இசைக்கு ஒரு வாழ்த்துப்பா - இயக்குனர் சீனு ராமசாமி

02 Jun 2020

இன்று இளையராஜாவின் பிறந்தநாளுக்காக இயக்குனர் சீனு ராமசாமி ‘இசைக்கு ஒரு வாழ்த்துப்பா’...என்ற தலைப்பில் எழுதியுள்ளதாவது,

எழுபதுகளில் தொடங்கிய எங்கள் பண்ணைபுரத்துப்
பாணனே
மேற்குத்தொடர்ச்சி
மலையிலே
மிதந்து வந்த மேகமே

உமது வருகையை
எதிர்பார்த்து
இசையின் வாசல்
காத்திருந்தது

கருப்பு வெள்ளை
அன்னக்கிளியாள்
பாட்டிசைக்க
எங்கள் இதயத்தில்
வண்ணக்கிளிகள் பறந்தன

அன்று பெய்யத் தொடங்கிய மழை
இசையின் சிரபுஞ்சியானது

தவிலின் நாவுகளைப்
பேச வைத்தாய்
தமிழிசைக்கே அது
முதுகெலும்பானது

உமது மூச்சு
புல்லாங்குழலுக்கு சுவாசம்

உமது வயலின்கள்
சலனப்படமென
எங்கள் சாலைகளை
உயிர்ப்புறச் செய்தது

உமது சங்கீதம் எங்கள்
நினைவுத் தடத்தில்
பூத்த பூ
காலத்தின் பிம்பம்
கடிகாரத்தின்
பென்டுல சப்தம்
தூக்கத்திற்கு முன்
எம்மைத் தீண்டும்
அமைதித் தென்றல்

நீர் ஆர்மோனியத்தில்
விரல் வைத்தீர்
எங்கள் செங்காட்டு பூமியில்
பெயர் தெரியாச்
செடி ஒன்று
பூ பூத்தது

இசைஞானியே
வெண்பா இயற்றிய
தமிழ் ஞானியே
நீர் சுற்றியதால்
கிரிவலம்
இசைத்தட்டானது

எனதன்பு பிறந்தநாள்
வாழ்த்துக்கள்.....

என இயக்குனர் சீனு ராமசாமி வாழ்த்துப்பா பாடியுள்ளார்.

சீனு ராமசாமி இயக்கியுள்ள ‘மாமனிதன்’ படத்திற்கு இளையராஜா, யுவன்ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இப்படம் வெளியாக உள்ளது

Tags: ilaiyaraaja, seenu ramasamy

Share via: