மேட் இன் கொரியா - விமர்சனம்
13 Mar 2026
தமிழ் சினிமாவில் அரிதாகக் காணப்படும் வெளிநாட்டு பின்னணியுடன் கூடிய கதைகளில் ஒன்று 'மேட் இன் கொரியா'. ஒரு இளம் பெண்ணின் கனவுகளையும், வாழ்க்கையின் திருப்பங்களையும் கொரியா நாட்டின் அழகிய காட்சிகளுடன் இணைத்து, பார்வையாளர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்குகிறது.
காதல், ஏமாற்றம், தன்னம்பிக்கை போன்ற உணர்ச்சிகளை மென்மையாகக் கலந்து, வாழ்க்கையின் நம்பிக்கையை விதைக்கும் இந்தப் படம், இயக்குநர் ரா.கார்த்திக் அவர்களின் உணர்வுமிக்க உருவாக்கம். பிரியங்கா அருள் மோகன் தலைமையில் உருவான இந்தத் திரைக்காவியம், பயணங்களின் மூலம் வரும் மாற்றங்களை அழகாகச் சித்தரிக்கிறது.
பள்ளிக் காலத்தில் கொரியாவின் இசை மற்றும் நடனங்களால் ஈர்க்கப்படும் பிரியங்கா அருள் மோகன், அந்த நாட்டுக்கு ஒரு தடவையாவது செல்ல வேண்டும் எனும் கனவை மனத்தில் பூட்டி வைத்திருக்கிறார். அதை நிறைவேற்றும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் அவர், தனது வாழ்வில் காதல், அதன் சிக்கல்கள் போன்ற பல சவால்களை சந்தித்தாலும், கொரியா ஆசையை விட்டுக்கொடுக்காமல் இருக்கிறார்.
இதனிடையே, எதிர்பாராத சூழலால் அவர் கொரியாவுக்கு பயணம் செய்ய வேண்டிய நிலை உருவாகிறது. ஆனால், உற்சாகத்துடன் செல்ல நினைத்த அந்த நாட்டுக்கு துன்பத்துடன் செல்லும் அவர், அங்கு போன பின்னரே தான் வஞ்சிக்கப்பட்டதை உணர்கிறார். பெற்றோரின் அறிவுரையை மீறி வீட்டை விட்டு வெளியேறி, காதலனால் ஏமாற்றப்பட்டு, மீண்டும் வீடு திரும்ப முடியாமல் தவிக்கிறார். தான் கனவு கண்ட நாட்டில் இருந்தாலும், புரியாத மொழி, அந்நிய மக்கள் என பயத்தில் கலங்கி நிற்கும் பிரியங்கா அருள் மோகனின் வாழ்வில் கொரியா என்ன மாற்றங்களை உண்டாக்குகிறது என்பதை உணர்ச்சிமயமாக விவரிப்பது தான் 'மேட் இன் கொரியா'.
கதையின் மையப்புள்ளியாக நடித்திருக்கும் பிரியங்கா அருள் மோகன், சீரான நடிப்பால் படத்தை முழுமையாக தாங்கியிருக்கிறார். இயற்கை அழகு நிறைந்த ஊட்டி மற்றும் நவீன கொரியா என வேறுபட்ட இடங்களில் காட்சிகள் நகர்ந்தாலும், எல்லாவற்றிலும் பிரியங்கா மோகன் அழகுடன் தோன்றுகிறார். சிரிப்பு, கண்ணீர், காதல், துயர், மகிழ்ச்சி, பிரிவு, ஏமாற்றம், தயக்கம், தன்னம்பிக்கை என அனைத்து உணர்வுகளையும் தனது அழகிய நடிப்பால் துல்லியமாக வெளிப்படுத்தியிருக்கும் பிரியங்கா அருள் மோகன், படத்தின் குறைகளை மறக்கச் செய்து, ரசிகர்களை ரசிக்க வைக்கிறார்.
சிறு பாத்திரங்களில் நடித்து வந்த ரிஷிகாந்த், இங்கு முதன்மை வேடத்தில் தோன்றியிருக்கிறார். பிரியங்காவின் காதலனாக நடித்திருக்கும் அவர், தனது கடமையை சரியாக நிறைவேற்றி, கதாபாத்திரத்துக்கு நீதி செய்திருக்கிறார்.
பார்க் ஹே-ஜின், நோஹூ ஜின், ஜாங் ஜேஹியான் போன்ற கொரிய நடிகர்கள் மற்றும் பிரியங்காவின் பெற்றோராக நடித்த தமிழ் கலைஞர்கள் என அனைவரும் தங்கள் பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றியிருக்கிறார்கள்.
எங்கு கேமரா வைத்தாலும் அழகு தெரியும் இடங்களில் படமாக்கப்பட்டிருந்தாலும், அந்த இடங்களுடன் கதாபாத்திரங்களையும் அழகுறக் காட்டி, முழு படத்தையும் கண்களுக்கு இன்பமாக மாற்றியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரசன்னா குமார்.
ஹேஷாம் அப்துல் வஹாப்பின் இசையில் பாடல்கள் இனிமையாகவும், பின்னணி இசை மென்மையாகவும் சென்று, திரைக்கதையின் உணர்ச்சிகளை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் முக்கிய பங்கு வகித்திருக்கிறது.
மெதுவாக செல்லும் திரைக்கதை என்றாலும், அதில் நிறைந்த உணர்வுகள் ரசிகர்களின் கவனத்தை முழுமையாக ஈர்க்கும் வகையில் காட்சிகளை ஒழுங்கமைத்திருக்கும் படத்தொகுப்பாளர் ஆண்டனியின் பணி, படத்துக்கு கூடுதல் வலிமை சேர்த்திருக்கிறது.
வேகம் மற்றும் உற்சாகம் இல்லாத திரைக்கதை என்றாலும், ஊட்டி மலைகளைத் தொட்டு செல்லும் மேகங்கள், உடலைத் தழுவும் குளிர் காற்று அனுபவம், பனி மழையால் ஜொலிக்கும் இரவுகள், கண்களை கவரும் பொன் நிற காலை என கொரியாவை சித்தரித்த விதம் ஆகியவை ரசிகர்களை படத்துடன் இணைத்து வைக்கிறார் இயக்குநர் ரா.கார்த்திக்.
பிரியங்கா அருள் மோகன் சுற்றி கதை நடந்தாலும், அவருடன் தொடர்புடைய பாத்திரங்களுக்கும் திரைக்கதையில் முக்கிய இடம் கொடுத்திருக்கும் இயக்குநர் ரா.கார்த்திக், அந்த வேடங்களில் பிரபலங்களை நடிக்க வைக்காமல், வளரும் கலைஞர்களை தேர்வு செய்து, அந்த கதாபாத்திரங்களை ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிய வைத்திருக்கிறார்.
பயணங்கள் மற்றும் புதிய உறவுகள் வழியாக வாழ்வில் வரும் மாற்றங்களை அழகியலுடன் விவரித்திருக்கும் இயக்குநர் ரா.கார்த்திக், வாழ்க்கையில் எதிர்மறை சம்பவங்கள் நிகழ்ந்தாலும், அவற்றை நேர்மறை எண்ணங்களுடன் எதிர்கொண்டால் அவை நம் வாழ்க்கையை வசந்தமாக மாற்றும் எனும் நம்பிக்கையை ஊட்டி, வெற்றி கண்டிருக்கிறார்.
Tags: made in korea, priyanka mohan
