‘கேஜிஎப் 1, கேஜிஎப் 2’ படங்களைத் தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் அடுத்து பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்க தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தயாரித்து வரும் படம் ‘சலார்’.

ஒரு ஆக்ஷன், அட்வெஞ்சர் படமாக உருவாகி வரும் இப்படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தில் ராஜமன்னார் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு நடிக்கிறார். அதற்கான போஸ்டரை இன்று படக்குழு வெளியிட்டிருக்கிறது.

ஹோம்பாலே பிலிம்ஸ், பிராஷந்த் நீல் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படமான இப்படத்தின் படப்பிடிப்பு 20 சதவீதம் நிறைவடைந்துள்ளது. பிரபாஸ் இப்படத்தில் நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப் பெரும் அளவில் உள்ளது. 

இப்படத்தின் படப்பிடிப்பு இதற்குப் பிறகு அடுத்த ஆண்டு மே மாதம்தான் நடைபெற உள்ளது. படத்தின் வெளியீடு இந்த ஆண்டு இறுதியில் அறிவிக்கப்பட உள்ளது.

இன்றைய ராஜமன்னார் போஸ்டர் குறித்து படத்தின் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பேசுகையில்,

“சலார்’ படத்தின் புதிய அப்டேட்டை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இன்று வெளியிட்டுள்ள ‘சலார்’ படத்தின் புதிய போஸ்டரில், நடிகர் ஜெகபதிபாபு ஏற்றிருக்கும் ராஜமன்னார் என்ற கதாபாத்திரத்தின் தோற்றம் மிரட்டலாக அமைந்திருக்கிறது. இது ரசிகர்களுக்கு ராஜமன்னார் கதாபாத்திரம் குறித்த கற்பனை கலந்த எதிர்பார்ப்பை உருவாக்கும். 

இப்படத்தின் திரைக்கதையில் பெரிய மாற்றத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்தும் இந்த கதாபாத்திரம் குறித்த அறிவிப்பை போஸ்டராக வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்,” என்றார்.

இயக்குனர் பிரசாந்த் நீல் பேசுகையில்,  ‘சலார்’ படத்தில் இடம்பெற்றுள்ள மேலும் சில கதாபாத்திரங்களைப் பற்றிய லுக், படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் தருணங்களில் அவ்வப்போது வெளியிடப்படும்,' என்றார்.