‘அந்நியன்’ இந்தி ரீமேக்கின் நிலை? – ஷங்கர் தகவல்

03 Jul 2024

‘அந்நியன்’ இந்தி ரீமேக்கின் நிலை என்ன என்பது குறித்து இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், சதா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் 2005-ம் ஆண்டு வெளியான படம் ‘அந்நியன்’. ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படம் அனைத்து மொழிகளிலும் வெளியாகி மாபெரும் வரவேற்பினைப் பெற்றது. இந்தப் படம் இந்தியிலும் ‘அபாரிசிட்’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.

இதனிடையே, சில வருடங்களுக்கு பின்பு ஷங்கர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிக்க புதிய படமொன்று ஒப்பந்தமானது. ’அந்நியன்’ படத்தினை நேரடியாக இந்தியில் ரீமேக் செய்யவுள்ளோ என்பதை அதிகாரபூர்வமாகவும் அறிவித்தார்கள். இதனைத் தொடர்ந்து ஆஸ்கர் நிறுவனம் தங்களுடைய அனுமதியின்றி முடியாது என்ற அறிக்கையும் வெளியிட்டு பரபரப்பை உண்டாக்கியது.

அதற்குப் பிறகு, ‘அந்நியன்’ இந்தி ரீமேக் குறித்து எந்தவொரு தகவலுமே இல்லை. இதனிடையே, ‘இந்தியன் 2’ விளம்பரப்படுத்தும் நிகழ்வில் ‘அந்நியன்’ இந்தி ரீமேக் நிலை குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார் ஷங்கர். அதில் அவர் கூறியிருப்பதாவது:

“’அந்நியன்’ படத்தினை இந்தியில் ரீமேக் செய்யவிருந்தது உண்மை தான். அந்தப் படத்தின் அறிவிப்புக்குப் பிறகு பல்வேறு பெரிய பட்ஜெட் படங்கள் வந்துவிட்டன. அதனால் அதன் தயாரிப்பாளர் ‘அந்நியன்’ படத்தினை விட பெரிய பட்ஜெட் படமொன்றை பண்ணலாம் என்று கூறினார். ஆகையால் ’அந்நியன்’ இந்தி ரீமேக்கை கைவிட்டுவிட்டோம். தற்போது கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு, என்ன செய்யலாம் என முடிவு செய்யவேண்டும்”

இவ்வாறு ஷங்கர் தெரிவித்துள்ளார்.

Tags: shankar, anniyan, ranveer singh

Share via: