’வாரிசு’ படத்தில் காட்சிகள் நீக்கம் ஏன்? - குஷ்பு விளக்கம்

18 Jul 2024

‘வாரிசு’ படத்தில் தன்னுடைய காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டதற்கு குஷ்பு விளக்கமளித்துள்ளார்.

வம்சி இயக்கத்தில் விஜய், சரத்குமார், ராஷ்மிகா மந்தனா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘வாரிசு’. கலவையான விமர்சனங்கள் இருந்தாலும், தமிழகத்தில் வசூல் 60 கோடியைத் தாண்டியது. தில் ராஜு தயாரித்திருந்த இந்தப் படத்துக்கு தமன் இசையமைத்திருந்தார்.

‘வாரிசு’ படத்தில் விஜய்யுடன் முக்கிய கதாபாத்திரத்தில் குஷ்பு நடித்திருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால், எந்தவொரு விளம்பரப்படுத்துதல் நிகழ்ச்சியிலும் குஷ்பு கலந்துக் கொள்ளவில்லை. மேலும், படத்திலும் குஷ்புவின் காட்சிகள் எதுவுமே இல்லை. இதனால், செய்தி பொய் என்று கருதப்பட்டது.

தற்போது குஷ்பு அளித்துள்ள பேட்டியொன்றில், ‘வாரிசு’ படத்தில் தனது காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். அந்தப் பேட்டியில் குஷ்பு கூறியிருப்பதாவது:

“’வாரிசு’ படத்தில் அந்தக் குடும்பம் சாராது எனக்கென்று தனிக்கதை இருந்தது. அந்தக் கதையில் இறுதியில் இந்தக் குடும்பத்துடன் தொடர்பு உடையதாக முடியும். ரொம்ப எமோஷனலாக அழகாக இருந்தது. நான் வரும் காட்சிகள் அனைத்திலுமே விஜய் என்னுடன் இருப்பார். சில காட்சிகளில் நடிக்கும் போது நானும், விஜய்யும் நிஜத்தில் அழுதுவிட்டோம்.

படத்தின் நீளம் கருதி அனைத்தையும் நீக்கிவிட்டார்கள். இயக்குநர் வம்சி என்னை நேரில் சந்தித்து, உங்களுடைய காட்சிகள் அனைத்தும் தனியாக இருப்பதால் படத்தின் நீளம் கருதி தூக்க இருப்பதாக கூறினார். அப்போது அவரிடம் நான் இருக்கும் ஒரு காட்சி கூட படத்தில் இருக்கக் கூடாது என்றேன். அவர் கண்டிப்பாக மேடம் என காட்சிகள் அனைத்தையும் தூக்கிவிட்டார். என்னுடைய புகைப்படத்தையும் கூட படக்குழுவினர் உபயோகிக்கவில்லை”

இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்

Tags: varisu, kushbu

Share via:

Movies Released On March 15