பைக்கர் - விமர்சனம்

05 Apr 2026

மோட்டார் சைக்கிள் பந்தய உலகின் வேகமும் ஆபத்தும், குடும்ப பிணைப்பின் உணர்ச்சிகளும் ஒன்றிணைந்து உருவாக்கியிருக்கும் ஒரு துடிப்பான திரைப்படம் ‘பைக்கர்’. விளையாட்டு, உறவுகள், துரோகம், மீட்பு என அனைத்தையும் சமநிலையில் கலந்து ரசிகர்களுக்கு ஒரு முழுமையான காட்சி அனுபவத்தை வழங்கியிருக்கிறது இப்படம்.

தந்தை ராஜசேகர் போன்று தானும் மோட்டார் சைக்கிள் பந்தய வீரராக உயர வேண்டும் என்ற எண்ணத்தில் சர்வானந்த் துடிக்கிறார். அவரது ஆர்வத்தையும் திறமையையும் கண்டு, அவரது குருவான தந்தை ராஜசேகர், மகன் இத்துறையில் மிகப் பெரிய சாதனையாளராக உருவாவார் என்று முழு நம்பிக்கையுடன் இருக்கிறார். சர்வானந்தும் இந்தத் துறையில் யாருக்கும் இல்லாத தனித்துவமான திறன்களுடன் வலம் வருகிறார்.

ராஜசேகர் எதிர்பார்த்ததைப் போலவே, இந்திய மோட்டார் சைக்கிள் பந்தயத்தை உலக அரங்குக்கு எடுத்துச் செல்லும் வாய்ப்பு மகன் மூலம் கிடைக்கிறது. தன் கனவை மகன் நிறைவேற்றுவான் என்று அளவற்ற நம்பிக்கையில் இருக்கும் ராஜசேகரை சர்வானந்த் ஏமாற்றிவிடுகிறார். முதல் பந்தயம் முடிந்ததும் அவர் பந்தயத்திலிருந்தும், தந்தையிடமிருந்தும் விலகி சென்றுவிடுகிறார்.

மகனின் தவறால் ராஜசேகர் தண்டிக்கப்படுகிறார். மோசடி நபர், துரோகி என்ற அவப்பெயரும் அவருக்கு ஏற்படுகிறது. இதனால் மோட்டார் சைக்கிள் பந்தய பயிற்சியாளர் பணியைத் தொடர முடியாத நிலை உருவாகிறது. தந்தையிடமிருந்து விலகி வாழ்ந்து வந்த சர்வானந்த், தந்தையின் துயரத்தை அறிந்து அதை மாற்றுவதற்காக மீண்டும் பந்தயக் களத்தில் இறங்க முடிவு செய்கிறார். அவரது இந்த முடிவு தந்தையின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதா? தந்தையைப் பிரிந்து சென்றதற்கான உண்மையான காரணம் என்ன? என்பதை திரைக்கு ஏற்ற காட்சி விருந்தாகச் சொல்கிறது ‘பைக்கர்’.

சர்வானந்த், மோட்டார் சைக்கிள் பந்தய வீரர் கதாபாத்திரத்துக்காக மிகக் கடுமையான உழைப்பைத் தந்திருப்பது திரையில் தெளிவாகத் தெரிகிறது. இரு வேறு தோற்றங்களுக்காக உடல் எடையைக் குறைத்து, ஸ்டைலான லுக், உடற்பயிற்சி என அனைத்திலும் ஒரு உண்மையான விளையாட்டு வீரராக ஜொலிக்கிறார்.

நாயகியாக நடித்த மாள்விகா நாயர், காதலியாக இருக்கும் போது சாகசக் காதலனை ஊக்குவித்து தைரியம் சொல்லும் காட்சிகளிலும், கணவரான பிறகு பந்தயத்தின் ஆபத்தை உணர்ந்து பதறும் மனைவியாகவும் அற்புதமாக நடித்திருக்கிறார். பாடல் காட்சிகளில் ஆடை குறைவுடன் ஆற்றலுடன் ஆடி அசத்தியிருக்கிறார்.

நாயகனின் தந்தையாக ராஜசேகர், இந்திய மோட்டார் சைக்கிள் பந்தயத்தை உலக அளவுக்கு எடுத்துச் செல்ல விரும்பும் பயிற்சியாளராக சிறப்பாக உருவாகியிருக்கிறார். ஹீரோவுக்கு இணையான கதாபாத்திர வடிவமைப்பும், அவரது சரியான அளவிலான நடிப்பும் படத்தின் முதுகெலும்பாக திகழ்கிறது.

விளையாட்டை வணிகமாக்கி லாபம் பார்க்கும் தொழிலதிபர்களைப் பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் அத்துல் குல்கர்னி கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி கவனத்தை ஈர்க்கிறார்.

கேமராவுக்கு முன் நட்சத்திரங்கள் பிரகாசித்தாலும், கேமராவுக்குப் பின்னால் உழைக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பை மறைக்காமல் இப்படம் அவர்களையே உண்மையான ஹீரோக்களாகக் காட்டியிருக்கிறது.

ஒளிப்பதிவாளர் ஜெ.யுவராஜ், இசையமைப்பாளர் ஜிப்ரான், படத்தொகுப்பாளர் அனில் குமார் பலாசா மற்றும் இவர்களை ஒருங்கிணைத்த இயக்குநர் அபிலாஷ் ரெட்டியின் அசாத்திய உழைப்பு படம் முழுவதும் உணர முடிகிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் பந்தயக் காட்சி அவர்களின் கூட்டு முயற்சியின் உச்சமாக வியக்க வைக்கிறது.

எத்தனை கேமராக்கள் பயன்படுத்தப்பட்டன என்பது தெரியாவிட்டாலும், ஒவ்வொரு கோணத்திலும் ஜெ.யுவராஜ் போட்ட கடுமையான உழைப்பு தெரிகிறது. பந்தயக் காட்சிகளை மிரட்டலாகவும், பாடல் காட்சிகளை கலர்ஃபுல் ஆகவும் படமாக்கியிருக்கிறார். சர்வானந்தை உண்மையான பைக்கர் போலக் காட்டியதோடு, கதைக்களத்தையே புதிய வடிவத்தில் முன்வைத்து “இது சாதாரணப் படம் அல்ல” என்பதை ஒவ்வொரு ஷாட்டிலும் நிரூபித்திருக்கிறார்.

கமர்ஷியல் பாடல்களைத் தந்து கவரும் ஜிப்ரான், பின்னணி இசையில் பிரம்மாண்டமாக வேலை செய்திருக்கிறார். ஆபத்து நிறைந்த பந்தயக் காட்சிகளுக்கு அவர் கொடுத்த தனித்துவமான பின்னணி இசை, அந்தக் காட்சிகளின் தீவிரத்தையும் உழைப்பையும் பார்வையாளர்களுக்கு உணர்த்துகிறது.

பல கேமராக்களில் பதிவான காட்சிகளை சரியான கோணத்தில் தொகுத்து, பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் உட்கார வைக்கும் வேலையை அனில் குமார் பலாசா சிறப்பாகச் செய்திருக்கிறார். விளையாட்டுப் படங்களின் பாணியில் கதை நகர்ந்தாலும், நேர்த்தியான லீனியர் நேர்த்தியுடன் தொய்வின்றி நகர்த்தியிருக்கிறார். குறிப்பாக பந்தயக் காட்சிகளின் தொகுப்பு அற்புதம்.

அபிலாஷ் ரெட்டி, எம்.வி.எஸ். பரத்வாஜ், ஷ்ரவன் மடலா ஆகியோரின் கதை மற்றும் திரைக்கதை, ஆபத்து நிறைந்த பந்தயத்தை மையமாகக் கொண்டாலும், அதை குடும்ப உணர்வுகளுடன் இணைத்து, விளையாட்டின் நுணுக்கங்கள், குடும்பத்தினரின் அச்சம் என அனைத்தையும் சமரசமாகக் கையாண்டிருக்கிறது.

ஒரு கனவை பிரமாண்டமாகக் கற்பனை செய்வது எளிது; ஆனால் அதை திரைக்கு ஏற்றவாறு உயிர்ப்புடன் கொண்டு வருவது சவாலானது. அந்தச் சவாலை அபிலாஷ் ரெட்டி திறமையுடன் சமாளித்திருக்கிறார்.

படத்தில் இடம்பெற்ற அனைத்து பந்தயக் காட்சிகளும் பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் உட்கார வைக்கின்றன. அதிலும் கிளைமாக்ஸ் பந்தயம் மற்றும் பைக்கர்களின் உயிர் பறிக்கும் பயணம் மிரட்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருப்பது படத்தின் பெரும் பலம்.

கதை பயணம் சில இடங்களில் வழக்கமான பாணியில் இருந்தாலும், முதல் பாதி சற்று தொய்வாக இருந்தாலும், இயக்குநர் அபிலாஷ் ரெட்டி கதைக்களத்தையும் காட்சிகளையும் கையாண்ட விதத்தில் அந்தத் தொய்வை சுலபமாக மீட்டெடுத்திருக்கிறார். முழு திரைப்படத்தையும் ஒரு உயர்தரமான காட்சி விருந்தாக மாற்றி, ஒவ்வொரு கோணத்தையும் ரசிக்க வைத்திருக்கிறார்.

Tags: biker, sharwanand, dr rajasekar, malavika nair

Share via: