நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடப் போவதில்லை எனபதை விளக்கமாக கடந்த மாதம் அறிவித்துவிட்டார்.
இருப்பினும் ஒரு தரப்பு ரசிகர்கள் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என கோரிக்கை வைத்து போராட்டத்தை நடத்தினர். அந்த போராட்டம் குறித்து கவலை அடைந்துள்ள ரஜினிகாந்த் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றின் மூலம் தன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார்.
அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,
“என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கு...
நான் அரசியலுக்கு வராதது பற்றி, மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சிலர் ரஜினி மக்கள் மன்றப் பதவியில், பொறுப்பில் இருந்தும், மன்றத்தில் இருந்து நீக்கப்பட்ட பலருடன் சேர்ந்து சென்னையில் ஒரு நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார்கள்.
கட்டுப்பாட்டுடனும், கண்ணியத்துடனும் நடத்தியதற்கு என்னுடைய பாராட்டுகள். இருந்தாலும் தலைமையின் உத்தரவை மீறி நடத்தியது வேதனை அளிக்கிறது.
தலைமையின் வேண்டுகோளை ஏற்று இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாத மக்கள் மன்றத்தில் இருக்கும் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி.
நான் ஏன் இப்பொழுது அரசியலுக்கு வர முடியவில்லை என்பதற்கான காரணங்களை ஏற்கெனவே விரிவாகக் கூறியுள்ளேன்.
நான் என் முடிவைக் கூறிவிட்டேன்.
தயவுசெய்து இதற்குப் பிறகும் நான் அரசியலுக்கு வர வேண்டும் என்று யாரும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தி என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்,“.
ரஜினிகாந்தின் இந்த பணிவான வேண்டுகோள் அவர் மீது உண்மையிலேயே அக்கறை கொண்ட பல ரசிகர்களை வருத்தமடைய வைத்துள்ளது. தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டுதான் அவர் அரசியலுக்கு வரவில்லை என்பதை தெள்ளத் தெளிவாகக் கூறிவிட்டார்.
சில ரசிகர்களின் போராட்டம் அவருக்கு மேலும் மன வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதின் வெளிப்பாடுதான் இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. இனிமேலும் அவரை சங்கடப்படுத்தாமல் அவர் நலனை கருத்தில் கொண்டு ரசிகர்கள் அமைதியாக இருக்க வேண்டும் என பலர் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.