நானும் ரௌடிதான் - விமர்சனம்
22 Oct 2015
தயாரிப்பு - உண்டர்பார் பிலிம்ஸ் இயக்கம் - விக்னேஷ் சிவன் இசை - அனிருத் ஒளிப்பதிவு - ஜார்ஜ் வில்லியம்ஸ் படத் தொகுப்பு - ஸ்ரீகர் பிரசாத் நடிப்பு - விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன், ஆர்ஜே பாலாஜி, ராதிகா சரத்குமார், ஆனந்தராஜ், அழகம் பெருமாள், மன்சூர் அலிகான் மற்றும் பலர். வெளியான தேதி - 22-10-2015 கதைச் சுருக்கம் பாண்டிச்சேரி, வில்லியனூர் இன்ஸ்பெக்டரான ராதிகா தன் மகன் விஜய் சேதுபதியை போலீசாக்கிப் பார்க்க வேண்டும் என ஆசைப்படுகிறார். ஆனால், விஜய் சேதுபதியோ அம்மாவுக்குத் தெரியாமல் குட்டி ரவுடியாக சில விஷயங்களை செய்து வருகிறார். சிறுவயதில் ஊரை விட்டுச் சென்ற போலீசான அழகம் பெருமாள், காது கேட்காத மகள் நயன்தாராவுடன் மீண்டும் பாண்டிச்சேரிக்கே வருகிறார். வந்த இடத்தில் காணாமல் போய்விடுகிறார். வில்லன் பார்த்திபன் அவரைக் கொன்றது விஜய் சேதுபதிக்குத் தெரிய வருகிறது. நயன்தாரா மீதுள்ள காதலால் அதை மறைத்துவிடுகிறார். தன்னை காதலிக்க வேண்டுமென்றால் பார்த்திபனைக் கொலை செய்ய வேண்டும் என நயன்தாரா, விஜய் சேதுபதியிடம் கூறுகிறார். அதன் பின் என்ன நடந்துது என்பதுதான் மீதிக் கதை. விமர்சனச் சுருக்கம் விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன் என ஒரு வித்தியாசமான கூட்டணியை வைத்துக் கொண்டு படம் முழுதும் கலகலப்பாக நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன். விஜய் சேதுபதி வழக்கம் போலவே கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து அசத்தியிருக்கிறார். படத்திற்குப் படம் நயன்தாராவின் நடிப்பு எங்கோ போய்க் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் மிகவும் இளைத்து காணப்பட்டாலும் நடிப்பில் பலமாக முத்திரை பதித்துள்ளார். ஜாலியாக என்டர்டெயின்மென்டடாக படம் பார்க்க நினைப்பவர்கள் பத்து கூட எண்ணாமல் இந்தப் படத்தைச் சென்று பார்க்கலாம்