‘துப்பறிவாளன் 2’ தொடங்குவதில் சிக்கல்
17 Jun 2024
விஷாலின் ‘துப்பறிவாளன் 2’ படம் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
’ரத்னம்’ படத்துக்குப் பிறகு, ’துப்பறிவாளன் 2’ படத்தினை தொடங்க திட்டமிட்டார் விஷால். அதனை தானே இயக்கி, நடித்து, தயாரிக்க பணிகளையும் தொடங்கினார். இதற்காக இங்கிலாந்து நாட்டிற்கு சென்று படப்பிடிப்புக்கான இடங்களை தேர்வு செய்து வைத்துள்ளார்.
பல்வேறு பைனான்ஸ் சிக்கலில் சிக்கியிருந்தார் விஷால். இதனை சரி செய்வதற்காக பேச்சுவார்த்தையும் நடத்தி வந்தார். சமீபத்தில் வெளிநாடு சென்று அங்கிருக்கும் பைனான்சியர்களிடம் ‘துப்பறிவாளன் 2’ படத்துக்கான பணத்தினை ஏற்பாடு செய்தார்.
தற்போது, சம்பந்தப்பட்ட பைனான்சியர்களிடம் இருந்து எதிர்பார்த்த பணம் வரவில்லை. அவர்களோ இன்னும் 3 முதல் 6 மாதம் வரை ஆகலாம் என்று விஷாலிடம் தெரிவித்துவிட்டார்கள். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிறார் விஷால்.
தமிழகத்தில் உள்ள பைனான்சியர்கள் அனைவருமே விஷாலுக்கு பணம் கொடுக்க தயாராக இல்லை. இதனால் ‘துப்பறிவாளன் 2’ திட்டமிட்டப்படி தொடங்குவது கேள்விக்குறியாகி உள்ளது. மீண்டும் ஒரு படத்தில் நாயகனாக நடித்துவிட்டு, ‘துப்பறிவாளன் 2’ படத்தினை துவங்கலாம் என்ற ஆலோசனையில் இருக்கிறார் விஷால்.
Tags: thupparaivalan 2 , vishal