ஜெய், வாணி போஜன் நடிக்கும் ‘டிரிபிள்ஸ்’ இணையத் தொடர்
04 Dec 2020
ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ், ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் இணைந்து வழங்க உள்ள தமிழ் இணையத் தொடர் ‘டிரிபிள்ஸ்’.
ஜெய், வாணி போஜன். விவேக் பிரசன்னா, ராஜ்குமார், மாதுரி எம்ஜே, மற்றும் பலர் இத் தொடரில் நடிக்கிறார்கள். ஜெய் முதன் முதலாக நடிக்கும் இணையத் தொடர் இது.
ராம், மாது மற்றும் சீனு ஆகிய மூன்று நண்பர்களின் வாழ்வில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகலிருந்து அவர்கள் எப்படி வெளிவருகிறார்கள் என்பதை சுவாரசியமாக விவரிக்கும் தொடர்தான் ‘டிரிபிள்ஸ்’.
தொழிலில் பங்குதாரர்களாகவும் இணைபிரியா நண்பர்களாகவும் இருக்கும் மூன்று பேருடைய வாழ்வில் நடக்கும் குழப்பங்களே இதன் கதை.
திருமணத்தில் ஏற்பட்ட ஒரு குழப்பத்திலிருந்து தப்பித்துத் தங்களைத் தாங்களே கண்டறிவதற்காக கோவாவிற்கு செல்லும் நண்பர்களை, ஒரு கடன்காரர் துரத்த, அதைத் தொடர்ந்து நடக்கும் களேபரங்கள் 8 பகுதிகளாக உருவாக்கப்பட்டுள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க சாருகேஷ் சேகர் இயக்குகிறார். கிரேஸி மோகனின் காமெடி நடையில் பாலாஜி ஜெயராமன் வசனங்களை எழுதியுள்ளார்.
இத்தொடருக்காக உருவாக்கப்பட்டுள்ள காதல் பாடலான “நீ என் கண்ணாடி...” என்ற பாடலை தற்போது வெளியிட்டுள்ளார்கள். விஷால் சந்திரசேகர் இசையமைக்க, இயக்குநர் சாருகேஷ் சேகர் பாடலை எழுதியுள்ளார். முதன்மைக் கதாபாத்திரங்களுக்கு இடையேயான உறவின் ஆழத்தை சொல்லும் இப்பாடலை கோவிந்த் பிரசாத் மற்றும் சிந்தூரி விஷால் பாடியுள்ளனர்.
கலகலப்புக்குப் பஞ்சமில்லாத காமெடி தொடரான ‘டிரிபிள்ஸ்’, டிசம்பர் 11, 2020 அன்று டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி தளத்தில் வெளியாக உள்ளது.
Tags: triples, jai, vani bhojan, karthik subbaraj