தொடரும் குழப்பங்கள்: மாறும் வெளியீட்டு தேதிகள்

18 Jul 2024

படப்பிடிப்பு குளறுபடிகளால் படத்தின் வெளியீட்டு தேதிகள் தொடர்ச்சியாக மாற்றப்பட்டு வருகின்றன.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அமரன்’ படம் அக்டோபர் 31-ம் தேதி தீபாவளி வெளியீடாக திரைக்கு வரும் என்று அறிவித்துள்ளார்கள். இது பலருக்கும் ஆச்சர்யம் அளித்திருக்கிறது. ஏனென்றால் கமல் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் கண்டிப்பாக ரெட் ஜெயண்ட் நிறுவனம் தான் வெளியிடும்.

அதே தேதியில் லைகா நிறுவனம் தயாரிப்பில் அஜித் நடித்து வரும் ‘விடாமுயற்சி’ படமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. லைகா நிறுவனம் படமென்றாலே ரெட் ஜெயண்ட் நிறுவனம் தான் வெளியீடு. ஒரே தேதியில் இரண்டு பெரிய படங்கள் வெளியீடு எப்படி சாத்தியமாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே போல் ‘வேட்டையன்’ மற்றும் ‘கங்குவா’ ஆகிய படங்கள் அக்டோபர் 10-ம் தேதி வெளியீடு என்பது முடிவாகியுள்ளது.

முதலில் ‘வேட்டையன்’ இன்னும் படப்பிடிப்பு இருப்பதால் அக்டோபர் 10-ம் தேதி வாய்ப்பில்லை என்று கருதினார்கள். இதனாலேயே ஞானவேல்ராஜா அளித்த பேட்டியில் “ரஜினியோடு போட்டியிடுவார்களா” என்ற தொனியில் கூறியிருந்தார். தற்போது ’வேட்டையன்’ திரைப்படம் அக்டோபர் 10-ம் தேதி வெளியீடு என்பது உறுதியாகிவிட்டது. 

முதலில் அக்டோபர் 10-ம் தேதி தான் ‘அமரன்’ வெளியீடு இருக்கும் என்று விநியோகஸ்தர்களிடம் தெரிவித்தார்கள். இறுதியில் ரெட் ஜெயண்ட் நிறுவனம் பேசி அனைத்தையும் மாற்றி இருக்கிறது. அனைத்து பண்டிகை காலங்களில் தங்களுடைய நிறுவனத்தின் சார்பில் படமொன்று வெளியாக வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கியிருக்கிறது ரெட் ஜெயண்ட் நிறுவனம்.

Tags: amaran, kanguva

Share via: