நாயகனான உடன் தெளிவான சூரி

12 Aug 2024

சூரியிடம் உள்ள தெளிவைப் பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டு போயிருக்கிறார்கள்.

திரையுலகில் காமெடி நடிகராக அறிமுகமாகி இப்போது நடிகராக வலம் வருகிறார் சூரி. இவர் நடிப்பில் வெளியான ‘விடுதலை’ மற்றும் ‘கருடன்’ இரண்டு மாபெரும் வரவேற்பைப் பெற்ற படங்கள். தற்போது பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் ‘கொட்டுக்காளி’ ஆகஸ்ட் 23-ம் தேதி அன்று வெளியாகவுள்ளது.

’கருடன்’ வெற்றிக்குப் பிறகு சூரியிடம் பயங்கர தெளிவு வந்துவிட்டதாக கூறுகிறார்கள். ஏனென்றால் பல்வேறு முன்னணி இயக்குநர்கள், சூரியை சந்தித்து கதைகள் கூறியிருக்கிறார்கள். வேறொரு நடிகர் என்றால் அதை ஒப்புக்கொண்டு அட்வான்ஸ் தொகையை வாங்கியிருப்பார்.

ஆனால், சூரியோ அனைவரிடமும் “இப்போது 3 படங்கள் நடிக்கவுள்ளேன். இப்போதைக்கு தேதிகள் இல்லை” என்று நாசூக்காக சொல்லி அனுப்பிவிடுகிறார். அதே போல் பல்வேறு படங்களில் நடித்து பணம் சம்பாதிக்கும் எண்ணமும் சூரிக்கு இல்லை. வருடத்திற்கு 2 படங்களில் நடித்தால் போதும், அது சரியான படமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மட்டுமே சூரி இருக்கிறார் என்கிறார்கள்.

‘கொட்டுக்காளி’ திரைப்படம் தனது முந்தைய படங்கள் போல் வசூலை அள்ளாது என்பதையும் சூரி தெரிந்து வைத்துள்ளார். அதனால் இது இயக்குநர் வினோத்ராஜின் படம் என்று ஒவ்வொரு பேட்டியில் தெரிவித்து வருகிறார் என்கிறார். இந்தளவுக்கு சூரி தெளிவாக இருப்பதை பார்த்து உடனிருப்பவர்கள் ஆச்சரியத்துடன் இருக்கிறார்கள்.

Tags: soori

Share via: