முத்து என்கிற காட்டான் - இணையத் தொடர் விமர்சனம்
28 Mar 2026
விஜய் சேதுபதியின் முதல் தமிழ் இணையத் தொடராக வெளியாகிய ‘முத்து என்கிற காட்டான்’ ஹாரர்-த்ரில்லர் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, எல்லா வகை பார்வையாளர்களுக்கும் ஒரு புதிய அனுபவத்தைத் தரும் வகையில் உருவாகியுள்ளது. அதிகம் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பகுதியில் தொடங்கும் கதை, ஒரு வெட்டப்பட்ட தலையுடன் பார்வையாளர்களை உடனடியாக இழுத்துச் சென்று, ஒவ்வொரு அத்தியாயமும் புதிய ஆச்சரியங்களை வாரி வழங்குகிறது. முதல் அத்தியாயத்திலேயே தொடங்கும் இந்த பயணம், ‘முத்து யார்?’ என்ற கேள்வியை மையமாக வைத்து, சுவாரஸ்யமான பின்னணியுடன் நகர்கிறது.
ஒரு தனிமையான இடத்தில் விஜய் சேதுபதியின் துண்டிக்கப்பட்ட தலை கிடைக்கிறது. சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், உடலைத் தேடும் போது ஒரு கடிதமும் பணமும் கிடைக்கின்றன. “என் தலையை அடக்கம் செய்துவிட்டு, இந்தப் பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள்” என எழுதப்பட்டிருக்கும் அந்தக் கடிதம், முழு தொடருக்கும் ஒரு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. கொலை செய்யப்பட்டவர் யார் என தேடும் போது, அவர் பெயர் முத்து என்பது தெரிய வருகிறது. முத்து யார்? அவரது பின்னணி என்ன? அவர் ஏன் இப்படி செய்கிறார்? என்ற கேள்விகளை நோக்கி பயணிக்கும் காவல்துறைக்கு, ஒவ்வொரு அத்தியாயமும் புதிய உண்மைகளை வெளிப்படுத்துகிறது.
ஒவ்வொரு அத்தியாயம் முடியும் போதும் முத்துவின் செயல்கள் பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன. அவர் யார்? எதற்காக இப்படி நடந்து கொள்கிறார்? என்பதை அறியும் ஆவல், அடுத்த அத்தியாயத்தை உடனடியாக பார்க்கத் தூண்டுகிறது. இந்த சஸ்பென்ஸ் தொடரை ஒரே மூச்சில் பார்க்க வைக்கும் வலிமை கொண்டது.
விஜய் சேதுபதி, தொடரின் முதல் அத்தியாயத்திலேயே வெட்டப்பட்ட தலையாக அறிமுகமாகி, பின்னர் பல்வேறு அவதாரங்களில் உலா வருகிறார். கைக்கடிகார பழுது நீக்கும் தொழிலாளி, யானை பாகன், ஆதரவற்றோர் இல்ல மேலாளர், சரக்கு வாகன ஓட்டுநர், பெண் நடனக் கலைஞர்களின் பாதுகாவலர் என ஒவ்வொரு அத்தியாயத்திலும் வேறு வேறு உருவங்களில் வலம் வரும் அவர், தன் இயல்பான நடிப்பால் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் முழுமையாகப் பொருந்தி, அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டுகிறார். மனிதாபிமானம் நிறைந்த முத்துவின் பயணம், பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை எப்போதும் உயர்த்தி வைக்கிறது.
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக முத்துகுமார், மற்றும் சிங்கம் புலி, வடிவேல் முருகன், பார்வதி, பாலாஜி சக்திவேல், ரிஷா ஜேக்கப், மிலிந்த் சோமன், அபி நக்ஷத்ரா, இர்ஷாத் அலி, சுதேவ் நாயர், அரிஸ்டோ சுரேஷ், சுனிதா சந்திரன், ஆர்.அமரேந்திரன், சாதனா உள்ளிட்ட அனைத்து நடிகர்-நடிகையரும் தங்கள் கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டி, திரைக்கதையில் தங்களுக்கான இடத்தை தக்க வைத்துக் கொள்கிறார்கள்.
ராஜேஷ் முருகேசனின் பின்னணி இசை தொடருக்கு மிகப்பெரிய துணையாக இருக்கிறது. வெவ்வேறு காலகட்டங்கள் மற்றும் இடங்களில் பயணிக்கும் கதைக்கு, தனித்துவமான பீஜியங்கள் மூலம் உயிர் கொடுத்து, பார்வையாளர்களின் கவனத்தை முழுமையாக ஈர்க்கிறார். ஒளிப்பதிவாளர்கள் மது.என் மற்றும் என்.சண்முகசுந்தரம் இருவரின் பணி, தொடரை பிரமாண்டமாகக் காட்சிப்படுத்தியுள்ளது. ஒரே மாதிரியான வண்ணத் தட்டுகளைப் பயன்படுத்தி, பல்வேறு இடங்களிலும் பார்வையாளர்களை கதையோடு இணைத்துச் செல்கிறார்கள். கலை இயக்குநர்கள் ஜாக்கி மற்றும் சாபு மோகன் ஆகியோரின் அருமையான வேலை தொடருக்கு கூடுதல் பலத்தைச் சேர்க்கிறது.
படத்தொகுப்பு மற்றும் இயக்கத்தில் ஈடுபட்ட பி.அஜித் குமார், ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் முத்துவை மையப்படுத்திய ஒரு சிறந்த முடிச்சைப் போடுகிறார். அந்த முடிச்சை அடுத்த அத்தியாயத்தில் அவிழ்ப்பார் என்று எதிர்பார்க்கும் நம்மை, புதிய முடிச்சுடன் ஏமாற்றி, ஆர்வத்தை இன்னும் அதிகரிக்கச் செய்கிறார். மூன்று அத்தியாயங்கள் வரை ‘முத்து யார்?’ என்ற கேள்விக்கு தெளிவான பதில் தராமல், பார்வையாளர்களை தொடர்ந்து இழுத்துச் செல்லும் திறன் அவருக்கு உண்டு.
கதை எழுதி இயக்கிய மணிகண்டன், இணையத் தொடருக்கான சஸ்பென்ஸை திறம்பட நகர்த்தியிருக்கிறார். அதே சமயம், எளிய மனிதர்களின் வாழ்க்கையை அழகாகப் பிரதிபலிக்கும் காட்சிகளின் மூலம் பல இடங்களில் கைதட்டலைப் பெறுகிறார். எளியவர்களுக்காகப் பயணிக்கும் முத்து, எப்படி ‘காட்டான்’ ஆனார் என்பதை சுவாரஸ்யமாகவும், தன் வழக்கமான பாணியில் மனதுக்கு நெருக்கமாகவும் சொல்லியிருக்கிறார்.
ஒட்டுமொத்தமாக, ஒவ்வொரு அத்தியாயமும் ஆச்சரியங்களால் நிரம்பியிருந்தாலும், விஜய் சேதுபதி இல்லாத சில காட்சிகளில் தொடர் சற்று மெதுவாக நகர்வதுபோல் உணர்கிறது. சில துணை கதாபாத்திரங்களுக்கு தேவையில்லாத நீளமான காட்சிகள் தொடரை தொய்வடையச் செய்கின்றன. ஆனாலும், ‘முத்து யார்?’ என்ற கேள்வியும், விஜய் சேதுபதியின் அற்புதமான பயணமும் அந்தத் தொய்வை முழுவதுமாக மறைத்து, தொடரை ரசிக்க வைக்கின்றன.
எளிய மனிதர்களின் கதையை சஸ்பென்ஸுடன் சொல்லும் ‘முத்து என்கிற காட்டான்’ – விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு மட்டுமல்ல, தரமான இணையத் தொடர்களை விரும்புவோருக்கும் ஒரு சிறந்த தேர்வு!
Tags: muthu engira kaattaan, vijay sethupathi

