கஸ்டடி - விமர்சனம்

13 May 2023

வெங்கட்பிரபு இயக்கத்தில், இளையராஜா, யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், தெலுங்கு நடிகரான நாக சைதன்யா தமிழில் அறிமுகமாகியிருக்கும் படம்.

‘மங்காத்தா, மாநாடு’ ஆகிய இரண்டு ஆக்ஷன் படங்கள் வெங்கட் பிரபுவின் திறமையை வெளிப்படுத்திய திரைப்படங்களாக அமைந்தன. ‘மாநாடு’ படத்திற்குப் பிறகு இந்தப் படத்தை அவர் தமிழ், தெலுங்கில் இயக்கியதால் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. 

90களில் ஆந்திராவில் நடக்கும் கதை என்பதால் ரசிகர்களின் புரிதலுக்காக அந்தக் கதாபாத்திரங்கள் தமிழ் பேசுவதாக படத்தின் ஆரம்பத்தில் ஒரு கார்டு போட்டுவிடுகிறார்கள். அதெல்லாம் சரி, தெலுங்கு பேசும் ஆந்திராவில் முதல்வராக இருக்கும் ப்ரியாமணியின் கட்சியின் பெயரை ‘முத்தமிழ் முன்னேற்றக் கழகம்’ என டிவி செய்தியாளர் படத்தில் ஒரு காட்சியில் சொல்கிறாரே அது எதற்கு ?. ‘முத்தெலுங்கு முன்னேற்றக் கழகம்’ என்றல்லவா சொல்ல வேண்டும்.

படத்தின் காட்சிகளில் எங்கு பார்த்தாலும் தெலுங்கு எழுத்துக்கள் தான் இடம் பெற்றுள்ளது. நடிகர்கள், நடிகைகள் தமிழ் பேசினால் மட்டும் அது தமிழ்ப் படமாகிவிடுமா ?. பேசாமல் தெலுங்கில் மட்டும் எடுத்துவிட்டு தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டிருக்கலாமே.

ஆந்திராவின் சிறிய ஊர் ஒன்றில் கான்ஸ்டபிளாக இருக்கும் நாக சைதன்யா, முதல்வர் ப்ரியாமணியின் ஆதரவு பெற்ற ரவுடியான அரவிந்த்சாமியை கைது செய்கிறார். அது பற்றி தெரிய வரும் ப்ரியாமணி, போலீஸ் ஐ.ஜி சரத்குமாரிடம் அரவிந்த்சாமியைக் கொல்லச் சொல்கிறார். சிபிஐ அதிகாரிகள் மூலம் அரவிந்த்சாமி பற்றிய உண்மையைத் தெரிந்து கொள்ளும் நாகசைதன்யா, அரவிந்த்சாமியை எப்படியாவது பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முயல்கிறார். அவர்களைத் துரத்தும் சரத்குமாரின் எதிர்ப்பையும் மீறி நாகசைதன்யா அரவிந்த்சாமியுடன் பெங்களூரு சென்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

படத்தின் கதாநாயகன் நாகசைதன்யா வேறு வராத தமிழை எப்படி எப்படியோ பேசி ஒரு வழி செய்துவிடுகிறார். சென்னையில் வளர்ந்ததால், தமிழில் அறிமுகமாக வேண்டும் என்று ஆசைப்பட்டதால் தமிழில் தானே டப்பிங் பேச வேண்டும் என்ற அவரது முயற்சிக்கு மட்டும் ஒரு வணக்கம்.  தாத்தா நாகேஸ்வரராவ், அப்பா நாகார்ஜுனா ஆகியோரது படங்களைப் பார்த்தாலே எப்படி நடிக்க வேண்டும் என்று கற்றுக் கொள்ளலாமே. தெலுங்கிலேயே நடியுங்கள் பாஸ், தமிழெல்லாம் வேண்டாம். அப்படியே தமிழில் நடிக்க வந்தாலும் தாத்தா, அப்பா தமிழில் நடித்து புகழ் பெற்ற ‘ரொமான்டிக் படங்களில்’ நடிக்க வாருங்கள், இந்த ஆக்ஷன் படங்கள் எல்லாம் எதற்கு ?.

தமிழ், தெலுங்கில் தயாரான ‘த வாரியர்’ படத்திற்குப் பிறகு மீண்டும் தமிழ், தெலுங்கில் தயாரான இந்த ‘கஸ்டடி’ படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார் கிரித்தி ஷெட்டி. தமிழில் மட்டுமே தயாராகும் ஒரு நல்ல படத்தில் எப்படியாவது நடித்து பெயர் வாங்கிவிடுங்கள் கிரித்தி.

அரவிந்த்சாமி 90களில் சாக்லெட் பாய் ஆக வலம் வந்தவர். அவரை 90களில் நடக்கும் இந்தப் படத்தின் கதையில் ஒரு ரவுடியாகப் பார்க்க வேண்டும் என்பதெல்லாம் ஓவர் தான். சரத்குமார் 90க்கும் முன்பாக 80களில் நடிப்பதைப் போன்று டிராமாவாக நடித்திருக்கிறார்.

இளையராஜா, யுவன்ஷங்கர் ராஜா இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். ஒரு பாடலாவது நம்மைக் கவர்ந்துவிடும் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றமே. பின்னணி இசையில் மட்டும் தீம் மியுசிக் பார்முலாவை இந்தப் படத்திலும் பயன்படுத்தியிருக்கிறார் யுவன். நாக சைதன்யா ஓடும் ஓட்டத்திற்கு ஏற்ப ஒளிப்பதிவாளர் கதிர் ஓடிக் கொண்டே இருந்திருக்கிறார்.

‘மாநாடு’ போன்று ஒரு படத்தைக் கொடுத்துவிட்டு இப்படி ஒரு படத்தை வெங்கட்பிரபுவிடம் இருந்து ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இடைவெளி விழுந்தாலும் பரவாயில்லை நல்ல கதை, திரைக்கதையுடன் மீண்டு(ம்) வாருங்கள் வெங்கட்பிரபு, காத்திருக்கிறோம். 

Tags: custody, venkat prabhu, yuvanshankar raja, ilaiyaraja, naga chaitanya, kriti shetty

Share via: