எஸ் ஜானகி பேத்தியின் வேண்டுகோள்
24 Jan 2026
இந்தியத் திரையுலகத்தின் மூத்த பின்னணிப் பாடகி எஸ் ஜானகி. இந்திய மொழிகளில் பலவற்றில் ஆயிரக்கணக்கானப் பாடல்களைப் பாடியுள்ளார்.
அவரது ஒரே மகன் முரளிகிருஷ்ணா சில தினங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவு குறித்து சில ஊடகங்களில் தனிப்பட்ட சில விஷயங்களை தவறுதலாக வெளியிட்டுள்ளதாகத் தெரிகிறது. அது குறித்து அவரது மகள் அப்சரா வைத்யுலா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கை....
பிரபல பின்னணி பாடகி ஸ்ரீமதி எஸ். ஜானகி அவர்களின் புதல்வனும் எனது தந்தையுமான ஶ்ரீ வைத்யுலா முரளி கிருஷ்ணா அவர்கள் நீண்ட கால சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த ஜனவரி 22, 2026 அன்று அதிகாலை 12:55 மணிக்கு மைசூரில் இறைவனடி அடைந்தார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது தந்தை அர்ப்பணிப்புள்ள மகனாக ஸ்ரீமதி ஜானகி அவர்களுக்கு தொடர்ந்து பக்க பலமாகவும் உறுதுணையாகவும் தனது இறுதி நாட்கள் வரை இருந்து வந்தார். அவர் தன் தாயின் வழியில் ஒரு திறமையான இசைக்கலைஞராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இறுதி மூச்சு அவரது குடும்பத்தினர் மற்றும் நலம் விரும்பிகள் சூழ்ந்திருக்கப் பிரிந்தது.
அவரது இறுதிச் சடங்குகள் குடும்பத்தினர் முன்னிலையில் நடத்தப்பட்டன.
அவரது மறைவு எங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியிருப்பதால் எங்கள் உணர்வுகளைப் புரிந்து தனிமை தரக் கோருகிறோம். திருமதி எஸ் ஜானகி அவர்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் அரவணைப்பில் நலமுடன் இருக்கிறார்.
எங்கள் குடும்ப வட்டத்திற்கு வெளியே உள்ள தனிநபர்களால் பரப்பப்படும் சில தேவையற்ற தீங்கிழைக்கும் வதந்திகள் குறித்து குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற தகவல்கள் உண்மையல்ல என வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். இது போன்ற ஊகங்கள் மற்றும் சரிபார்க்கப்படாத செய்திகளைத் தவிர்க்குமாறு பொதுமக்களையும் ஊடகங்களையும் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் விளக்கங்களுக்கு, ஊடக உறுப்பினர்கள் என்னை 8618828502 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
உங்கள் புரிதலுக்கு நன்றி.
வணக்கம்
அப்சரா வைத்யுலா
(எஸ் ஜானகி அவர்களின் பேத்தி)
Tags: s janaki
