100 கோடி வசூலை கடந்தது ‘ராயன்’
31 Jul 2024
100 கோடி வசூலை கடந்து சாதனை புரிந்துள்ளது ‘ராயன்’ திரைப்படம்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகியுள்ள படம் ‘ராயன்’. தனுஷ் இயக்கத்தில் தனுஷ், எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். தணிக்கையில் ஏ சான்றிதழ் பெற்றதால் பலருக்கும் இந்தப் படத்தின் வசூல் எப்படியிருக்கும் என்ற தயக்கம் இருந்தது.
தமிழகத்தின் மொத்த வசூலில் முதல் நாள் 12 கோடி, 2-ம் நாள் 13 கோடி, 3 நாள் 12 கோடி என தொடர்ச்சியாக வசூலைக் குவித்தது. இதனால் தனுஷ் பெரும் உற்சாகமானார். மேலும் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் ‘ராயன்’ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
தற்போது 5 நாட்களில் மொத்த வசூலில் 100 கோடியை கடந்திருக்கிறது ‘ராயன்’. தமிழில் ’ஏ’ சான்றிதழ் பெற்ற ஒரு படம் 100 கோடி வசூலை கடந்திருப்பது இதுவே முதல் முறை. இந்த வசூலால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
’ராயன்’ பார்த்துவிட்டு முதலில் சிறு அதிருப்தியில் இருந்தது சன் பிக்சர்ஸ் நிறுவனம். இப்போது படத்தின் வசூல் வெற்றியால் பெரும் குஷியில் இருக்கிறது.
Tags: raayan, dhanush