இயக்குனர், கதாசிரியர், நடிகர் விசு மறைவு

22 Mar 2020

தமிழ் சினிமாவில் குடும்பப் பாங்கான படங்களைக் கொடுத்து பெண்களை அதிகம் கவர்ந்த இயக்குனர், நடிகர் விசு உடல்நலக் குறைவால் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 74.

இயக்குனர் பாலசந்தரிடம் உதவி இயக்குனராகப் பணி புரிந்தவர். பல திரைப்படங்களுக்குக் கதை எழுதியவர். 

1982ம் ஆண்டு வெளிவந்த ‘கண்மணிப் பூங்கா’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

‘மணல் கயிறு, டௌரி கல்யாணம், புயல் கடந்த பூமி, ராஜதந்திரம், வாய் சொல்லில் வீரனடி, நாணயமில்லாத நாணயம், புதிய சகாப்தம், அவள் சுமங்கலிதான், கௌட்டி மேளம், சிதம்பர ரகசியம்’ என படங்களை இயக்கினாலும், 1986ம் ஆண்டு வந்த ‘சம்சாரம் அது மின்சாரம்’ படம்தான் அவரை அதிகம் பிரபலமடைய வைத்தது. அந்த ஆண்டிற்கான சிறந்த என்டர்டெயின்மென்ட் படத்திற்கான தேசிய விருதை வென்றது இப்படம்.

தொடர்ந்து ‘திருமதி ஒரு வெகுமதி, காவலன் அவன் கோவலன், பெண்மணி அவள் கண்மணி, சகலகலா சம்பந்தி, வரவு நல்ல உறவு, மீண்டும் சாவித்ரி, சிகாமணி ரமாமணி’ ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். அவர் கடைசியாக இயக்கிய படமான ‘சிகாமணி ரமாமணி’ 2001ம் ஆண்டு வெளிவந்தது.

இயக்குனராக பல படங்களை இயக்கினாலும், தொடர்ந்து பல வெற்றிப் படங்களுக்கு கதை எழுதிக் கொடுத்திருக்கிறார்.

ரஜினிகாந்த் நடித்த ‘சதுரங்கம், தில்லு முல்லு, நெற்றிக்கண், புதுக்கவிதை, நல்லவனுக்கு நல்லவன், மிஸ்டர் பாரத்’ ஆகிய படங்களுக்கு கதை எழுதியிருக்கிறார்.

நடிகராகவும் பல படங்களில் நடித்திருக்கிறார்.  சன் டிவியில் பல வருடங்கள் ஒளிபரப்பான ‘அரட்டை அரங்கம்’ நிகழ்ச்சியை நடத்தியுள்ளார்.

விசுவின் மனைவி பெயர் உமா. பல படங்களில் கதாநாயகியின் பெயராக இந்தப் பெயரைத்தான் விசு வைத்திருப்பார். அவருக்கு மூன்று மகள்கள் இருக்கிறார்கரள்.

கடந்த சில வருடங்களாகவே உடல்நலம் சார்ந்த சில பிரச்சினைகள் அவருக்கு இருந்து வந்த நிலையில் இன்று மாலை அவர் மறைந்தார். அன்னாரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

Tags: visu, arattai arangam, samsaram athu minsaram

Share via: