மார்ச் 31 வரை தியேட்டர்களை மூட அரசு உத்தரவு
16 Mar 2020
உலகம் முழுவதும் கொரானோ வைரஸ் தாக்குதலால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அது மேலும் பரவாமல் தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் வரும் மார்ச் 31ம் தேதி வரை அனைத்து தியேட்டர்களையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே எல்லையோரத்தில் உள்ள 16 மாவட்டங்களில் உள்ள தியேட்டர்களை மூட உத்தரவிட்டிருந்த நிலையில் இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், படப்பிடிப்புகளையும் மார்ச் 19ம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்க பெப்சி முடிவெடுத்துள்ளது. அதனால், சினிமா, டிவி தொடர், விளம்பர படப்பிடிப்புகள் நிறுத்தப்படும்.
சினிமா படப்பிடிப்புகளை நிறுத்துவதால் பெரிய பாதிப்பு இல்லை. அவற்றை வேறொரு நாளில் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், தனியார் டிவிக்களில் தினமும் 100க்கும் மேற்பட்ட டிவி தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அவற்றை ஒளிபரப்புக்கு சில நாட்களுக்கு முன்னர்தான் படப்பிடிப்பு செய்வார்கள். அதனால், டிவி தொடர்கள் ஒளிபரப்பிலும் பாதிப்பு ஏற்படலாம்.
இதன் மூலம் அவரவர் வீட்டிலேயே மக்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
Tags: corono, covid 19, tamil cinema