ப்ரைடே - விமர்சனம்

28 Nov 2025
தமிழ் சினிமாவில் கிரைம் திரில்லர் வகையில், ரவுடிகளின் வாழ்க்கையை உணர்ச்சிகரமாகவும் யதார்த்தமாகவும் சித்தரிக்கும் படைப்புகள் அவ்வப்போது வருவது வழக்கம். அந்த வரிசையில் 'ஃப்ரைடே' திரைப்படம், ஒரு சாதாரண மனிதன் எப்படி குற்ற உலகத்திற்குள் தள்ளப்படுகிறான் என்பதை, வன்முறை இல்லாமல் உணர்ச்சிகளால் நிரப்பி சொல்கிறது.

ஹரி வெங்கடேஷ் இயக்கத்தில், அனிஷ் மாசிலாமணி நாயகனாக நடித்திருக்கும் இந்தப் படம், "கத்தியை எடுத்தவனுக்கு கத்தியால் சாவு" என்ற பழமொழியை அடிப்படையாகக் கொண்டு, சஸ்பென்ஸ் நிறைந்த திருப்பங்களால் பார்வையாளர்களை கட்டிப்போடுகிறது. சிறு பட்ஜெட் படமாக இருந்தாலும், கதை சொல்லல் மற்றும் நடிப்பு வலிமையால் கவனம் ஈர்க்கும் இது, கிரைம் டிராமா ரசிகர்களுக்கு ஒரு சுவாரஸ்யமான அனுபவம்.

நாயகன் அனிஷ் மாசிலாமணி மற்றும் கே.பி.ஒய் தீனா சேர்ந்து ஒருவரை கொலை செய்ய முயற்சிக்கின்றனர். ஆனால், தீனா எதிர்பாராதவிதமாக தாக்குதலுக்கு உள்ளாக, அவரை காப்பாற்ற அனிஷ் ஒரு இடத்தில் தஞ்சம் அடைகிறார். தப்பித்த அந்த நபர், தனது ஆட்களுடன் கொலையாளிகளைத் தேடுகிறார். அதேசமயம், தீனா அனிஷுடன் இருந்துகொண்டே அவரைக் கொல்ல திட்டமிடும் கூட்டத்திற்கு உதவி செய்கிறார்.

அனிஷ் யாரை, ஏன் கொலை செய்ய முயன்றார்? தன்னுடன் இருக்கும் தீனா ஏன் கொலையாளிகளுக்கு உதவுகிறார்? இந்த சூழல்களிலிருந்து அனிஷ் தப்பினாரா இல்லையா? – இவற்றை குற்ற உலகத்தில் ஈடுபடும் ஒருவரின் வாழ்க்கை மற்றும் அத்தகைய பாதைக்கு அவர்கள் எப்படி தள்ளப்படுகிறார்கள் என்பதை விவரிக்கும் வகையில் சொல்கிறது படம்.

அனிஷ் மாசிலாமணி, மணி என்ற ரவுடி வேடத்தில் எளிமையான தோற்றம் மற்றும் அளவான நடிப்பால் ஈர்க்கிறார். ரவுடியாக மாறிய சூழலை வருந்துவது, தம்பியை அதிலிருந்து காப்பாற்ற முயல்வது போன்ற காட்சிகளில் அவரது முதிர்ச்சி தெரிகிறது.

கே.பி.ஒய் தீனா, ஆரம்பத்தில் சாதாரணமாகத் தோன்றினாலும், பின்னர் விஸ்வரூபம் எடுத்து திருப்பத்தை ஏற்படுத்துகிறார்.

மைம் கோபி, அனுபவமிக்க நடிப்பால் படத்திற்கு அடையாளமாகி, கதாபாத்திரத்தை வலுப்படுத்தியிருக்கிறார்.

ராமச்சந்திர துரைராஜ், கலையரசன், சித்ராசேனன், சித்து குமரேசன் போன்றோர் சிறு வேடங்களில் இருந்தாலும், திரைக்கதையில் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள்.

ஒளிப்பதிவாளர் ஜானி நாஷ், எளிய இடங்களை பல கோணங்களில் படம்பிடித்து, கதையின் பயங்கரத்தை உணர்த்தியிருக்கிறார்.

பாடல்கள் இல்லாவிட்டாலும், டுமேயின் பின்னணி இசை சில இடங்களில் தட்டுமுட்டு போல இருந்தாலும், பல காட்சிகளில் விறுவிறுப்பை சேர்க்கிறது.

எடிட்டர் பிரவீன்.எம், வன்முறை காட்சிகளை திரைக்கதைக்கு உதவும் வகையில் தொகுத்து, சீட் நுனி த்ரில்லை தருகிறார்.

இயக்குநர் ஹரி வெங்கடேஷ், சாதாரண கதையை சுவாரஸ்யமான திரைக்கதை மற்றும் காட்சிகளால் வெற்றிகரமாக கொடுத்திருக்கிறார்.

ரவுடிகளின் வாழ்க்கையை இரத்தம் தெறிக்க காட்டாமல், குடும்பம், சோகம், காதல், இழப்பு, பழிவாங்கல் போன்ற உணர்வுகளை இயல்பாக சித்தரித்து, திரைமொழியில் சுவைப்படுத்தியிருக்கிறார். 'ஃப்ரைடே' – கிரைம் திரில்லர் ரசிகர்களுக்கு பார்க்கத் தகுந்த படம்!

Tags: friday

Share via: