‘மங்காத்தா 2’ எப்போது? – இயக்குநர் வெங்கட்பிரபு பதில்
29 Aug 2024
‘மங்காத்தா 2’ நடக்குமா என்ற கேள்விக்கு இயக்குநர் வெங்கட்பிரபு பதிலளித்துள்ளார்.
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த், சிநேகா, மீனாட்சி செளத்ரி, மோகன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கோட்’. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கான விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
’கோட்’ விளம்பரப்படுத்தும் நிகழ்வில், ‘மங்காத்தா 2’ குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார் வெங்கட்பிரபு. அதில் அவர் கூறியிருப்பதாவது:
“’மங்காத்தா 2’ கண்டிப்பாக நடக்கும். எப்போது என்பது தெரியாது. அந்தப் படத்தினை அஜித் சாரை தவிர்த்து வேறு யாரை வைத்து எடுத்தாலும் எனக்கு அடி விழும். சமீபத்தில் கூட ’விடாமுயற்சி’ படப்பிடிப்பின் போது அஜர்பைஜானில் அஜித் சாரை சந்தித்து பேசினேன். சில கதைகள் குறித்து விவாதித்தோம். எப்போது நடக்கும் என்பது தெரியவில்லை. விஜய் சார் – அஜித் சார் இருவருக்குமே இருவரும் இணைந்து நடிக்கும் படத்தினை இயக்க ஆசைப்படுகிறேன் என்பது தெரியும். அதற்கான கதையும் என்னிடம் இருப்பதும் தெரியும்”
இவ்வாறு வெங்கட்பிரபு தெரிவித்துள்ளார்.
Tags: mankatha 2, venkat prabhu, ajith