தில் ராஜா - நம்பிக்கையுடன் காத்திருக்கும் விஜய் சத்யா

20 Jul 2024

ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில், அம்ரேஷ் இசையமைப்பில், விஜய் சத்யா, ஷெரின் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘தில் ராஜா’.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் கதாநாயகனாக நடித்து வெளிவர உள்ள படம் இது. ஒரு ஆக்ஷன் திரில்லராக உருவாகியிருக்கும் படம்.

விஜய், சரத்குமார், அர்ஜுன் உள்ளிட்டவர்கள் நடித்த படங்களை இயக்கிய, தமிழில் பல கமர்ஷியல் வெற்றிப் படங்களைக் கொடுத்த ஏ.வெங்கடேஷ் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

இப்படம் குறித்து விஜய் சத்யா பேசுகையில்,

“நல்ல கதைக்காக எத்தனை வருடங்கள் காத்திருந்தாலும் பரவாயில்லை என்று தோன்றியது, அதனால் தான் நான் சிறிது காலம் இடைவெளி எடுத்துக் கொண்டேன். தற்போது அதற்கான பலன் தான் ஏ.வெங்கடேஷ் சார் படத்தில் நாயகனாக நடித்திருக்கிறேன்.

இந்தப் படத்தில் இயக்குநர் என்ன சொன்னாரோ அதைத்தான் நான் செய்திருக்கிறேன். அவர் பல வெற்றிகளைப் பார்த்தவர், நான் வெற்றிக்காக காத்துக்கொண்டிருப்பவன், அதனால் வெங்கடேஷ் சாரிடம் நான் சரணடைந்து விட்டேன். அவர் சொன்னதை எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் செய்திருக்கிறேன்.

எதிர்பாராமல் நடக்கும் ஒரு மோதல், எதிர் முனையில் இருப்பவர்கள் பலம் வாய்ந்தவர்களாக இருந்தால் என்னவாகும்,  அதன் மூலம் நாயகனுக்கும், அவனது குடும்பத்திற்கும் ஏற்படும் பாதிப்பு, அதில் இருந்து அவர்கள் எப்படி மீண்டு வருகிறார்கள், என்பதை முழுக்க முழுக்க கமர்ஷியல் ஆக்‌ஷன் படமாக மட்டும் இன்றி சஸ்பென்ஸ் திரில்லர் பாணியிலும் இயக்குநர் ஏ.வெங்கடேஷ் சார் சொல்லியிருக்கிறார்.
 
நடுத்தர குடும்பத் தலைவனாக இந்த படத்தில் நடித்திருக்கிறேன். ஷெரின் நாயகியாக நடித்திருப்பது படத்திற்கு பலம் தான். அவர் ஏற்கனவே பெரிய பெரிய ஹீரோக்களுடன் நடித்தவர், சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பிரபலம் அடைந்திருக்கிறார். அதனால் அவர் படத்தில் இருப்பது பிளஸ் தான். ஷெரினுடன் நடித்த நடிகர்கள் பெரிய நடிகர்களாக உயர்ந்திருப்பதால் அவரை நாயகியாக போட வேண்டும் என்று நான் கேட்கவில்லை, இயக்குநர் தான் தேர்வு செய்தார். ஆனால், ஷெரினின் செண்டிமெண்ட் ஒர்க் அவுட் ஆனால் எனக்கு சந்தோஷம் தான்.

‘கே.பி.ஒய்’ பாலா காமெடியில் கலக்கியிருக்கிறார். அவரது டைமிங் சரியாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. நிச்சயம் ரசிகர்களுக்கு பாலாவின் காமெடி காட்சிகள் பிடிக்கும். இயக்குநர் ஏ.வெங்கடேஷ் சார் வில்லனாக, அரசியல்வாதி வேடத்தில் நடித்திருக்கிறார்.

அம்ரீஷ் இசையில் பாடல்கள் சிறப்பாக வந்திருப்பதோடு, அதை படமாக்கிய விதத்தையும் பலர் பாராட்டி வருகிறார்கள், நிச்சயம் ஒளிப்பதிவாளருக்கும் நல்ல எதிர்காலம் உண்டு.

இயக்குநர் ஏ.வெங்கடேஷ் சாரின் படங்கள் பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை. ஒரு ஹீரோவின் முழு திறமையை வெளிப்படுத்தும் அனைத்து அம்சங்களும் அவர் படத்தில் இருக்கும். அப்படித்தான் இந்தப் படத்திலும் எனது திறமையை முழுமையாக வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்.

குடும்பமாக பார்க்கக் கூடிய கமர்ஷியல் கதையாக இருந்தாலும், அதில் ஆக்‌ஷன் மற்றும் சஸ்பென்ஸ் திரில்லர் காட்சிகளும் பாராட்டும்படி இருக்கும். இந்த படத்தின் மீது எனக்கு பெரிய நம்பிக்கை இருக்கிறது, நிச்சயம் ‘தில் ராஜா’ படம் தமிழ் சினிமாவில் எனக்கான இடத்தை பெற்று தரும் என்று நம்புகிறேன். அடுத்தும் இயக்குனர் ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கப் போகிறேன்,” என்றார்.

 

Tags: vijay sathya, dil raja, a venkatesh, sherin, amresh

Share via: