தமிழ்த் தலைப்புகள் எங்கே ?, இயக்குனர் வசந்தபாலன் வருத்தம்
23 Oct 2023
தமிழ் சினிமாவில், தமிழில் தலைப்புகள் வைத்து வெளியாகும் படங்களுக்கு கலைஞர் முதல்வராக இருந்த போது வரி விலக்கு கொடுத்தார். அதனால், ஆங்கிலத் தலைப்புகளை தவிர்த்து தமிழில் படத் தலைப்புகளை வைத்து வரி விலக்கு பெற்றார்கள்.
ஜிஎஸ்டி வந்த பிறகு அந்த வரி விலக்கு காணாமல் போனது. அதன்பின் ஆங்கிலத்திலும் தலைப்புகளை வைக்க ஆரம்பித்தார்கள். சமீப காலமாக ஆங்கிலத் தலைப்பு கொண்ட தமிழ்த் திரைப்படங்கள் அதிகமாக வருகிறது.
அது குறித்து இயக்குனர் வசந்தபாலன் தனது கவலையைப் பகிர்ந்து பேஸ்புக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், “தமிழ்த் திரைப்படங்களுக்கு முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் திரைப்பட தலைப்புகள் வைப்பது பெரும்பான்மையாக மாறிவிட்டது வருத்தமளிக்கிறது.
(2006 - 2011) முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்தபோது தமிழ்த்திரைப்படங்களுக்கு தமிழில் திரைப்பட தலைப்புகள் வைக்கப்பட்டால் வரி விலக்கு என்ற ஆசையைக் காட்டி தமிழைத் திரைப்படத் தலைப்புகளில் இடம்பெற பெறும் காரணமாக இருந்தார்.
அப்போது வைக்கப்பட்ட தமிழ்த்தலைப்புகள் சில
வாரணம் ஆயிரம்,
காதல் கொண்டேன்,
தசாவதாரம்,
வல்லமை தாராயோ,
அங்காடித் தெரு,
நான் கடவுள்,
கண்டேன் காதலை,
எந்திரன்,
ஆரண்ய காண்டம்,
இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்,
தென்மேற்குப் பருவக்காற்று,
நடுநிசி நாய்கள்,
யுத்தம் செய்,ஓ காதல் கண்மணி
7ஆம் அறிவு இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
அப்படி கலைஞர் அறிவிக்காவிட்டால் மேற்கண்ட தலைப்புகளில் பாதி ஆங்கில தலைப்புகளாக மாறியிருக்கும்.
கிருபானந்தவாரியரிடம் திருக்குறள் ஒப்புவித்தால் பரிசு தருவார் என்ற எண்ணத்துடன் மனப்பாடம் பண்ணிய பலநூறு மாணவர்களில் நானும் ஒருவன்.
அது போன்று தமிழில் திரைப்படத்தலைப்புகள் வைப்பதை தமிழக அரசு ஏதாவது ஒரு வகையில் திரைப்படத்துறைக்கு வலியுறுத்த வேண்டும்.
தமிழ்த்திரைப்படத்துறைக்கும் இதில் பொறுப்பு இருக்கிறது இருந்தாலும். எதையும் இங்கே வலியுறுத்தாமல் வளருவது இல்லை.தண்ணீர் ஊற்றாமல் முளைப்பதில்லை,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Tags: tamilcinema, tamil titles, vasantabalan