விஜய் தேவரகொன்டா, ரஷ்மிகா மந்தனா நடிக்கும் ‘ரணபலி’

27 Jan 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், ராகுல் சங்க்ரித்யன் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிக்க, இதுவரை ‘VD 14’ என அழைக்கப்பட்டு வந்த படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு ’ரணபலி’ என குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 11, 2026 அன்று வெளியாகிறது.

வலிமையான மற்றும் அதிரடியான  புது தோற்றத்தில் விஜய் தேவரகொண்டா ’ரணபலி’ கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ராஷ்மிகா மந்தனா ’ஜெயம்மா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘தி மம்மி’ படத்தின் மூலம் பிரபலமான அர்னால்ட் வோஸ்லூ,  சர் தியோடோர் ஹெக்டர் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் தயாரிக்கும் ’ரணபலி’ திரைப்படத்தை டி-சீரிஸ் வழங்குகிறது. பிரிட்டிஷ் காலகட்டத்தில் உருவாக்கப்படும் இந்தப் படம் பீரியட் ஆக்‌ஷன் டிராமாவாக உருவாகியுள்ளது.

‘ரணபலி’ திரைப்படம் 1850களில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. இந்த சம்பவங்களை நீங்கள் வரலாற்று புத்தகங்களில் காண முடியாது. 1850–1900 காலகட்டத்தில் நிகழ்ந்த பல உண்மைச் சம்பவங்கள் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் திட்டமிட்டு வரலாற்றில் தவறாக சித்தரிக்கப்பட்டது. அந்த சம்பவங்கள் மற்றும் தவறாக பழி சுமத்தப்பட்ட மனிதர்கள் ஆகியவற்றைப் பற்றி இந்தப் படம் பேசும்.

இது ஒரு வாழ்க்கை வரலாற்றுப் படம் அல்ல. பாடநூலில் இடம் பெற்ற வரலாற்றை மீண்டும் சொல்லும் முயற்சியும் அல்ல. பல உண்மைச் சான்றுகள், வாய்மொழி வரலாறுகள் மற்றும் காலப்போக்கில் ஒடுக்கப்பட்ட ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு மறைக்கப்பட்ட காலத்தை சினிமா வடிவில் மீள் உருவாக்கம் செய்வது தான் ‘ரணபலி’ என்கிறது படக்குழு.

‘டியர் காம்ரேட்’, ‘குஷி’ ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு விஜய் தேவரகொண்டா மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படம் இது. ’டாக்ஸிவாலா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் தேவரகொண்டா மற்றும் இயக்குநர் ராகுல் சங்க்ரித்யன் இணையும் இரண்டாவது படம். மேலும், ‘கீதா கோவிந்தம்’ மற்றும் ‘டியர் காம்ரேட்’ படங்களுக்குப் பிறகு விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா இருவரும் ஜோடி சேரும் மூன்றாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: ranabali, vijay devarakonda, rashmika mandanna

Share via: