காலேஜ் குமார் - விமர்சனம்

07 Mar 2020

தயாரிப்பு - எம்ஆர் பிக்சர்ஸ்
இயக்கம் - ஹரி சந்தோஷ்
இசை - குதுப் இ கிரிபா
நடிப்பு - ராகுல் விஜய், பிரியா வட்லமானி, பிரபு, மதுபாலா
வெளியான தேதி - 6 மார்ச் 2020
நேரம் - 1 மணி நேரம் 57 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5

அறிமுகம்

கன்னடத்தில் ‘காலேஜ் குமார்’ என்ற பெயரில் 2017ம் ஆண்டு வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்ற படம் தமிழில் அதே பெயரில் தயாராகி வெளிவந்துள்ளது. 1996ம் ஆண்டு வெளிவந்த ‘பாஞ்சாலங்குறிச்சி’ படத்திற்குப் பிறகு 24 வருடங்கள் கழித்து பிரபு, மதுபாலா மீண்டும் இணைந்து நடித்திருக்கிறார்கள். இப்படத்தை அறிமுக இயக்குனர் ஹரி சந்தோஷ் இயக்கியுள்ளார்.

கதை 

சரியாகப் படிக்காத காரணத்தால் ஆபீஸ் பியூனாக இருக்கிறார் பிரபு. தன் மகனை படிக்க வைத்து ஆடிட்டர் ஆக்க வேண்டும் என்ற கனவுடன் இருக்கிறார். கல்லூரியில் படிக்கும் மகனோ சரியாகப் படிக்காமல், பிட் அடித்து மாட்டி கல்லூரியை விட்டு நீக்கப்படுகிறார். அப்போது அப்பா, மகனுக்கு இடையில் நடக்கும் சண்டையில் அப்பா பிரபுவிடம் படித்துப் பார்த்தால்தான் படிக்கும் கஷ்டம் தெரியும் என்கிறார். பிரபு, தானே காலேஜ் சென்று படிப்பதாக சவால் விடுகிறார். அப்பாவைப் படிக்க வைக்கும் செலவை மகன் ஏற்பதாகக் கூறுகிறார். பிரபு காலேஜ் செல்ல, மகன் அதே காலேஜில் கான்டீன் ஏற்று நடத்த பிரபு தன் சவாலில் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

நடிப்பு

அறிமுக நாயகன் ராகுல் விஜய் தன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். முதல் படம் என்று சொல்ல முடியாத நடிப்பு. படத்தின் நாயகி பிரியா வட்லமானிக்கு அதிக வேலையில்லை. எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் தன் சிறப்பைக் கொடுப்பார் பிரபு, இந்தப் படத்திலும் அப்படியே. அதிலும் காலேஜ் சென்ற பின் அவர் அடிக்கும் லூட்டிகள் கலகலப்பானவை. அம்மா கதாபாத்திரத்தில் மும்பைத் தமிழ் பேசி பொருத்தமில்லாமல் நடித்திருககிறார் மதுபாலா.

நிறை

படிப்புக்கு வயது ஒரு தடையல்ல என்ற நல்ல கருத்தைச் சொல்லியிருக்கும் படம். முயன்றால் முடியாது இல்லை என்பதை ஆணித்தரமாகச் சொல்லியிருக்கிறார்கள்.

குறை

இசையமைப்பாளர் குதுப் இ கிரிபா பாடல்களில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். ஏற்கெனவே, ‘அம்மா கணக்கு’ என்ற தமிழ்ப் படம் இதே போன்றதொரு கதையுடன் வெளிவந்தது. அந்தப் படத்தை இந்தப் படம் ஞாபகப்படுத்துகிறது. 

Tags: college kumar, prabhu, madhubala, rahul vijay, hari santhosh

Share via: