‘புறநானூறு’க்கு கை கொடுக்கும் சிவகார்த்திகேயன்

01 Jul 2024

‘புறநானூறு’ படத்தில் சிவகார்த்திகேயனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் அறிவிக்கப்பட்ட படம் ‘புறநானூறு’. 2டி நிறுவனம் தயாரிக்கவிருந்த இந்தப் படம் கைவிடப்பட்டது. இது ஜிவிபிரகாஷ் இசையில் உருவாகவிருந்த 100-வது படமாகும். ‘புறநானூறு’ அறிவித்த சில நாட்களிலேயே இந்தப் படம் தொடங்க தாமதமாகும் என்று கார்த்திக் சுப்புராஜ் படத்தினை தொடங்கிவிட்டார் சூர்யா.

ஆனால், சுதா கொங்கரா ‘புறநானூறு’ படத்தினை பல்வேறு முன்னணி நடிகர்களிடம் எடுத்துச் சென்றார். சிலர் தேதிகள் இல்லாமல், சிலர் பட்ஜெட் அதிகமாக இருப்பதாலும் தயக்கம் காட்டி வந்தார்கள். இறுதியாக இதில் நடிக்க சிவகார்த்திகேயனிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் சுதா கொங்கரா.

இதுவரை சிவகார்த்திகேயன் – சுதா கொங்கரா சந்திப்பு இரண்டு முறை நடைபெற்றுள்ளது. இந்தச் சந்திப்பு சுமூகமாக இருப்பதால் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘புறநானூறு’ தொடங்கப்படும் எனக் கூறப்படுகிறது. ஆனால், தயாரிப்பாளர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

தயாரிப்பாளர் முடிவானவுடன், சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘புறநானூறு’ படத்தின் முறையான அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: sudha kongara, sivakarthikeyan

Share via: