400 கோடி வசூல் கடந்த ‘லியோ’
23 Oct 2023
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் அக்டோபர் 19ம் தேதி வெளியான படம் ‘லியோ’. உலக அளவில் வெளியான இப்படத்திற்கு இங்கு மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. பல வெளிநாடுகளில் இதற்கு முந்தைய தமிழ்ப் படங்களின் வசூலை முறியடித்து புதிய சாதனையையும் படைத்து வருகிறது.
இந்நிலையில் இப்படம் 400 கோடி வசூலைக் கடந்துள்ளதாக ‘காம்ஸ்கோர்’ அறிவித்துள்ளது. உலக அளவிலான படங்களின் வசூலைப் பற்றி வெளியிடும் இணையதளம் இது. இத்தளத்தின் அறிவிப்பின்படி உலக பாக்ஸ் ஆபீஸ் வசூலில் 3வது இடத்தைப் பிடித்துள்ளது ‘லியோ’.
உலக அளவில் 4,85,42,000 யுஎஸ் டாலர் தொகையை இப்படம் வசூலித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்கள். இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 402 கோடி ரூபாய். நான்கு நாட்களில் 400 கோடி ரூபாய் வசூல் என்பது தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு சாதனை.
தமிழ்நாட்டில் மட்டுமே ‘லியோ’ படம் 100 கோடி வசூலைக் கடந்திருக்கும் என தியேட்டர் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். தயாரிப்பு நிறுவனம் விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடலாம்.
Tags: leo, leo review, vijay, trisha, sanjay dutt, arjun, lokesh kanagaraj, anirudh,