லாக்டவுன் - விமர்சனம்
30 Jan 2026
தமிழ் சினிமாவில் சமூக விழிப்புணர்வு, பெண்களின் பிரச்சனைகள் மற்றும் கொரோனா ஊரடங்கு காலத்தின் உண்மை சம்பவங்களை இணைத்து, உணர்வுப்பூர்வமான திரைக்கதையுடன் உருவாகியிருக்கும் ஒரு சுவாரஸ்யமான படைப்பு இந்த 'லாக்டவுன்'.
இயக்குநர் ஏ.ஆர்.ஜீவா, ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத சிக்கலை மையமாகக் கொண்டு, எச்சரிக்கை மணி அடிக்கும் வகையில் கதையை நெய்திருக்கிறார். நடிகை அனுபமா பரமேஸ்வரனின் தைரியமான நடிப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்களின் சிறப்பால், இந்தப் படம் பார்வையாளர்களிடம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பெண்களுக்கான விழிப்புணர்வு செய்தியை முன்னிலைப்படுத்தும் இந்தத் திரைப்படம், குடும்பத்துடன் பார்க்கத் தகுந்த ஒரு உணர்ச்சிகரமான அனுபவத்தை வழங்குகிறது.
நாயகி அனுபமா பரமேஸ்வரன், ஐடி துறையில் வேலை செய்ய விரும்பி, அதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார். ஆனால், இரவு நேர வேலைகள் கிடைப்பதால் குடும்பத்தினர் தடை போடுகின்றனர். எப்படியாவது பகல் நேர வேலை பிடிக்க வேண்டும் என்ற தீர்மானத்தில், தோழியுடன் ஒரு சந்திப்புக்குச் செல்கிறார். அங்கு மது விருந்து, ஆட்டம், பாட்டு என ஒரு புதிய உலகத்தை காணும் அவர், அதில் ஈர்க்கப்பட்டு பெற்றோரிடம் பொய் சொல்லி, போதை மயக்கத்தில் மூழ்குகிறார். மறுநாள் வீடு திரும்பி வழக்கமான வாழ்க்கையைத் தொடர்ந்தாலும், சில வாரங்களுக்குப் பின் எதிர்பாராத பெரும் சிக்கலில் சிக்கிக் கொள்கிறார். அந்த விருந்தே காரணம் எனத் தெரிந்தாலும், யார் குற்றவாளி என்பது தெரியாத குழப்பம் ஒருபுறம், குடும்பத்துக்குத் தெரியாமல் அதிலிருந்து மீள்வது எப்படி என்பது மறுபுறம். இந்தப் போராட்டமும், அவரது பிரச்சனையும், அதிலிருந்து மீண்டாரா என்பதும் உணர்வுப்பூர்வமாகவும், பெண்களுக்கான எச்சரிக்கையாகவும் சொல்லப்படுகிறது.
நாயகியாக அனுபமா பரமேஸ்வரன், தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்த அனுபவத்தைத் தாண்டி, இப்படி ஒரு சர்ச்சைக்குரிய, அழுத்தமான கதாபாத்திரத்தில் தைரியமாக நடித்திருப்பது பாராட்டுக்குரியது. கட்டுப்பாடான குடும்பப் பெண்ணாகத் தொடங்கி, புதிய உலகத்தில் பரவசமடைவது, உற்சாகத்தில் ஆடுவது, பின்னர் சிக்கலில் போராடுவது என அனைத்து உணர்வுகளையும் திறம்பட வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது நடிப்பு விருதுக்கு உரியது என்பதில் சந்தேகமில்லை, இது பார்வையாளர்களிடம் பெரும் பாராட்டைப் பெறும்.
நாயகியின் பெற்றோர்களாக சார்லி மற்றும் நிரோஷா, நடுத்தர குடும்பத்தின் இயல்பான உணர்வுகளை எதார்த்தமாகக் காட்டியிருக்கின்றனர். பிரியா வெங்கட், லிவிங்ஸ்டன், இந்துமதி, ராஜ்குமார், லொள்ளு சபா மாறன், விநாயகராஜ், விது, சஞ்சீவி, பிரியா கணேஷ், ஆஷா போன்றோர் தங்கள் பாத்திரங்களை திறம்பட கையாண்டு, கதைக்கு வலு சேர்த்திருக்கின்றனர்.
ஒளிப்பதிவாளர் கே.ஏ.சக்திவேல், தேர்ந்தெடுத்த இடங்கள், விளக்குகள் மற்றும் வண்ணங்களால், படத்தை ஒரு உண்மையான பெண்ணின் வாழ்க்கையாக உணரச் செய்திருக்கிறார். குறிப்பாக வீட்டுக்குள் படமாக்கப்பட்ட காட்சிகள் இயல்பாகவும் உணர்ச்சிகரமாகவும் அமைந்துள்ளன.
இசையமைப்பாளர்கள் என்.ஆர்.ரகுநந்தன் மற்றும் சித்தார்த் விபின், பாடல்களால் கதாபாத்திர உணர்வுகளை உயர்த்தியிருப்பதோடு, பின்னணி இசையால் பதற்றத்தை பார்வையாளர்களுக்கும் தொற்ற வைத்திருக்கின்றனர்.
படத்தொகுப்பாளர் வி.ஜெ.சாபு ஜோசப், எதிர்பாராத சிக்கலை பரபரப்பாக சொல்லாமல், ஒரு பெண்ணின் போராட்டத்தை நேர்த்தியாகக் கடத்தியிருக்கிறார்.
இயக்குநர் ஏ.ஆர்.ஜீவா, கொரோனா ஊரடங்கை முக்கிய அம்சமாகப் பயன்படுத்தி, பெண்களின் பிரச்சனையை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார். காரணம் யார் என்பதை எழுப்பி பார்வையாளர்களை இழுத்து, மீள்வாரா என்பதை எதிர்பார்ப்புடன் நகர்த்தி, எதிர்பாராத திருப்பத்தால் அதிர்ச்சியளித்து, இறுதியில் விழிப்புணர்வு செய்தியை ஆழமாகப் பதிய வைக்கிறார். இந்தப் படம், பிரச்சனைகளை குடும்பத்தாரிடம் பகிர வேண்டியதன் அவசியத்தை எச்சரிக்கும் வகையில் வெற்றி பெற்றுள்ளது.
Tags: lockdown, anupama parameswaran

