குட் பேட் அக்லி - விமர்சனம்

10 Apr 2025

தயாரிப்பு - மைத்ரி மூவி மேக்கர்ஸ்

இயக்கம் - ஆதிக் ரவிச்சந்திரன்

இசை - ஜிவி பிரகாஷ்குமார்

நடிப்பு - அஜித்குமார், த்ரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா, சுனில் மற்றும் பலர்.

தமிழ் சினிமா எத்தனையோ விதமான ‘டான்’ கதைகளைப் பார்த்திருக்கிறது. இதுவும் ஒரு டான் கதைதான். ஆனால், இதுவரை எந்த ஒரு படத்திலும் வராத அதிகபட்ச ஹீரோயிசமான ‘டான்’ கதையாக அமைந்துள்ளது. தங்களது அபிமான நாயகனை திரையில் எப்படிப் பார்க்க அவரது ரசிகர்கள் விரும்புவார்களோ அப்படியான ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். அஜித்தின் முந்தைய பல படங்களிலிருந்து வசனங்கள், கொஞ்சம் தோற்றங்கள் என என்னென்னமோ மாயஜாலம் காட்டியிருக்கிறார்.

மும்பையை கலக்கும் ‘ரெட் ட்ராகன்’ என்ற டான் ஆக இருப்பவர் அஜித் குமார், அவருடைய மனைவி த்ரிஷா. குழந்தை பிறந்த சமயத்தில் கணவர் அஜித்தை, ‘டான்’ தொழிலை விட்டு வந்தால் மட்டுமே தன் மகனைத் தொட வேண்டும் என்கிறார். மனைவி சொல்லே மந்திரம் என்று ஏற்ற அஜித் போலீசில் சரணடைகிறார். 17 ஆண்டு கால சிறைவாசம் அவருக்குக் கிடைக்கிறது. 18வது பிறந்தநாளில் மகனை சந்திப்பேன் தந்த வாக்குறுதியை நிறைவேற்ற சிறையிலிருந்து விடுதலையாகி மனைவி, த்ரிஷா வசிக்கும் ஸ்பெயின் நாட்டிற்குச் செல்கிறார்.  ஆனால், அங்கு அவரது 17 வயது மகனை போதைப் பொருள் பயன்படுத்தினார் என கைது செய்கிறார்கள். தன் மகனை அந்த வலையில் சிக்க வைத்தது யார் என கண்டுபிடிக்க முயல்கிறார். அதனால் மீண்டும் ‘டான்’ ஆக உருவெடுக்கிறார். அவரது மகனைக் காப்பாற்றினாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

‘பாட்ஷா பாய்’ போல மும்பையைக் கலக்கும் ‘ரெட் ட்ராகன்’ ஆக படம் முழுவதும் அதிரடி காட்டியிருக்கிறார் அஜித். அவரது ஹேர்ஸ்டைல், தாடி ஸ்டைல், டிரஸ் ஸ்டைல் என அனைத்துமே மாறுபட்ட தோற்றத்தில் அமைந்துள்ளது. நடுத்தர வயது கதாபாத்திரம் என்றாலும் அவரது ஒவ்வொரு அசைவும் அஜித் ரசிகர்களை அட்டகாசமாகக் கவர வைக்கும். மகனைக் காப்பாற்ற வேண்டும், அதற்காக சண்டை போட்ட மனைவியுடன் சமாதானம் ஆக வேண்டும் என்ற கொஞ்சமே கொஞ்சம் சென்டிமென்ட் தவிர படம் முழுவதும் அஜித்தின் ‘அமர்க்களம்’ மட்டுமே இடம் பெற்றுள்ளது. வீரம், விவேகம், வலிமை, துணிவு, விடாமுயற்சி கலந்த வரலாறு படைக்கும் வில்லனுக்கு வில்லன் கதாபாத்திரம் தான் இந்த ‘ரெட் ட்ராகன் - எகே’ கதாபாத்திரம். படம் முழுவதுமே ‘மங்காத்தா’ ஆட்டம் ஆடியிருக்கிறார்.

அஜித்தின் மனைவியாக அழகாக, கொஞ்சம் கோபமாக வந்து போகிறார் த்ரிஷா. க்ளைமாக்சில் ‘ரெட் ட்ராகன்’ கூட நிற்கும் அந்த ‘ரெட்’  புடவையில் அழகோ அழகாய் இருக்கிறார். 

அஜித்துக்கு ஒரு வில்லன் போதாது என படத்தில் இரட்டை வில்லன்களை வைத்திருக்கிறார்கள். ஜானி, ஜாமி என இரு வேடங்களில் நடித்திருக்கிறார் அர்ஜுன் தாஸ். அவருடைய குரலுக்கே உரிய சிறப்புடன் அஜித்தை தன் ‘பகைவன்’ ஆகப் பார்க்கிறார். இரண்டு வேடங்களிலுமே அசத்தியுள்ளார் அர்ஜுன் தாஸ்.

அஜித்திற்கு உதவும் நண்பர்களாக பிரசன்னா, சுனில், அவருக்கு உதவி செய்யும் அதிகாரியாக பிரபு, ஜெயிலராக ஒரே ஒரு காட்சியில் சாயாஜி ஷின்டே, அஜித் மகனாக கார்த்திகேய தேவ், மும்பை தாதாவாக டினு ஆனந்த் நடித்திருக்கிறார்கள்.

இயக்குனர் ஆதிக் ‘பேன் பாய்’ ஆக இயக்கியதைப் போல, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ‘பேன் பாய்’ ஆகவே இசையமைத்திருக்கிறார். தீவிரமான பேன் பாய் போலிருக்கிறது. சில காட்சிகளில் ‘டெசிபல்’ ஏறுகிறது. அந்த உச்ச சத்தத்தைக் குறைத்திருக்கலாம். அவரது பாடல்களை விடவும், அந்தக் கால வேறு படங்களின் பாடல்கள் படத்தில் பல இடங்களில் ஒலிக்கிறது. அதில் ஜிவியின் பாடல்கள் காணாமல் போய்விடுகிறது. 

படத்தின் கலை இயக்குனருக்கு தனி பாராட்டுக்கள். அஜித்தின் ஆடை வடிவமைப்பாளருக்கும் அதே. ஹீரோயிசத்தை எப்படியெல்லாம் காட்ட வேண்டுமோ அப்படி காட்டியிருக்கிறார் அபினந்தன் ராமானுஜம். படத்தை வளவளவென நீட்டி முழக்காமல் சுருக்கமாய் முடித்த எடிட்டர் விஜய் வேலுக்குட்டியையும் கட்டாயம் பாராட்டியே ஆக வேண்டும்.

நீங்கள் அஜித் ரசிகரா, அப்படியென்றால் இந்தப் படம் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். இரண்டரை மணி நேரம்  ஒரு ஜாலியான என்டர்டெயின்மென்ட்.

Tags: good bad ugly, ajithkumar, adhik ravichandran, trisha, gv prakashkumar, arjun das

Share via: