எலி - விமர்சனம்

19 Jun 2015

வடிவேலு, தமிழ் சினிமா நகைச்சுவை நடிகர்களில் தனக்கென ஒரு தனி இடத்தை வைத்திருந்தவர். ஆனால், அந்த இடத்தை இன்றும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறாரா என்பதை ‘எலி’ படம் பார்த்தால் ஒவ்வொருவரும் கண்டிப்பாக எழுப்புவார்கள். ‘தெனாலிராமன்’ என்ற சிரிக்கவே முடியாத ஒரு சரித்திர சிரிப்புப் படத்தைக் கொடுத்த யுவராஜ் மீண்டும் வடிவேலுவை வைத்து இயக்கியிருக்கிறார். இப்படி ஒரு வாய்ப்பு வேறு எந்த இயக்குனருக்கும் கிடைக்காது. ஆனால், அதை முழுவதுமாக வீணடித்திருக்கிறார் இயக்குனர். தமிழிலேயே எத்தனையோ உளவாளிக் கதைகளைப் பார்த்திருக்கிறோம். ஏன், டிவியில் கூட ஆங்கிலத்திலிருந்து டப்பிங் ஆன எவ்வளவோ படங்களைப் போட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள். அவற்றிலிருந்து எதையாவது ஒன்றை ‘சுட்டாவது’ நம்மை சிரிக்க வைத்திருக்கலாம். கதைக்காக இயக்குனர் துளி கூட கஷ்டப்படவில்லை. ரஜினிகாந்த் நடித்த ‘பாண்டியன்’ கதையைத்தான் சில வருடங்களுக்கு முன்பாக விஜய் நடிக்க ‘போக்கிரி’ என்ற பெயரில் உல்டா செய்தார்கள். அதையே மீண்டும் 1960ம் வருடத்தில் நடப்பது போல கொஞ்சம் ரீவைன்ட் செய்து உல்டா செய்திருக்கிறார்கள். உளவாளி எதையாவது உருப்படியாக பண்ண வேண்டுமே. ஒரு காட்சி கூட அப்படி இல்லையே இயக்குனர் ஸார். வடிவேலு, உடனடியாக இயக்குனர் யுவராஜை விட்டு விலகி, உண்மையிலேயே சிரிக்கும்படியான கதையுடன் கோடம்பாக்கத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் எவ்வளவோ இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம். ‘தெனாலிராமன், எலி’ என இரண்டு படங்களை அவரை முழுவதுமாக நம்பி கொடுத்து ஏமாந்து போய் நிற்கிறார் வடிவேலு என்றுதான் சொல்ல வேண்டும். நகைச்சுவை நடிப்பைப் பொறுத்தவரையில் தான் ஒரு யானைதான் என்பதை ஒரு காட்சியில் கூட நிரூபிக்கவில்லை எடிவேலு. எலி என்ற பெயருக்கேற்றபடியும் எலி அளவிற்குக் கூட சிரிக்க வைக்கவில்லை. அடுத்த படத்திலாவது நம்பி வரும் எங்களை ஏமாற்ற மாட்டீர்கள் என நினைக்கிறோம் மிஸ்டர் வடிவேலு. இடைவேளைக்குப் பின்னர் படத்தின் நாயகி வருவது தமிழ் சினிமாவில் நடக்காத ஒன்று. ஹோட்டலில் நடனம் ஆடுபவராக வருகிறார் படத்தின் நாயகி சதா. வடிவேலு இவரைப் பார்த்து காதல் கொள்கிறாரா அல்லது அழகில் மயங்கி நிற்கிறாரா என்பதைத் தெரிந்து கொள்வதற்குள் படத்தை முடித்து விடுகிறார்கள். ‘ஜெயம்’ படத்தில் பார்த்து ரசித்த சதா இப்படி ஆகி விட்டார்களே. வில்லத்தனமே வில்லனாக பிரதீப் ராவத். உருட்டல், மிரட்டல் எதுவும் இல்லாத ஒரு வில்லன். காவல் துறை அதிகாரியாக ஆதித்யா. வடிவேலுவைத் தவிர இவர்களுக்குத்தான் நடிப்பதற்கென சில காட்சிகள். மற்றபடி வடிவேலுவின் நகைச்சுவைக் குழுவினர் ஆங்காங்கே வருகிறார்கள். வித்யாசாகர் இசையில் பாடல்கள் எதுவும் ரசனையாக உருவாக்கப்படவில்லை. பால் லிவிங்ஸ்டனின் ஒளிப்பதிவும், தோட்டா தரணியின் அரங்க அமைப்பும்தான் படத்தில் பாராட்டப்பட வேண்டிய விஷயங்களாக உள்ளது.  

Share via: