தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் அறிக்கை வெளியிடும் சிங்காரவேலன்
17 Nov 2020
தமிழ்திரைப்படதயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு 2020 - 22ம் ஆண்டிற்கான நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க நவம்பர் 22 ஆம் தேதி சென்னையில் தேர்தல் நடக்க உள்ளது.
இத்தேர்தலில், தேனாண்டாள் ராமசாமி என்கிற முரளி தலைமையில் தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி சார்பாக சிவசக்தி பாண்டியன், R.K.சுரேஷ் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். டி.ராஜேந்தர் தலைமையில் தயாரிப்பாளர்கள் பாதுகாப்பு அணி சார்பில் P.T.செல்வகுமார், அடிதடி முருகன் உள்ளிட்ட சிலர் போட்டியிடுகின்றனர். இவர்களைத் தவிர தலைவர் பதவிக்கு சுயேச்சையாக P.L.தேனப்பன், இரண்டு துணைத் தலைவர் பதவிக்கு சுயேச்சைகளாக சிங்காரவேலன், கதிரேசன், மதியழகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்
துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் 7 வேட்பாளர்களில் அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பி வருகிறார் சுயேச்சையாகப் போட்டியிடும் சிங்காரவேலன்.
வாக்காளர்களை நேரடியாகச் சந்தித்து வரும் இவர் தனக்கு ஓட்டளிப்பதற்கு வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க மாட்டேன். அனைவரது நலனுக்காகப் போராடுவேன். முதல்முறையாகப் போட்டியிடும் தனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் எனக் கேட்பது தயாரிப்பாளர்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு அலையை ஏற்படுத்தியுள்ளது.
தயாரிப்பாளர்கள் சங்க நலனுக்காக நிழல் பட்ஜெட் ஒன்றை வரும் வெள்ளிக்கிழமை வெளியிட இருப்பதாக சிங்காரவேலன்அறிவித்துள்ளது தேர்தல் களத்தில் கடும் அதிர்வலையையும், தயாரிப்பாளர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் எந்த அணியும் இது போன்ற தேர்தல் அறிக்கையை வெளியிட்டதில்லை என்கிற வடிவத்தில் அவர் உருவாக்கி உள்ளாராம்.
தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு வருடத்திற்கு 50 கோடி அளவிற்கு வருமானம் கிடைக்ககூடிய திட்ட வரைவு அறிக்கையாக அது இருக்கும். அறிக்கை வெளியான பின்பு வாக்காளர்களின் கவனமும் சிங்காரவேலன் பக்கம் திரும்பும். சாதாரண வேட்பாளராக இரண்டு அணிகளாலும் அலட்சியமாக பார்க்கப்பட்டவர் முதல் சுற்றில் வெற்றி பெறும் வேட்பாளராக முந்துவது நிச்சயம் என்கிறது சிங்காரவேலன் ஆதரவு வட்டாரம்.
“எங்களிடம் வாக்கு கேட்க வந்தபோது அவரது அணுகுமுறை, ஆக்கபூர்வமான திட்டங்கள், அதனை அமுல்படுத்த நிதி வரவுக்கான திட்டமிடல் ஆகியவற்றை அவரிடம் கேட்ட போது எங்களுக்கு பிரமிப்பு உண்டானது. புதிய இளைஞர்களுக்கு ஒரு முறை வாய்ப்பு தருவதில் தவறில்லை,” மூத்த தயாரிப்பாளர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.
Tags: producer council, tamil cinema, singaravelan