நயன்தாரா நடித்த ‘அறம்’ படம் முதல் சமீபத்தில் ஓடிடியில் வெளியான ‘க/பெ.ரணசிங்கம்’ படம் வரை தனித்துவமான படங்களை தயாரிக்கும் நிறுவனமாக இருக்கும் கேஜேஆர் ஸ்டுடியோசின் அடுத்த தயாரிப்பு ‘ரூபம்’.
அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் விதத்தில் ஒரு த்ரில்லர் படமாக இப்படம் உருவாகி வருகிறது. படத்தின் கதையை இயக்குனர் தாமரைச்செல்வன் சொன்ன கதை மிகவும் பிடித்துவிட உடனடியாக படத் தயாரிப்பில் இறங்கிவிட்டதாம் நிறுவனம்.
பார்வதி நாயர் கதையின் நாயகியாக நடிக்க உள்ளார். முன்னணி இந்தி நடிகர் ஃப்ரெடி டாருவாலா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். அவர் தமிழில் ஒப்பந்தமாகியுள்ள முதல் படம் இது. இதர நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
ஒளிப்பதிவாளராக சுதர்சன் ஸ்ரீனிவாசன், இசையமைப்பாளராக ஜிப்ரான், சண்டைக் காட்சிகளுக்கு இயக்குநராக பீட்டர் ஹெய்ன், எடிட்டராக சரத்குமார், கலை இயக்குநராக கோபி ஆகியோர் பணிபுரிய உள்ளனர்.
'ரூபம்' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கவுள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகளில் படக்குழு பணிபுரிந்து வருகிறது.
2021ம் ஆண்டில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.