளிரா - விமர்சனம்

03 Apr 2026

ஈழத் தமிழர்களின் நீண்ட நெடிய போராட்ட வரலாற்றையும், அந்த மண்ணின் மக்கள் அனுபவித்த அளவற்ற வலிகளையும் ஒரு இரவின் கதையாகச் சொல்லும் திரைப்படம் ‘நீளிரா’.

சமாதானம் என்ற பெயரில் அங்கு காலடி எடுத்து வைத்த இந்திய அமைதிப்படையின் அத்துமீறல்களை இதுவரை தமிழ் திரையில் அரிதாகவே பேசப்பட்ட ஒரு கோணத்தில், உணர்ச்சிகரமாகவும் துணிச்சலுடனும் பதிவு செய்திருக்கும் படம் இது. ஒரு திருமண வீட்டுக்குள் நடக்கும் கதையாக இருந்தாலும், உலக அரசியலையும் ஈழ மக்களின் உள்ளார்ந்த வலியையும் ஒருசேர உணர வைக்கும் அரிய முயற்சி.

விடிவதற்குள் திருமணம் நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும், சுற்றிலும் நிலவும் பதற்றமான சூழலும், எந்த அசம்பாவிதமும் நிகழாமல் நிகழ்ச்சி முடிய வேண்டும் என்ற பயமும் ஒருபுறம். திருமண வீட்டார் மகிழ்ச்சியோடு இருக்க, மறுபுறம் போராளிகளைத் தேடி இந்திய ராணுவம் அங்கு வந்து சேர்கிறது. போராளிகளும் தாக்கத் தயாராகின்றனர். அவர்களிடமிருந்து தப்பிக்க ராணுவம் திருமண வீட்டுக்குள் புகுந்து கொள்கிறது.

ஒருபக்கம் போராளிகள், மறுபக்கம் இந்திய ராணுவம் – இந்த இரு அணிகளுக்கும் இடையே சிக்கிக்கொள்ளும் திருமண வீட்டாரின் நிலை என்னவாகும்? இந்தக் கேள்வியை விறுவிறுப்பான கமர்ஷியல் திரைப்படத் தரத்துடனும், ஈழ மக்களின் மன உளைச்சல்களை பார்வையாளர்களுக்கு நேரடியாக உணர்த்தும் ஆழத்துடனும் சொல்கிறது ‘நீளிரா’.

இந்திய அமைதிப்படை கேப்டனாக நவீன் சந்திராவும், போராளி படையின் கேப்டனாக சனத்தும் தங்கள் பாத்திரங்களுக்கு ஏற்றவாறு அச்சு நேர்த்தியுடன் நடித்திருக்கின்றனர். ரூபா கொடுவாயூர், கபிலா வேணு, விது, சித்து குமரேசன், நவயுக், சுவாதி கிருஷ்ணன் உள்ளிட்ட பெண் கலைஞர்கள் ஈழப் பெண்களின் துயரங்களை உண்மைத்தன்மையுடன் பிரதிபலிக்கின்றனர். அமைதிப்படை என்ற பெயரில் நடைபெற்ற அத்துமீறல்களை காட்சிகளாக அல்லாமல், அவர்கள் மீதான அச்சத்தையும் நடுக்கத்தையும் வசனங்கள் வழியே அப்பட்டமாக வெளிப்படுத்தியிருப்பது பெரும் பலம்.

நமசிவாயம் தம்பிப்பிள்ளை, கயல் வின்செண்ட், ரோஹித் கொகட் உள்ளிட்டோர் திரைக்கதையின் ஓட்டத்துக்கு உயிர் கொடுக்கும் வகையில் தங்களின் பங்களிப்பைச் சிறப்பாக அளித்துள்ளனர்.

இரவு முழுவதும் நடைபெறும் கதை என்றாலும், அந்த இரவின் உணர்வே தெரியாமல், கதாபாத்திரங்களின் மனப்போராட்டத்தையும், இக்கட்டான சூழல்களையும், அதனால் ஏற்படும் பதற்றத்தையும் திரையில் அப்படியே பார்வையாளர்களுக்குள் பாய்ச்சிவிடுகிறார் ஒளிப்பதிவாளர் செல்வரத்னம் பிரதீப். கே-வின் இசை திருமண வீட்டின் மகிழ்ச்சியையும் ஈழத்தின் கலாச்சார அழகையும் இனிமையாகப் பாடுகிறது. பின்னணி இசை மட்டும் படபடப்பையும் உணர்ச்சிகளையும் துல்லியமாக உயர்த்தி படத்துக்கு பெரும் துணை நிற்கிறது.

ஒரே வீட்டுக்குள் கதை நடந்தாலும், அதற்குள் உலக அரசியலையும் ஈழ மக்களின் ஆழமான வலியையும் உணரும்படி காட்சிகளை நேர்த்தியாகத் தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ராதா ஸ்ரீதர்.

எழுதி இயக்கிய சோமிதரன், ஒரு இரவின் கதைக்குள் ஈழப் போரின் முழு வரலாற்றையும் தெளிவாகப் பேசியிருக்கிறார். யுத்தமோ இரத்தமோ காட்டப்படவில்லை என்றாலும், அந்த மக்கள் அனுபவித்த வலியை மனதில் ஆழமாகப் பதியவைத்து, படம் முழுவதும் பதற்றத்துடன் பார்க்க வைக்கிறார். ஈழத் தமிழர்கள் சிங்கள ராணுவத்தால் அனுபவித்த கொடுமைகளை பல படங்கள் பேசியிருந்தாலும், அமைதிப்படை என்ற பெயரில் இந்திய ராணுவம் செய்த அட்டூழியங்களை முதன்முறையாக வெட்டவெளிச்சமாக்கியிருப்பது இயக்குநரின் துணிச்சலான முயற்சி.

போராளிகளின் காதல், கனவுகள், ஈழத்தின் பூர்வீகம், உரிமைப் பறிப்பு, ஆயுதப் போராட்டத்தின் பின்னணி, போராட்டம் வளர்ந்த விதம் – அனைத்தையும் சில காட்சிகளிலும் வசனங்களிலும் துல்லியமாகச் சொல்லியிருக்கிறார். எதையும் பிரச்சாரமாக நீட்டிக்காமல், சுருக்கமாகவும் நுணுக்கமாகவும் சொல்லியிருப்பது படத்தின் மிகப் பெரிய பலம்.

ஈழப் போர் மற்றும் அதன் விளைவுகளை இரத்தமும் சதையுமாகக் காட்டாமலேயே, அந்த வலியை எளிதில் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்த்து, சுவாரஸ்யமான திரைக்கதை மற்றும் பதற்றமூட்டும் காட்சிகளுடன் வெற்றி பெற்றிருக்கிறது ‘நீளிரா’. ஒரு இரவின் கதை – ஆனால் நெஞ்சில் நீண்ட நாட்களுக்கு நீளும் ஒரு அனுபவம்.

Tags: neelira

Share via: