கேங்கர்ஸ் - விமர்சனம்

24 Apr 2025

ஒரு பள்ளியை மிரட்டி நடத்தும் இரு கொடிய வில்லன்கள் - மைம் கோபி மற்றும் அருள்தாஸ் சகோதரர்கள். அவர்களின் அட்டூழியங்களால் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, சில மாணவிகள் மர்மமாக காணாமல் போகும் சம்பவங்கள் நடைபெறுகின்றன.

இந்நிலையில், துணிச்சலான ஆசிரியை கேத்ரின் தெரசா இதைப் பற்றி போலீஸ் கமிஷனருக்கு புகார் அளிக்கிறார். இதன் விளைவாக, ஒரு ரகசிய போலீஸ் அதிகாரியை விசாரணைக்கு அனுப்புகின்றனர். ஆனால் பள்ளியில் புதிதாக சேரும் உடற்பயிற்சி ஆசிரியர் சுந்தர்.சி தான் அந்த ரகசிய அதிகாரியாக இருக்கிறாரா ? இல்லை அவர் யார்? அவர் ஏன் இந்த வில்லன்களை தனியே தாக்குகிறார்? என்பது படத்தின் மீதிக் கதை.

சுந்தர்.சி தனது பாணியில் படத்தை வேகமாகவும், விறுவிறுப்பாகவும் நகர்த்துகிறார். ஒவ்வொரு காட்சியும் சிரிப்பை உறுதி செய்கிறது, மேலும் கதையில் எப்போதும் ஒரு மர்மம் நீடித்துக் கொண்டே இருக்கிறது. வடிவேலுவுக்கு சரியான ஸ்கோப் கொடுத்து, அவரை படம் முழுவதும் வரும் படி பயன்படுத்தியிருக்கிறார்.

சுந்தர்.சி மீண்டும் ஒரு முறை ஹீரோவாக தன் காமெடி-ஆக்ஷன் பாணியில் தொடர்கிறார். காதல் காட்சிகள் இல்லாமல், நகைச்சுவை மற்றும் சண்டைக் காட்சிகளில் முழுமையான கதாநாயகனாக மாற்றிக் கொண்டுள்ளார்.

வடிவேலு இந்தப் படத்தின் ரியல் ஸ்டார் ! அவரது நகைச்சுவை, முகபாவங்கள் மற்றும் டயலாக்கள் பழைய கோல்டன் ஃபார்முலாவை நினைவுபடுத்துகின்றன. அவர் இல்லாத ஸீன் கிடையாது – ஒவ்வொரு வார்த்தையும் சிரிப்பை வெடிக்க வைக்கிறது.

கேத்ரின் தெரசா நாயகியாக தன் பாத்திரத்தை நன்றாக நிரப்புகிறார். வாணி போஜன் சின்னத்திரை அடையாளத்தை மீறி, திரையில் ஒரு திடமான தோற்றத்தை வெளிப்படுத்துகிறார்.

வில்லன்கள் (மைம் கோபி, அருள்தாஸ்) மற்றும் காமெடி கேங் (பக்ஸ், முனீஷ்காந்த், சந்தான பாரதி, விச்சு) அனைவரும் ஒரே மாதிரியான வேடிக்கையான குணங்களுடன் படத்தை முழுமையாக்குகின்றனர்.

சத்யா, பின்னணி இசை கமர்ஷியல் தன்மையுடன் இருந்தாலும், பாடல்களில் ஒன்று மட்டுமே மனதில் நிற்கிறது. அந்த பள்ளி, கிராமம் என கதையோடு சேர்ந்து ஒளிப்பதிவைத் தந்துள்ளார் கிருஷ்ண மூர்த்தி). எந்த இடத்திலும் தொய்வடையாமல், வேகமாக நகரும் பாணியில் தொகுத்துள்ளார் எடிட்டிர் பிரவீண் ஆண்டனி.  வெங்கட் ராகவன், நகைச்சுவை காட்சிகளுக்கு ஸ்ட்ராங் டயலாக்கள் கொடுத்து, எதிர்பாராத திருப்பங்களால் பார்வையாளரை கவருகிறது.

"கேங்கர்ஸ்" ஒரு முழுமையான காமெடி ஸ்பெஷல் – சுந்தர்.சி மற்றும் வடிவேலுவின் ஜோடி, நிறைய சிரிப்பு, மற்றும் எப்போதும் எதிர்பாராத கதைத் திருப்பங்கள் படத்தை சுவாரசியமாக ரசிக்க வைத்துள்ளன.

Tags: gangers, sundar c, vadivelu, catherine tresa

Share via: