‘வித் லவ்’ படத்திற்காக 250 டிரோன்களுடன் கடற்கரையில் ஷோ
02 Feb 2026
தமிழ் சினிமா விளம்பர வரலாற்றில் புதுமையான ஒரு தருணமாக, ‘வித் லவ்’ திரைப்படக் குழு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் பிரம்மாண்டமான ட்ரோன் ஷோ ஒன்றை பொதுமக்கள் முன்னிலையில் நடத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
சுமார் 250 டிரோன்கள் ஒருங்கிணைந்து, படத்தின் டைட்டிலும், படக்குழுவின் பெயர்களும் வானில் ஒளிச்சித்திரங்களாக வரைந்த காட்சி, கடற்கரையில் கூடியிருந்த மக்களை வியப்பில் ஆழ்த்தியது. பொதுமக்கள் பெரும் உற்சாகத்துடன் கைதட்டி ரசித்ததுடன், அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து மகிழ்ந்தனர்.
சியோன் பிலிம்ஸ் சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் இணைந்து வழங்க, பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் பேமிலி' இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள, “வித் லவ் ( With Love )” திரைப்படம் வரும் 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
பட வெளியீட்டை ஒட்டி படக்குழு பலமுனைகளில் பல புதுமையான விளம்பரங்களைச் செய்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக சென்னை பெசண்ட் நகர் கடற்கரையில் பிரம்மாண்டமான டிரோன் ஷோ நடைபெற்றது.

தமிழ் சினிமாவில் இவ்வளவு பெரிய அளவில், திரைப்பட விளம்பரத்திற்காக ட்ரோன் ஷோ நடத்தப்பட்ட முதல் முயற்சி என்பதால், இந்த நிகழ்வு ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், பொதுமக்களிடையிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. வானில் மின்னும் எழுத்துகளாக ‘With Love’ தோன்றிய தருணம், காதலின் உணர்வையும், இளமை துள்ளலையும் ஒருசேர வெளிப்படுத்தியது.
இந்த தனித்துவமான நிகழ்வில், ‘வித் லவ்’ படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு, ரசிகர்களுடன் அந்த தருணத்தைப் பகிர்ந்து கொண்டனர். சினிமா விளம்பரம் என்பதையும் தாண்டி, இது ஒரு நவீன கலை நிகழ்வாகவும் பேசப்பட்டது. சமூக வலைதளங்களில் இந்த ட்ரோன் ஷோ வீடியோக்கள் வைரலாகி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது.
அறிமுக இயக்குநர் மதன் இப்படத்தை இயக்கி உள்ளார். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். K.சுரேஷ் குமார் எடிட்டிங் பணிகளை செய்கிறார். ராஜ்கமல் கலை இயக்கம் செய்துள்ளார். உடை வடிவமைப்பாளராக ப்ரியா ரவி பணியாற்றியுள்ளார்.
Tags: with love

