ட்ரிப் - நகைச்சுவை கலந்த த்ரில்லர், பிப்ரவரி 5 வெளியீடு
26 Jan 2021
சாய் பிலிம் ஸ்டுடியோஸ் சார்பில் விஸ்வநாதன் மற்றும் பிரவீன்குமார் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில், சித்துகுமார் இசையமைப்பில், சுனைனா, யோகிபாபு, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பிரவீன் குமார், VJ சித்து, VJ ராகேஷ், கல்லூரி வினோத், ராஜேஷ் சிவா அதுல்யா சந்திரா, லக்ஷ்மி ப்ரியா, சத்யா, மேக் மணி, சதீஷ், அருண் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ட்ரிப்’.
இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
விழாவினில் இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் பேசுகையில்,
“இயக்குநர் சாம் ஆண்டனின் ‘100’ படத்தில் பணியாற்றிய போது நடிகர் யோகிபாபுவுடன் எனக்கு நல்ல பழக்கம் உண்டானது. ஒரு நல்ல திரைக்கதையுடன் வா என அப்போது கூறினார். தயாரிப்பாளர்கள் A.விஸ்வநாதன் மற்றும் E.பிரவீன்குமார் என் மீது மிகப்பெரும் நம்பிக்கை கொண்டிருந்தனர். மிகவும் நேர்த்தியான அதே நேரம் ரசிகர்கள் கொண்டாடும்படியான கமர்ஷியல் திரைக்கதையை உருவாக்க நினைத்தேன்.
தமிழ் சினிமா ஏற்கனவே ஜாம்பிகளை கொண்டு படமெடுத்து விட்டது. எனவே நான் கொஞ்சம் வித்தியாசமாக நரமாமிச குழுவை மையப்படுத்தி படமெடுக்க நினைத்தேன். இந்த வகை திரைப்படங்கள் ஹாலிவுட்டில் மிகவும் புகழ்பெற்றவை. ஆனால் அங்கு ஹாரரும் திரில்லும் கலந்தே எடுப்பார்கள். ஆனால் நான் அதில் ஹியூமரை இணைத்து உருவாக்கினேன். இந்த வகை படம் தமிழ்த் திரையுலகிற்கு முற்றிலும் புதிதானது.
ப்ரியா மிகச்சிறந்த நடிகை. இப்படத்திற்கு பிறகு அவருக்கு நிறைய படங்களில் வாய்ப்பு வரும். திரைக்கதை எழுதும்போதே கல்லூரி தினேஷ் எனது மனதில் இருந்தார். நான்சி ஜெனிஃபர் ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படம் மூலம் திரைக்கு வந்திருக்கிறார். RJ சித்து அவரது நகைச்சுவைக்காக அதிகம் கொண்டாடப்பட்டிருக்கிறார். ஆனால் இப்படத்தில் முற்றிலும் அவருடைய வேறொரு முகத்தை பார்க்கலாம். VJ வினோத் திடீரென ஒரு கணத்தில் படத்திற்குள் வந்தார்.
சுனைனா அவர்கள் இப்படத்தை ஒப்புடக கொண்டதற்காக, அவருக்கு பெரும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அவரை உணர்வூபூர்வமான அல்லது ரொமான்ஸ் கதாபாத்திரங்களில் மட்டுமே பார்த்திருப்பீர்கள். ஆனால் இப்படத்தில் அவரை காமெடி கலந்த ஆக்சன் அவதாரத்தில் காண்பீர்கள்.
பிரவீன் படம் முழுதும் மிகப்பெரும் துணையாக இருந்தார். ரசிகர்கள் பொழுதுபோக்கிற்காக மிகப்பெரும் தொகையை செலவிடுகிறார்கள். இப்படம் சில மணி நேரம் அவர்களை சந்தோஷப்படுத்துவதாக இருக்கும். நாம் தியேட்டரில் படம் பார்த்து கொண்டாடி ஒரு வருடம் ஆகிவிட்டது.
பெரும் முன்னெடுப்பாக துணிந்து திரையரங்கில் படத்தை வெளியிட்டதற்கு ‘மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன்’ படங்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அப்படங்களால் தான் எங்கள் படமும் திரையரங்கில் வெளியாகவுள்ளது. சக்திவேலன் அவர்கள் எங்கள் படத்தைப் பார்த்து, படத்தின் உரிமை பெற்று பெரிய வெளியீடாக திரையிட உள்ளது எங்களுக்கு பெரும் ஆச்சர்யத்தையும் சந்தோஷத்தையும் தந்துள்ளது. நல்லிதயம் கொண்ட மனிதர். திரைப்படம் பற்றிய அபார அறிவு கொண்டவர். இங்கு அவரது இருப்பு கடவுளின் இருப்பை போன்று பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது,” என்றார்.
சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன் பேசும் போது,
“திரையுலக நண்பர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் ஊடக நண்பர்களுடனான உரையாடல், மற்றும் சந்திப்பை நிகழ்த்த முடியாமல் இருப்பது பெரும் வருத்தமிக்க விசயம். நடிகர் விஜய்யின் “மாஸ்டர்” திரைப்படம் பெரும் தடைகளை முறியடித்து சாதனை படைத்துள்ளது.
பொது முடக்க காலத்தில் யாரும் இனி திரையரங்கிற்கு வரமாட்டார்கள் என்கிற மாயையை “மாஸ்டர்” படம் உடைத்திருக்கிறது. ரசிகர்கள் கொண்டாட்டத்துடன் திரையரங்கில் படத்தை ரசிப்பது பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது.
‘மாஸ்டர்’ படத்தால் ஓடிடியில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த பல படங்கள் தற்போது பின்வாங்கிட்டன. சினிமா மீது பெரும் அர்ப்பணிப்பும் காதலும் கொண்ட இப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
புதிய வரவுகளை கொண்டு உருவாகும் இப்படத்தின் மீது பெரும் நம்பிக்கையுடன் பெரிய பட்ஜெட்டில் இப்படத்தை எடுத்துள்ளார்கள். யோகிபாபுவை வைத்து இயல்பாக எடுக்கப்படும் பட்ஜெட்டை விட பெரிய பட்ஜெட்டில் இப்படத்தை எடுத்துள்ளார்கள். இப்படத்தில் கண்டிப்பாக நல்ல லாபத்தை அடைவார்கள்.
பெரும் நம்பிக்கையுடன் இப்படத்தை தயாரித்ததற்கு அவர்களுக்கு வாழ்த்துக்கள். யோகிபாபு, கருணாகரன் முதல் படத்தில் நடித்துள்ள அனைவரும் படத்தை மிகச் சிறப்பான படமாக மாற்றியுள்ளனர். இப்படம் கண்டிப்பாக கமர்ஷியலாக பெரும் வெற்றி பெரும் இப்படத்தில் நானும் பங்கு கொண்டதில் மகிழ்ச்சி,” என்றார்.
நடிகை சுனைனா பேசுகையில்,
“இயக்குநர் டென்னிஸ் மிகவும் கடின உழைப்பாளி. இப்படத்திற்காக நிறைய ஆராய்ச்சிகள் செய்துள்ளார். படப்பிடிப்பில் நான் பாதுகாப்பாக இருக்கிறேனா என்பதை உறுதிசெய்து என்னை வெகு இயல்பாக பார்த்துகொண்டார். படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்ட போது, ஒரு நாயுடன் நடிக்கப் போவதாகக் கூறினார்கள். ஆனால் படப்பிடிப்பில் பார்த்தால் பிட்புல் இருந்தது. அதனோடு நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது. முதலில் என்னோடு நட்பாக இருக்குமா என்கிற சந்தேகம் இருந்தது. ஆனால் போகப்போக நாங்கள் நண்பர்களாக ஆகிவிட்டோம். இருவரும் இணைந்து ஆக்சன் காட்சியில் நடித்துள்ளோம். படத்தில் உழைத்தவர்களுக்கும் பெரும் துணையாக இருந்த அனைவருக்கும் எனது நன்றி,” என்றார்.
இப்படம் பிப்ரவரி 5ம் தேதி வெளியாக உள்ளது.
Tags: yogi babu, sunaina, dennis manjunath, trip