மர்மர் - விமர்சனம்

07 Mar 2025

"மர்மர்" படம் ஒரு புதுமையான திகில் அனுபவத்தை தமிழ் திரையுலகுக்கு அளிக்கும் ஒரு துணிச்சலான முயற்சி. 

திருவண்ணாமலை மாவட்டத்தின் ஜவ்வாதுமலைப் பகுதியைச் சுற்றியுள்ள ஒரு கிராமத்தின் பழம்பெரும் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் ஏழு கண்ணி தெய்வங்கள் இருப்பதாகவும், அவை பெளர்ணமி இரவுகளில் குளத்தில் குளிப்பதாகவும் நம்பப்படுகிறது. ஆனால், ஒரு சூனியக்காரியின் ஆவி இந்த பூஜையை தடுப்பதாகவும், குழந்தைகளை பலி கொடுத்த அந்த சூனியக்காரி இன்னும் அந்த காட்டில் அலைவதாகவும் கிராம மக்கள் நம்புகிறார்கள். இந்த கதையை ஆராய்வதற்காக ஒரு ஆவணப்படக் குழு அந்த காட்டுக்குள் நுழைகிறது. அவர்களுடன் கிராமத்து பெண்ணும் சேர்ந்து கொள்கிறாள். காட்டுக்குள் நுழைந்த அவர்கள் சந்திக்கும் அமானுஷ்ய சம்பவங்களும், பயங்கரமான நிகழ்வுகளும் படத்தின் மையக் கருத்தை உருவாக்குகின்றன.

"மர்மர்" படம், 'ஃபவுண்ட் ஃபூட்டேஜ்' என்று அழைக்கப்படும் நேரடி கேமரா பதிவு முறையில் எடுக்கப்பட்ட முதல் தமிழ் திகில் படம் என்ற தனித்துவத்தை கொண்டுள்ளது. இந்த முறை படத்திற்கு ஒரு உண்மையான தோற்றத்தையும், பார்வையாளர்களை கதையில் முழுமையாக ஈடுபடுத்தும் தன்மையையும் அளிக்கிறது. படத்தின் கதைக்களம் மற்றும் திகில் காட்சிகள் அனைத்தும் உண்மைக்கு மிக அருகில் இருப்பதால், பார்வையாளர்கள் படம் முழுவதும் ஒரு பதட்டமான அனுபவத்தை பெறுகிறார்கள்.

நடிகர்கள் ரிச்சி கபூர், தேவ்ராஜ் ஆறுமுகம், சுகன்யா ஷண்முகம், யுவிகா ராஜேந்திரன், அரியா செல்வராஜ் ஆகியோர் தங்களது பாத்திரங்களில் மிகவும் இயல்பாகவும், எதார்த்தமாகவும் நடித்திருக்கிறார்கள். காட்டுக்குள் சிக்கிக்கொண்டு பயத்தில் உரைந்து போகும் அவர்களின் நடிப்பு, பார்வையாளர்களையும் பதற வைக்கும் அளவுக்கு சக்திவாய்ந்ததாக உள்ளது. குறிப்பாக, பயத்தின் உணர்வுகளை அவர்கள் முகத்திலும், செயல்களிலும் மிகத் துல்லியமாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஜேசன் வில்லியம்ஸ், இரவு நேரத்தில் மிகக் குறைந்த வெளிச்சத்தில் காட்சிகளை படமாக்கியிருந்தாலும், காட்சிகளை மிகத் தரமாகவும், தெளிவாகவும் படம்பிடித்திருக்கிறார். கேமராவில் பதிவு செய்யப்படும் காட்சிகளை கண்ணுக்கு உறுத்தாத வகையில் காட்சிப்படுத்தி, திரைக்குள் இருக்கும் பயத்தை பார்வையாளர்களுக்கும் கடத்தியிருக்கிறார். ஒலி வடிவமைப்பாளர் கேவ்ய்ன் பிரெடெரிக், படத்தின் பயங்கர உணர்வை மேலும் அதிகரிக்கும் விதமாக பின்னணி ஒலிகளை அமைத்திருக்கிறார். காட்டின் பகல் மற்றும் இரவு நேரங்களில் கேட்கப்படும் ஓசைகள், அமானுஷ்ய ஒலிகள் போன்றவை பார்வையாளர்களின் நெஞ்சை பதற வைக்கின்றன.

படத்தொகுப்பாளர் ரோஹித், படத்தின் கதையை ஒரு பதட்டமான ஓட்டத்தில் வைத்திருக்கிறார். ஆனால், சில காட்சிகள் மிகவும் நீளமாக இருப்பது பார்வையாளர்களுக்கு சலிப்பை ஏற்படுத்துகிறது. காட்சிகளின் நீளத்தை குறைத்து, படத்தின் மொத்த நீளத்தையும் சுருக்கியிருந்தால், படம் மிகவும் வித்தியாசமான திகில் அனுபவத்தை அளித்திருக்கும்.

இயக்குநர் ஹேம்நாத் நாராயணன், தொழில்நுட்ப ரீதியாகவும், கதை சொல்லல் மற்றும் காட்சி அமைப்புகள் மூலமாகவும் ஒரு புதுமையான திகில் படத்தை உருவாக்க முயற்சித்திருக்கிறார். படத்தின் துவக்கம் முதல் இறுதிக் காட்சி வரை, பார்வையாளர்களை "எந்த பக்கம் இருந்து, என்ன வருமோ..." என்ற அச்சத்தோடு படத்துடன் பயணிக்க வைத்திருக்கிறார். காட்சிகள் அனைத்தையும் நீளமாக வைத்திருப்பது சில இடங்களில் பார்வையாளர்களை சலிப்படைய செய்கிறது. இந்த குறையை மட்டும் நிவர்த்தி செய்தால், "மர்மர்" படம் நிச்சயம் ஒரு வித்தியாசமான திகில் அனுபவத்தை தமிழ் திரையுலகுக்கு அளிக்கும்.

மொத்தத்தில், "மர்மர்" படம் ஒரு புதிய முயற்சியாக திகில் ஜானரில் தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய பரிமாணத்தை சேர்த்துள்ளது. பாரம்பரிய திகில் படங்களில் இருந்து மாறுபட்டு, உண்மையான அனுபவத்தை பிரதிபலிக்கும் இந்த படம், திகில் ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்குகிறது.

Tags: murmur

Share via: