பொய்ப் பிரச்சாரங்களை நம்பாதீர்கள் - விஜய் பேச்சு

28 Jun 2024

தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்களைப்பிடித்த மாணவர் மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று சென்னையில் நடைபெற்றது. அதன் தலைவர் நடிகர் விஜய் கலந்து கொண்டு உதவிகளையும் பரிசுகளையும் வழங்கினார்.

அதில் விஜய் "நீங்கள் அனைவருமே வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை நோக்கி போகிறீர்கள். உங்களில் சிலருக்கு அடுத்த எந்தத் துறையை தேர்வு செய்யலாம் என்ற குழப்பம் ஏற்படலாம். அனைத்து துறையுமே நல்ல துறை தான். எந்த துறையை வேண்டுமானாலும் தேர்வு செய்து உங்களுடைய 100% உழைப்பைப் போட்டீர்கள் என்றால் கண்டிப்பாக வெற்றி நிச்சயம். உங்களுக்கு பிடித்த துறையைத் தேர்வு செய்யுங்கள். பெற்றோர்கள், ஆசிரியர்கள் என அனைவரிடமும் பேசுங்கள்.

உலகளவில் புகழ்பெற்ற நல்ல மருத்துவர்கள் எல்லாம் தமிழகத்தில் இருக்கிறார்கள். தமிழகத்திற்கு இப்போது என்ன தேவை என்றால் நல்ல தலைவர்கள். தலைவர்கள் என்பது வேறு அரசியல் ரீதியாக மட்டும் சொல்லவில்லை, ஒரு துறையைத் தேர்வு செய்தால் அதன் தலைமை இடத்துக்கு உங்களால் எளிதாக வரமுடியும். அதைத் தான் இன்னும் தலைவர்கள் தேவை என்று சொன்னேன்.

வருங்காலத்தில் அரசியலும் ஒரு கேரியராக வர வேண்டும் என்பது என் விருப்பம். நல்ல படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். நல்ல படித்தவர்கள் தலைவர்களாகவும் வரவேண்டும். அதே போல் நீங்கள் படிக்கும் போதே மறைமுகமாக அரசியலில் ஈடுபட முடியும். தினமும் செய்திதாளில் செய்தி வரும் முறையை தெரிந்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் செய்தி வேறு, கருத்து வேறு என்பதை புரிந்துக் கொள்வீர்கள்.

சமூக வலைதளத்தில் நல்லவர்களை கெட்டவர்களாகவும், கெட்டவர்களை நல்லவர்களாகவும் காண்பிப்பதை பார்க்கிறோம். அனைத்தையும் பாருங்கள், ஆனால் எது உண்மை என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.

அப்போது தான் நாட்டில் என்ன பிரச்சினை, மக்களுக்கு என்ன பிரச்சினை என்பது தெரிய்வரும். அப்படி தெரிந்தால் ஒருசில அரசியல் கட்சிகள் செய்யும் பொய் பிரச்சாரத்தை நம்பாமல் எது சரி, தவறு என்பதை தெரிந்து நல்ல தலைவர்களைத் தேர்வு செய்யும் விசாலமான உலகப் பார்வை உங்களுக்கு வந்துவிடும். அதைவிட ஒரு சிறந்த அரசியல், வேறு எதுவுமே இல்லை.

நல்ல நண்பர்களைத் தேர்வு செய்யுங்கள். தவறான பழக்கவழக்கங்களில்  ஈடுபடாதீர்கள். உங்களுடைய அடையாளத்தை எந்தக் காரணத்தைக் கொண்டும் இழந்துவிடாதீர்கள்.

சமீபத்தில் தமிழகத்தில் போதை பொருட்கள் பயன்பாடு இளைஞர்கள் மத்தியில் அதிகமாகிவிட்டது. பெற்றோர், அரசியல் கட்சித் தலைவர் என்ற முறையில் எனக்கே பயமாக இருக்கிறது. சில சமயங்களில் அரசாங்கத்தை விட நமது வாழ்க்கையை நாம் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். நம்மளுடைய பாதுகாப்பு நமக்கு முக்கியம். " இவ்வாறு கூறியுள்ளார் .

Tags: vijay, thamizhaga vetri kazhagam

Share via: