மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் – விமர்சனம்

21 May 2023

‘கொன்றால் பாவம்’ படத்தை இயக்கிய தயாள் பத்மநாபன் இயக்கத்தில் ஓடிடி தளத்தில் வந்துள்ள படம். வரலட்சுமி, ஆரவ், சந்தோஷ் பிரதாப் மற்றும் பலர் நடித்துள்ள படம்.

சென்னையில் உள்ள ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’ மற்றும் அதன் அதிகார எல்லைக்குட்பட்ட பகுதியில் நடக்கும் சில க்ரைம் சம்பவங்கள்தான் படத்தின் கதை. 

காவல் நிலையம் பற்றிய கதை, ஒரு கொலைக்கான விசாரணை என்றாலே பரபரப்புக்குப் பஞ்சமிருக்காது. அதை சஸ்பென்ஸுடன் படத்தில் நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் தயாள் பத்மநாபன்.

வரலட்சுமி, சந்தோஷ் பிரதாப், மகத், விவேக் ராஜகோபால், யாசர் ஆகியோர் ஒரே அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவர்கள். வரலட்சுமியும், மகத்தும் காதலர்கள். ஒரு நாள் ஆபீஸ் வேலை முடிந்து திரும்பும் வழியில் ஒரு சிறுமியை சிலர் தூக்கிக் கொண்டு செல்வதைப் பார்க்கிறார் மகத். அதை வீடியோ எடுக்கும் போது அவர்களிடம் சிக்குகிறார். அதன்பிறகு அவர் வீட்டிற்குத் திரும்பவில்லை. காணாமல் போன மகத்தைத் தேடிக் கண்டுபிடிக்க குற்றம் நடந்த மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷனுக்கே தனது சப் இன்ஸ்பெக்டர் வேலையை மாற்றிக் கொண்டு மற்ற நண்பர்களுடன் சேர்ந்து அதிகாரப்பூர்வமற்ற முறையில் விசாரிக்க ஆரம்பிக்கிறார் வரலட்சுமி. மகத்தைக் கண்டுபிடித்தார்களா, அவருக்கு என்ன ஆனது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

ஒரு காவல் நிலையத்தைச் சுற்றிக் கதை நகர்ந்தாலும், திரைக்கதையில் அடுத்த என்ன நடக்கும் என்ற சஸ்பென்ஸை வைத்திருப்பதால் விறுவிறுப்புடன் ரசிக்க முடிகிறது. அந்த ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் அமித் பார்கவ், ரவுடி சுப்பிரமணிய சிவா கொலையுண்ட பிறகு அந்த வழக்கை விசாரிக்க, உதவி கமிஷனர் ஆரவ் வந்த பிறகு அந்த விறுவிறுப்பு இன்னும் கூடுகிறது.

சரத்குமார், ஆரவ், சந்தோஷ் பிரதாப், விவேக் ராஜகோபால், யாசர், அமித் பார்கவ், சுப்பிரமணிய சிவா அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவாய் நடித்திருக்கிறார்கள். 

லைட்டிங்கில் தனி கவனம் செலுத்தி ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சேகர் சந்திரா. மணிகாந்த் கத்ரியின் பின்னணி இசை மிரட்டலாய் அமைந்துள்ளது.

ஒரு சில காட்சிகள் கொஞ்சம் மெதுவாக, க்ளிஷேவாக இருப்பதைத் தவிர்த்திருக்கலாம். த்ரில்லர் பட ரசிகர்களுக்குப் படம் பிடிக்கும்.
 

Tags: maruti nagar police station, varalakshmi, aarav,

Share via:

Movies Released On July 27